Thursday, June 27, 2013

கொடுத்தேன்

8ரூ குளிர்பாணத்திற்கு 10ரூ கொடுத்தேன்
15ரூ தண்ணி பாட்டிலுக்கு 20ரூ கொடுத்தேன்
கறுவேப்பிலைக்கு கூட 3ரூ கொடுத்தேன்
1கரண்டி மாவில் செய்த‌ தோசைக்கு 40ரூ கொடுத்தேன்
3மணி நேர சினிமாவுக்கு 300ரூ கொடுத்தேன்
பைக்கில் சென்ற கொடுமைக்கு 50ரூ கொடுத்தேன்
வாடகை வீட்டிற்கு சில‌ஆயிரம்  கொடுத்தேன்
அது இது என வீடு கட்டும் பில்டருக்கு எது வென புரியாமல் பல ஆயிரங்கள் கொடுத்தேன்


கொடுத்தேன் கொடுத்தேன் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறேன்...

சில்லறை முதல் ஆயிரங்கள் வரை....

உழைத்து நான் நிரப்பும் பையில்
ஓட்டைகள் தான் எத்தனை...

ஒட்டைகளை அடைக்காமல் இன்னும்
பையை மட்டும் நிரப்பிக் கொண்டிருக்கிறேன்

Friday, June 14, 2013

கனவில் கலர் வருமா

நண்பர் மதி எழுதிய முதல் போணி நூலில் "கனவில் கலர் வருமா" என்று ஒரு சிறுகதை....ஒரு அறிவியல் புத்தகத்தில் (http://en.wikipedia.org/wiki/The_Interpretation_of_Dreams) கனவில் வண்ணங்கள் வராது என்று படிக்கிறார்....அதனை பற்றிய சிந்தனைகள் அவர் மனதில் பதிந்துவிட ...சில நாட்களுக்கு பிறகு அவர் கனவில் , அவருக்கு பிடித்த பெண்  ஒருத்தி கனவில் வருகிறாள்..அவரது அம்மாவிடம் ,இவள் தான் என் காதலி என்று அறிமுகம் செய்கிறார்...கனவு கலைகிறது....கனவில் வந்த அம்மாவின் நெற்றி குங்குமம்,காதலியின் பச்சை சுடிதார் என்ற வண்ணங்கள் யாவும் அவர் ஞாபகத்தில் வர..ஒரு வேளை கலர் (பெண்) வந்தால் கனவில் கலர் வருமோ ...அதோடு வண்ணங்கள் பற்றின நினைப்பு தான் அவ்வாறு செய்ததோ  என்று முடிக்கிறார்...

இதனை படித்ததிலிருந்து..எனக்கு ஒரு குற்ற உணர்வு..கனவில்லா தூக்கமே எனக்கு மிகவும் குறைவு..அதுவும் வகுப்பில் உறங்கும் பழக்கம் 11ம் வகுப்பில் துவங்கியது..அந்த‌ பழக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து எனது கல்லூரியில் "வகுப்பில் உறங்கும் கலை"க்கு தனியாக பட்டம் பெற்றிருக்கிறேன்...வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்த துவங்கிய 5வது நிமிடத்தில் உறங்கி ..அதே வாத்தியார் என் கனவில் வந்து நடத்திய‌ பாடத்தினை நோட்ஸ் எடுத்துள்ளேன்....இந்த சாதனையை கின்னஸ் ரிகார்டில் பதிய முடியமா என்று தெரியவில்லை ஆனால் இது போன்று கனவு காண்பதில் பல சாதனைகள் செய்த எனக்கு..கனவில் கலர் வருமா?என்ற‌ கேள்வி ஓர் பெரிய உறுத்தலாகவே இருந்தது...

கிட்டத்தட்ட 6 மாதத்திற்கு பிறகு இந்த‌ கேள்விக்கு விடையாக ஓர் கனவு வந்தது இரு தினங்களுக்கு முன்பு....

அன்று...காலையில் 6.30க்கு எழுந்தேன்..சே..6.30 தான் ஆகுது ஒரு 7 மணி வரைக்கும் தூங்கலாம் என்று மீண்டும் உறங்க....கனவில்....

தஞ்சையில் என் வீட்டு பலா மரத்தில் ஏறி , ஓர் பலாப் பழத்தை பறிக்கிறேன்.அப்பொழுது அருகிலிருந்த மற்றொரு பழம் கீழே விழுந்து உடைகிறது..அதன் சுளைகள் சில‌ மண்ணில் விழுகிறது...சரி அதை கழுவிக்கொள்ளலாம் என்று எடுத்துக் கொள்கிறேன்..வீட்டிற்கு வந்து நான் பறித்த பலாவை அறுக்கிறேன்...சுளைகள் அனைத்தும் பச்சை நிறத்தில் கொய்யா வடிவத்தில் இருந்தது..என்னடா ஆச்சரியமா இருக்கு என்று அருகிலிருந்த அம்மாவிடம் கேட்கிறேன்..அம்மா எந்தவித ஆச்சரியமும் இல்லாமல் ,"சாப்பிடு நல்லா இருக்கும்" என்கிறாள்.அதன் தோல் கொஞ்சம் கடினமாக இருப்பதை உணர்கிறேன்..."அம்மா, 50 சுளை எடுத்து வை..ஊருக்கு எடுத்திட்டு போறேன்.."என்று சொல்கிறேன்....

எழுகிறேன்...கனவின் பிம்பங்கள் சிதற....அதற்குள் அனைத்தையும் நினைவுக்குள் கொண்டு வந்தேன்...

கனவில் கீழே விழுந்த மஞ்சள்  நிற‌ பலா சுளைகளும் ,விழுந்தபோது சுளைக‌ளில் ஒட்டிய மண்ணும் , ஆச்சரியம் தந்த பச்சை நிற சுளைகளும் உறுதி செய்தது கனவில் கலர் வருமென்று....கலா மட்டுமில்லை பலா வந்தால் கூட கனவுல கலர் வரும் என்று எதுகை மோனையா ஒரு facebook status யோசிக்க...

சரி...என் கனவின் அடிப்படையாக இருந்தது என்ன என்று சற்று எனது யோசனையை மாற்றினேன்

1.உற‌ங்குவதற்கு முன்  , எஸ்.ரா வின் "எனக்கு ஏன் கனவு வருது" என்ற சிறுவர் நூல் ஒன்றை படித்தேன்
2.ஊரில் என் வீட்டில் பலா காய்த்து, அப்பா அதனை அறுத்திருந்தார்
3.அடுத்த முறை அலுவலக நண்பர்களுக்கு பலா சுளை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருந்தது
4.முதல் நாள் வீட்டில் சமைக்கும் போது செளசெள சாம்பார் செய்கிறேன்..அதற்கு குக்கரில் எத்தனை விசில் வைக்க வேண்டும் என்று தெரியவில்லை..1 விசிலில் நிறுத்தி எடுக்க..அதனை தொட்டு பார்த்தேன்...கொஞ்சம் கடினமாக இருந்தது
5.சென்ற முறை ஊருக்கு சென்ற போது , என் மகளுக்கு கொய்யா பழம் பறித்து விளையாட தந்தேன்...

இதை பற்றி அலுவலக நண்பன் ஒருவனிடம் தேனீர் இடைவேளையில் சொல்ல..

"அண்ண,நீங்க கண்டது கனவேயில்லை அது உங்க subconscious mind..."என்று அவன் எனக்கு ஏதோ பதில் சொல்ல...

"தம்பி ..இத்தனை வருசமா கனவு காண்றோம் எங்களுக்கு தெரியாதா..வா..ரெண்டு பேரும் ரொம்ப நேரமா மொக்கை போட்டது போதும்..போய் பொழ‌ப்ப பாப்போம் வா.."என்று கிளம்ப...

எனக்குள் மீண்டும் ஓர் புது கேள்வி எழும்பியது...அப்போ நான் கண்டது கனவேயில்லையா..?