Thursday, November 20, 2014

சிறுவர் இலக்கியம்

(சஞ்சிகை இதழில் வெளியானது)

சமூக வலைத்தளங்களில் நடக்கும் இலக்கிய சண்டைகளின் மத்தியில் அவ்வப்போது ஒருவரின் குரல் சிறுவர் இலக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறது. சென்ற ஆண்டு ஆனந்தவிகடனின் சிறுவர் இலக்கிய விருதையும் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் குழந்தை இலக்கியத்திற்கான விருதையும் வாங்கிய எழுத்தாளர் விழியனின் குரல் தான் அது. ஆங்கிலத்தில் சிறுவர்களுக்கு விதவிதமாக‌ கிடைக்கும் புத்தகங்கள் போல தமிழிலும் கிடைக்க வேண்டும் என்பதே அவரது ஆசை.

அவரது சின்ன சின்ன ஆசைகள் தான் இன்று எழுத்துக்களாக உருமாறி “மாகடிகாரம்” , “டாலும் ழீயும்”, “பென்சில்களின் அட்டகாசம்”, “வளையல்கள் அடித்த லூட்டி”, “அந்தரத்தில் நடந்த அபூர்வ கதை” என்ற குட்டிஸ் புத்தகங்களாக கிடைக்கின்றன.
சென்ற தலைமுறையிலிருந்தே பாட்டி கதைகள் மெல்ல மெல்ல மறைய துவங்கிவிட்டன. இன்று ஒரு குழந்தையிடம் “ஏ…எனக்கு ஒரு கதை சொல்லேன்..” என்று கேட்டால் நமக்கு கிடைப்பது மெளனம் மட்டுமே. அதுவே ஒரு சீரியலின் கதையையோ அல்லது ஒரு திரைப்பாடலையோ அவர்களால் முழுவதுமாக சொல்ல முடிகிறது. ஏனென்றால் அவர்களுக்கு தீனியாக இருப்பது தொ(ல்)லைக்காட்சிகள் மட்டும் தான். இந்த நிலை பெற்றோர்களுக்கும் தான் நீதி கதைகள் தாண்டி புது கதைகளை உருவாக்குவது சிரமம் என்பதை மறுப்பதற்கல்ல. எழுத்தாளர் விழியன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அடிக்கடி சொல்வது இது தான். குழந்தைகளிடம் அதிகம் உரையாட வேண்டும். அதற்கு ஒவ்வொரு பெற்றோரும் கதை சொல்லியாக மாறிட வேண்டும். அதற்கு முதலில் நல்ல வாசகனாக மாறிட வேண்டும். இது தான் வழி என்பதல்ல. இதுவும் ஒரு வழி என்பது தான். அப்படி வாசகனாக மாறி நான் படித்த சில சிறுவர்கள் புத்தகங்களில் ஒன்று தான் “மாகடிகாரம்”.
maakadikaaram_bookஉலகத்தை காக்க ஏதோ ஒரு மூலையில் ஒரு மிகப்பெரிய கடிகாரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் அடுத்த காவலனாக கதையின் நாயகன் தேர்ந்தெடுக்கப்படுகிறான். அவன் நீர்மூழ்கிப் கப்பல் துணைக்கொண்டு அந்த இடத்தினை அடைகிறான். அங்கு அவனுக்கு அந்த கடிகாரம் தான் உலகத்தினை இயக்குவதாக சொல்லப்படுகிறது. அதற்கு சாவிக் கொடுக்கும் பொறுப்பு நாயகன் கையில் வருகிறது. அவன் பொறுப்பினை தவறும் பட்சத்தின் உலகம் அழிந்து விடும் என மாயன் காலண்டர் குறிப்புடன் கதை நகர்கிறது. மகாகடிகாரத்தின் ரகசியத்தினை நாயகன் உடைப்பதுடன் கதை முடிகிறது. மெல்லிய கதையாக இருந்தாலும் சிறுவர்களுக்கு மெல்ல மெல்ல அறிவியல் சார்ந்த அறிமுகங்கள் ஆங்காங்கே கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
DSC00431_thumb2கதையின் துவக்கத்தில் ஏலகிரி மலையில் நாயகன் அப்பாவுடனும் தங்கையுடனும் செல்வதாக வரும்.அந்த வரியை படித்த உடனே நமது முதலாவது மலைப் பயணம் கண்டிப்பாக நினைவில் வரும். நீர்மூழ்கி கப்பல், கதாப்பாத்திரங்கள், மகாகடிகாராத்தின் அமைப்பு என ஒவ்வொன்றையும் நம் மனது கற்பனை செய்து கொள்வதையும் ஒரு கட்டத்தில் அந்த சிறுவனாக நம்மை நாமே உணர்வதும் இந்த புத்தகத்தின் வெற்றி என சொல்லலாம். நமது கற்பனா சக்திகளை இந்த புத்தகம் தூண்டிவிடும் பட்சத்தில் சிறுவர்களது கற்பனா சக்திகளை கண்டிப்பாக தூண்டும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
நாளைய‌ கண்டுப்பிடிப்புகளுக்கும், வளமான சமுதாயத்துக்கும் வித்தாக அமைய போவது குழந்தைகளின் கற்பனா சக்திகளே. அவர்களின் கற்பனா சக்திகள் மென்மேலும் வளர இனி பெற்றோர்கள் கதை சொல்லியாக மாறிட வேண்டும். அதற்கு கண்டிப்பாக விழியனின் புத்தகங்கள் உதவியாக இருக்கும்.

Mad House

(மதிப்புரை தளத்தில் வெளியானது) 

“சரித்திரம் என்றால் தேதிகள் என்று என் சிறு வயது ஆசிரியர் என்னை நினைக்கவைத்தார்.அலெக்சாந்தரில் இருந்து ஆதித்த சோழன் வரைக்கும் தேதிகளை நான் மனனம் செய்ய வேண்டும்.ஒரு பாடத்தை எவ்வளவுக்கு வெறுக்கமுடியுமோ அவ்வளவுக்கு சரித்திரப் பாடத்தை வெறுத்தேன்.
வரலாறுதான் மனிதகளின் கதை என்பதையும், மனிதர்களின் கதைதான் இலக்கியம் என்பதையும் அந்த ஆசிரியர் எனக்குச் சொல்லிதர மறந்து விட்டார்.”
                                                                                                              -அ.முத்துலிங்கம்

“அப்பாடா இனிமே வரலாறு பக்கமே போக தேவையில்லை”, பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்ததும் எனக்கு மனத்தில் தோன்றியது இதுதான். அந்த அளவிற்கு வரலாற்றுடன் எனக்குத் தகராறு. சமீபகாலமாக வாசிக்கும் பழக்கம் மெல்ல மெல்ல வளரத் துவங்கியது. அதுவே என்னை வரலாற்றின் பக்கம் இழுத்தும் சென்றது. ஒரு புத்தகத்துடனான உறவு அத்துடம் முடிவதேயில்லை. ஒரு புத்தகம் மற்றொரு புத்தகத்தை அறிமுகம் செய்து கொண்டேயிருக்கிறது.வெட்டுப்புலி நாவல் பெரியார் பற்றின நிகழ்வுகளை அறிய வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டியது. அதை தேடும்போது பகத் சிங்கின் “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” அறிமுகமானது. பகத் சிங்கை தேடும் போது காந்தி நினைத்திருந்தால் பகத் சிங்கை தூக்கிலிருந்து காப்பாற்றி இருக்கலாம் என்ற செய்தி சுதந்திர போராட்டம் பற்றின நிகழ்வுகளை முழுதும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆர்வம் மட்டும் இருந்தால் போதும், சில புத்தகங்களை நாம் தேடிப்பிடிக்க வேண்டிய அவசியமேயில்லை, அதுவே நம்மைத் தேடி பிடித்து ஓடிவரும். அப்படி மதிப்புரை தளத்தின் மூலம் என் வாசல் தேடி வந்த புத்தகம் தான் மருதனின் “இந்தியப் பிரிவினை”.
பிரிவினையால் ஏற்பட்ட பாதிப்புகள் என்னென்ன எவ்வாறு பிரிக்கப்பட்டது மற்றும் பிரிவினையில் ஜின்னா, நேரு, மவுண்ட் பேட்டன் போன்ற தலைவர்களின் நிலை என மூன்று தளங்களில் இந்த புத்தகம் பயணிக்கிறது.
அமிர்தசரஸ் ரயில் நிலையம் : 1947 ல் அமிர்தசரஸிற்கு வந்து சேரும் ரயிலில் துவங்குகிறது இந்தப் புத்தகம். தனது உறவினர்களுக்காக காத்துக்கிடக்கும் மக்களின் நிலையினை நினைத்து காந்தியிடமும் ஜின்னாவிடமும் நேருவிடமும் கற்பனையில் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த ஸ்டேசன் மாஸ்டருக்கு வந்து சேர்ந்த ரயிலின் அமைதி நிலைக்கொள்ளச் செய்கிறது. ஏனென்றால் அந்த ரயில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்தது வெறும் பிணங்களை மட்டும்தான். சிறுகதை போல் இருக்கும் அந்தக் கட்டுரையின் தலைப்பே “கல்லறை” தான். இரு தரப்பிலும் எண்ணற்ற இழப்புகள். காரணம் மதம், மதத்தின் பெயரால் ஏற்பட்ட பிரிவினை. “ஒரு மதத்தை இழிவுபடுத்த வேண்டுமென்றால் அந்த மதத்தைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தினால் போதும்” என்ற வரியை படிக்கும் போது நம் மனதிற்குள் எழும் கேள்விகளுக்கு பதில் எங்கு தேடியும் கிடைக்கப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.
Mad House: இதுதான் இந்தியப் பிரிவினையின் பொறுப்பை மவுண்ட்பேட்டனிடம் ஒப்படைக்கும்போது சொல்லப்பட்ட வார்த்தைகள். அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் துவங்கிய புத்தகம் மெல்ல மெல்ல பிரிவினையின் ஆரம்பப் புள்ளிக்கு நம்மை இழுத்துச் செல்கிறது. காங்கிரஸ் எவ்வாறு எதற்காகத் துவங்கப்பட்டது, எந்த சூழ்நிலையில் எப்பொழுது யாரால் பாகிஸ்தான் எனும் தனி நாடு கோரிக்கை வைக்கப்பட்டது, ஜின்னா ஏன் தனது கோரிக்கையில் உறுதியாக இருந்தார் என நகர்கிறது. ஒரு கட்டத்தில் காந்தி “ஏன் இரண்டாக பிரிக்க வேண்டும், முஸ்லீன் லீகிடமே இந்தியாவை ஒப்படைத்துவிடலாம்” என்றாராம். காந்திக்கு பிரிப்பதில் கடைசிவரை விருப்பம் இருந்ததேயில்லை. பிரிவு என்ற முடிவு வந்ததும் இங்கு கலவரங்கள் வெடிக்கும் என்ற பயம் அவருக்கு மட்டுமே இருந்தது. ஏனோ ஜின்னாவிற்கும் நேருவிற்கும் அப்படி தோன்றவில்லை. இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்க இந்த இருநிலங்களையும், கலாசாரத்தையும் அறியாத ஒருவரே நியமிக்கப்பட்டார். அவருக்குக் கொடுக்கப்பட்ட கெடு ஆகஸ்ட் 15. இன்னும் இரண்டு மாதங்கள் கூட இல்லாத நிலையில் தனது வேலை சுலபமானது அல்ல என்பதை உணர்ந்து மவுண்ட்பேட்டனிடம் பேசிப் பார்த்தார். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. நேருவிடமும் ஜின்னாவிடமும் பேச முடிவு செய்தார். இருவரிடமும் அவர் கேட்ட கேள்வி : “இது உங்கள் தேசம், உங்கள் மக்கள். உங்களுக்கு தேதி முக்கியமா அல்லது தவறுகள் இல்லாத பிரிவினையா?” அதற்கு இருவரிடமிருந்தும் கிடைத்த பதில் “தேதி”. பிரிவினை என்பது வெறும் நிலத்தோடு முடியவில்லை. சொத்துக்களும் பிரிக்கப்பட்டிருக்கிறது. சொத்துக்கள் என்றால் கசானாவிலுள்ள துட்டு முதல் அரசு அலுவலகத்திலுள்ள பேனா, மேசை, உடைந்த நாற்காலி, டாய்லட் கப் வரை. தனித்தனியாக அனைத்தின் பட்டியலும் உருவாக்கப் பட்டிருக்கிறது. நூலக புத்தகங்கள் கூட பாகம் 1 இங்கே பாகம் 2 அங்கே என பிரிக்கப்பட்டதாம். இதைப் படிக்கும் போது சிறுவயதில் நண்பருடனோ, சகோதரரிடமோ போட்ட சண்டை தான் நினைவிற்கு வந்தது. ஆனால் உண்மையில் வேறு வழியில்லாமல் இப்படி நடந்தது என்பதை புரிந்துகொண்டாலும், இந்த மாதிரி விஷயங்கள் அனைத்தும் சிறுபிள்ளைத்தனமானது என்றே தோன்றுகிறது.
1947 ஆகஸ்ட் 15, இந்த நாள் எப்படி தீர்மானிக்கப்பட்டது? நமக்கு ஏன் இரவில் சுதந்திரம் கிடைத்தது? சுதந்திரத்தின் போது பூனேவில் சுவஸ்திக் சின்னம் உள்ள‌ கொடி ஒன்று ஏற்றப்பட்டது எதனால்? முஸ்லீம் லீக் போல இந்துக்களுக்கு ஒரு அமைப்பு ஏற்பட்டு அதுவே பின்னாளில் பிரிந்து கடைசியில் காந்தியைக் கொல்ல கோட்சே வந்தது என தகவல்களின் தொகுப்பாக நகர்கிறது. “என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்பட வேன்டும்” என காந்தி சொன்னார். ஆனால் ஜின்னாவோ குடும்பத்திலுள்ள சகோதரர்களின் பாகப் பிரிவு போல தான் இந்தப் பிரிவு என நினைத்திருக்கிறார். நேருவோ ஒரு படி மேல போய் பிரிந்தபிறகு இணையவும் வாய்ப்புள்ளதாக நினைத்திருக்கிறார். காந்தியைத் தவிர ஜின்னாவும் நேருவும் கலவரங்களை சிரிதும் எதிர்பார்க்கவில்லை என்றே சொல்லலாம். கலவரங்கள் எல்லை மீறிப் போகும் போது சுதந்திரமே தேவையில்லை என்ற மனநிலையில் நேரு இருந்தாராம். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா சந்தித்த முதல் போர் பாகிஸ்தானால்தான். அந்தப் போரில் இந்தியா வெற்றி அடைகிறது. அந்த சூழ்நிலையில் இந்தியா பாகிஸ்தானிற்கு கொடுக்க வேண்டிய மீதி பணத்தை பற்றி யோசிக்க, காந்தி மட்டும் அதை கொடுக்க வேண்டும் என சொல்கிறார். இந்த மனப்பான்மை காந்தியைத் தவிர வேறு எவருக்கும் வராது எனத் தோன்றுகிறது. ஆனால் இது சரியானதா என்பது வாதத்திற்கு உரியதே. இந்தியாவில் சில சமஸ்தானங்களும் இருந்திருக்கிறது. அவைகளை இந்தியாவுடன் இணைக்கவும் ஏகப்பட்ட நடவடிக்கைகள் நடந்து இருக்கிறது. படேல் தான் அதை முன்நின்று நடத்தி இருக்கிறார். ஆர். எஸ். எஸ் வளர்ச்சி, கோத்ரா ரயில் சம்பவம், பாபர் மசூதி இடிப்பு, ஜின்னாவிற்குப் பிறகு பாகிஸ்தானின் நிலைபாடு என அனைத்தைப் பற்றின அறிமுகத்துடன் முடிகிறது இந்தப் புத்தகம்.
சுதந்திரம் அடைந்து விட்டோம், காந்தி, ஜின்னா, நேரு அனைவரின் காலம் முடிந்து விட்டது. ஆனால் மத வெறியால் துவங்கிய கலவரத்தின் காலம் மட்டும் இன்னும் முடிந்தபாடில்லை.
வாசிக்கும் போது எனக்கு சில இடங்களில் காலங்கள் பற்றிய குழப்பங்கள் ஏற்பட்டது. காலங்களின் வரிசையில் சம்பவங்கள் அடுக்கப்படாமல் இருந்ததால் இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். சுதந்திரப் போராட்டம் பற்றிய நிகழ்வுகள் பள்ளிப் பாடங்கள் மூலமாகவும் சில‌ திரைப்படங்களின் மூலமாகவும் மட்டுமே நம்மிடம் பதிந்திருக்கிறது. நம்மை சுற்றி தகவல்கள் நிறைந்திருக்கிறது, அதைத் தேடும் ஆர்வம் மட்டும் தான் இங்கு குறைவாக இருக்கிறது, அப்படி ஆர்வம் ஏற்படும் போது அதைத் தூண்டிக்கொண்டே இருத்தல் வேண்டும் பசியைத் தூண்டும் starters போல. அப்படி எனக்கு அமைந்த starters தான் இந்தப் புத்தகம்.

பயணம்



பேருந்து கிளம்பியும் அவனது தொல்லை எல்லையின்றி போய் கொண்டிருக்கிறது. அவன் நிஜமாகவே போனில் பேசுகிறானா என்ற சந்தேகம் கூட அந்த பேருந்திலுள்ள அனைவருக்கும் இருந்தது. போக்குவரத்து நெரிசல் வதைப்பது போதாது என இவனும் வதைத்துக் கொண்டிருந்தான்.
“டேய் மச்சி நாளைக்கு தலைவர் படத்துக்கு புக் பண்ணிட்டேல…அப்படியே சாய்ந்திரம் ட்ரீட் யாருது..சரக்கிலாமலா…” என ஊரிலுள்ள நண்பர்கள் அனைவரைக்கும் வரிசையாக போன் போட்டு ஒரே விஷயத்தைப் பேசிக்கொண்டிருந்தான்.மன்னிக்கவும் அவன் பேசுவதாக நினைத்துக் கொண்டு மொத்தப் பேருந்திருக்கும் டமாரம் போட்டுக் கொண்டிருந்தான்.பெங்களூர் சில்க் போர்டிலிருந்து தஞ்சை கிளம்பிய அந்த பேருந்தில் அவனது அலம்பல் கட்டுக்கடங்காமல் போய்கொண்டிருந்தது.
முதல் நாள் தியேட்டர் வாசலையும், டாஸ்மாக் அமைப்பையும் த‌னது செல்போன் உரையாடல் மூலம் தமிழ் தெரிந்த அனைவரது கண் முன்னே வரைந்துக் கொண்டுவந்திருந்தான்.அவனது இருக்கைக்கு முன்னே ஓர் அழகிய காதல் ஜோடியும் அவனது உரையாடலில் உரைந்துக் கொண்டிருந்தது.காதலில் பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் போலும்.அவர்கள் தலையில் நரை நிறம்பிருந்தது.அவனது உரையாடல் எல்லை மீறல்கள் செய்த போதெல்லாம் , பயத்தில் காதலி காதலன் கைகளை பற்றிக் கொண்டாள்.நகரத்தின் மீதுள்ள பயம் அவளை விட்டு இன்னும் முழுதாக அகலவில்லை அவளிடம்.பரப்பரப்பான சாலைகள்,ஆமையென நகரும் வாகனங்கள்,திறக்காத ஜன்னல் ஓர இருக்கை என அவளுக்கு பார்ப்பதெல்லாம் பயம் தருவதாக இருந்தது.அடிக்கடி ரகசியமாக கணவனின் காதில் ஏதோ சொல்கிறாள்,அவரும் பதிலுக்கு ஒரு முறை அவனை முறைத்துவிட்டு அவளுக்கு சமாதானம் சொல்ல.பற்றிய கரங்களோடு கணவன் மீது சாய்கிறாள்.பயம் சற்று தளர்ந்ததாக உணர்கிறாள்.
இந்த அழகிய காட்சிக்கு ஏற்றதாக இளையராஜாவின் கீதங்கள் இசையின் வேர்களி வழி (ஹெட்போன்ஸ்) ஒலிக்க , நண்பரகள் இருவரும் அந்த செல்போன் ஆசாமியை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தனர்.யாரது பார்வையும் அவன் கண்டதாக தெரியவில்லை.மறுநாள் அட்டவனையை முடித்துவிட்டு தனது சென்ற வருட டாஸ்மாக் சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டிருந்தான்.
“இந்த ஃபுல் சவுண்டுலையும் அவன் சவுண்டு கேக்குது டா.” என நண்பர்கள் எரிச்சலுடன் அவனை மீண்டும் ஒரு முறை பார்த்தனர்.வேண்டுமென்றே அவன் காதுப்பட இருவரும் பேச தொடங்கினர்.தன்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று அவன் உணர சற்று நேரம் பிடித்தது.
“டேய் நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா” என்று கவுண்டமனி பாணியில் அவர்கள் பேசிய பின்பு தான் சற்று அமைதியானான்.அடைமழை பெய்து ஒய்ந்தது போல ஓர் அமைதி.மொத்த பேருந்து அந்த அமைதியை ரசித்திருக்க அதற்குள் அவனது கைபேசி ஒலித்தது..
“இவன் சும்மா இருந்தாலும் விடமாட்டாங்கப் போல.இன்னைக்கு நமக்கு சிவராத்திரித் தான்” என்று இருவரும் பேசி சிரித்துக் கொண்டிருக்க‌னர் .பேருந்தில் அனைவரும் தங்களை அறியாமலே அவனது உரையாடலை கவனித்தனர்.அவனது குரல் முதல்முறையா அந்தப் பேருந்தில் வேறு தோணியில் ஒலித்தது…
“ஊருக்கு போய்ட்டு இருக்கேன் “
…….
“சில்க் போர்ட் கிட்ட வண்டி வந்திருக்கு”
…..
“கண்டிப்பாவா …நான் வேணும்னா ..”
“ஓ.கே ..வேற வழியே இல்லாட்டி நான் வந்திடுரேன்..”
என்று அவனது டெசிபெல் மெல்ல மெல்ல குறைந்தது.அந்த அலுவலக அழைப்பை அவன் முடிக்கும் போது அவனது முகமும்எண்ணைய் கத்தரிப் போல் வதங்கிருந்தது .தனது பையை சுருட்டிக் கொண்டு , சுற்றி ஒரு முறைப் பார்த்தான்,அவனை கண்டுக்கொள்ளாதது போல் அனைவரும் நடிப்பதை அவன் உணராது,நேராக முன்னே சென்று நடத்துனரிடம் பேருந்தை நிறுத்தச் சொல்ல,பேருந்திலிருந்து இறங்கிச் சென்றான்.
“ஆண்டவன் இருக்கான் மச்சி..” என நண்பர்கள் இருவரும் அவனை கேலிப்பேச‌…
“இப்படி ஊருக்கு போகிற வழியில கூட இறங்கி திரும்ப‌ ஆபிசுக்கு வரச் சொல்லுவாங்களா..பாவங்க, அந்தப் புள்ள ஆசை ஆசையா ஊருக்கு கிளம்புச்சு..” என அவள் தன் கனவனிடம் சொல்ல.அவளது மெல்லிய குரல் எட்டிய தமிழ் நெஞ்சங்கள் அனைத்தும் அவனுக்காக வருந்தியது.