Sunday, December 28, 2014

2014 வாசிப்பு - சமூக நிகழ்வுகள்

2014 ல் எனது புத்தக தேடல் நன்றாக வளர்ந்ததாக ஒரு உணர்வு . நண்பர்கள் மூலமும் , இணைய‌த்தின் மூலமும்  நிறைய அறிமுகங்கள் கிடைத்தது . அனைத்தையும் குறித்து வைத்திருக்கிறேன் , வாய்ப்பு கிடைக்கும் போது வீட்டின் புத்தக அலமாரியை ரகசியமாக நிரப்ப வேண்டியது தான் .  2015 புத்தக திருவிழா கொண்டாட்டம் வேற முகப்புத்தகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.இது தான் சரியான தருணம் என தோன்றுகிறது."டேய் மச்சி ஏதாச்சும் புக் சொல்லுடா " என்று கேட்கும் சில நண்பர்களுக்காகவும் , நான் வாசித்த அனுபவத்தை கொஞ்சம் அசைப் போடவும் அப்புறம் சிலர் சொல்வது போல கொஞ்சம் சீன் போடவும்...2014ல் நான் வாசித்த புத்தகங்களைப் பற்றி 4-5 வரிகள் எழுதலாம்னு இருக்கேன்.அதில் முதல் பதிவாக சமூக நிகழ்வுகளை குறைவான புனைவோடு பேசிய 4 புத்தகங்களைப் பற்றி ...


1.பெத்தவன் - இமையம்


தருமபுரி என்று சொன்னதும் நம் நினைவிற்கு தற்பொழுது வருவது இளவரசன் மற்றும் திவ்யாவின் தந்தை மரணமும் தான்.சட்டரீதியாக எதையும் தீர்மானமாக சொல்ல முடியாத நிலையில் நம் மனதிற்கு தெரியும் இது ஜாதி எனும் சாத்தானின் செயல் என்று.அப்படி சாத்தானின் கையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒரு தந்தையின் கதை தான் இந்தப் பெத்தவன்.காதல் காதலித்தவர்களை வாழ வைக்கிறதோ இல்லையோ , கண்டிப்பாக ஜாதியையும் அதை சார்ந்த அரசியல் கட்சிகளையும் நன்றாக வாழ வைக்கிறது.காதலுக்கு பெத்தவன் தலையசைத்த பின்னரும் ஊரே வேசிப் பேச்சு பேசி ,அந்தப் பெண்ணின் உசுரை உருவ என்னென்ன பாடுபடுகிறது ஒரு கூட்டம்.அதற்கு கெளரவ கொலைன்னு ஒரு பெயர் வேற வைக்கிறார்கள்.அப்படிப்பட்ட ஒரு கெளரவ கொலை தான் இந்த கதையின் தளம்.

புத்தகத்திலிருந்து சில வரிகள்...

“அப்பிடியா? ஒன்னெ நம்பறம். ஒன் வாக்குப்படியே வச்சிக்குவம். காரியத்த எப்பிடி முடிக்கப்போற அதெச் சொல்லு?” என்று துரை கேட்டான்.
“ஊரு சொல்றபடி.”
“பூச்சி மருந்த வாயில் ஊத்தி, ஒரு அறயில போட்டுப் பூட்டிப்புடனும். எம்மாம் கத்தினாலும் கதவயும் தொறக்கக் கூடாது. ஒரு வா தண்ணீயும் தரக் கூடாது. செத்த நேரத்துக்கெல்லாம் கத முடிஞ்சிடும்” என்று இடுப்பில் குழந்தையை வைத்திருந்த பெண் சொன்னாள்.

2.தூப்பக்காரிமலர்வதி [ சாகித்ய அகாதமி - YUVA PURASKAR விருது பெற்ற நாவல்]


 சாலைகளில் அவ்வப்போது பாதள சாக்கடையிலிருந்து ஒரு தலை எட்டிப் பார்க்கும் காட்சி நம் கண்ணில் பட்டுக் கொண்டே தான் இருக்கிறது . எந்தவித கவசமோ அல்லாது பாதுக்காப்பு முறையோ இல்லாமல் தான் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.சில மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்று , சாக்கடையை சுத்தம் செய்யும் போது விஷ வாய்வு தாக்கி இருவர் இறந்து விட்டனர்.காரணம் அவர்களுக்கு எந்தவித பாதுகாப்பு முறையும் வழங்கபடவில்லை.அவர்களது இறப்பு செய்தியாக வந்து மறைந்தும் விட்டது . தொழில்நுட்பம் எக்குத்தப்பாய் வளர்ந்து நிற்கிறது, ஏதேதோ சாதனங்கள் வந்துவிட்டது ஆனால் இன்னும் இவர்களது வாழ்வை எளிமைப் படுத்த ஒரு சாதனம் வந்தப்பாடில்லை.இந்த ஆதங்கத்தை புத்தகம் முழுதும் நாம் காணலாம்.சாலையிலோ , அலுவலகத்திலோ , ரயில் நிலையத்திலோ , பொது கழிவறையிலோ , மருத்துவமனையிலோ அன்றாடம் நாம் பார்க்கும் மனிதர்களின் வாழ்வை சற்று அவர்களது அருகில் நின்று பார்க்கும் உணர்வை இந்தப் புத்தகம் ஏற்படுத்தும்.

3.கருத்த லெப்பை - கீரனூர் ஜாகிர்ராஜா


ஓசுர் புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம் தான் ஜாகிரின்
புத்தகங்கள்.படிங்க நல்லா இருக்கும் என்று விற்பனையாளரின் பேச்சைக் கேட்டு வாங்கியது . என் நல்ல நேரம் அவர் என்னை ஏமாத்தவில்லை.ஜாகிர் தமிழின் பஷீர் என்ற புத்தகத்தின் முன்னுரை என்னை சலிப்படையச் செய்தது .ஆனால் அவரது படைப்பு சலிப்படையச் செய்யவில்லை.
முஸ்லீம் சமூகம் பற்றி வெறும் மேலோட்டமான புரிதலே இருக்கிறது . அங்குள்ள வேறுபாடுகளும் பாகுபாடுகளும் நான் அறியாததே , ஏழை - பணக்கார பேதம் தொழுகும் இடத்தில் எவ்வாறு இருக்கும் , தெருக்களில் எப்படி இருக்கும்  என்று நாவல் பேசுகிறது.கதையின் நாயகனின் குடும்ப சூழ்நிலைகள் , மனநிலை பாதிக்கப்பட்டவன் என தெரிந்தும் அவனுக்கு அக்காவை மனம் முடித்து வைக்கிறாள் அன்னை.அக்கா வாழ்வில் எவ்வளவு நொடிந்து போகிறாள் , நாயகனுக்கு அறிமுகம் ஆகும் ஒரு சாமியார்.அவரது வாழ்வு என கதை நகர்கிறது.நாயகனின் பகடியை நாவல் முழுதும் ரசிக்கலாம். 

4.ஜின்னாவின் டைரி - கீரனூர் ஜாகிர்ராஜா


இலக்கியத்தில் நாம் ரசித்த கதாப்பாத்திரங்களை வைத்து ஒரு படைப்பு வந்தால் நல்லா இருக்கும்ல , என்று நண்பர் கேட்டது , ஏனோ இந்தப் புத்தகம் வாசிக்கும் போது தோன்றிக் கொண்டே இருந்தது.ஏனென்றால் ஒரு படைப்பாளியின் வாழ்வை சித்தரிப்பதாகவே இந்த நாவல் நகர்கிறது.ஒரு நாவல் எழுதுவதற்காக மலை பாங்கான இடத்திற்கு தனது உதவியாளருடன் கதையின் நாயகர் ( எழுத்தாளர்) செல்கிறார்.அங்கு அவர்களுக்கிடையில் நடக்கும் சுவாரஸ்யமான பேச்சுகளும் சில ப்ளாஷ்பேக்குகளும்  தான் இந்த நாவல். எழுத்தாளர்களையும் இலக்கிய நிகழ்வையும் கேளியும் , கிண்டலும்  செய்வதாகத் தான் இந்த நாவல் இருக்கும் அதுவும் சிற்றிதழ் ஒன்றில் பிச்சைக்காரர் ஒருவரை பேட்டி எடுப்பதாக காட்சி வரும் பாருங்க , சும்மா கிழி கிழின்னு கிழிச்சிருப்பாரு ஜாகிர்.மெல்லிய புன்னகையோடு இந்த நாவலை வாசிக்கலாம்.

குறிப்பு : ஜாகிரின் இரண்டு நாவலிலும் A விஷயங்கள் இருக்கிறது .




தொடரும்

No comments:

Post a Comment