Monday, December 29, 2014

2014 வாசிப்பு - சிறுவர் இலக்கியம்

 சிறுவர் இலக்கியத்தில் இரண்டு சின்ன பிரிவுகள் இருக்கின்றது. அவை குழந்தைகள் இலக்கியம் மற்றும் சிறுவர் இலக்கியம். குழந்தைகள் இலக்கியம் எனப்படுவது எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கான புத்தகங்கள். பெரும்பாலும் இவை பெற்றோர்களால் வாசித்து காட்டவேண்டியதாகவே இருக்கும். இந்த புத்தகங்கள் ஒரு மாய உலகினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும். எந்த விஷயத்தையும் ஆழமாக பேசாமல் அறிமுகத்தோடு நிறுத்திக்கொள்ளும். தாங்கள் புழங்கும் உலகில் உள்ள சின்னச் சின்ன விஷயங்களை அறிமுகப்படுத்தும். விலங்குகள் பேசுவது போன்ற கதைகள் வரும். மொத்தத்தில் ஒரு பேண்டசி உலகினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும்.
மற்ற எல்லா எழுத்தும், புத்தகமும் சிறுவர்களுக்கானது. அது சிறுவர் இலக்கியம். இங்கே கதைகள் நிஜத்திற்கு நெருக்கமாக இருக்கும், இன்னும் ஆழமான மாய உலகினை காட்டும், அறிவியல் கட்டுரைகள், நாவல்கள், கதைகள், மற்றும் இன்னபிற வடிவங்கள் சிறுவர்களுக்கு தேவை. 

‍- உமாநாத் - சிறுவர் இலக்கிய எழுத்தாளர்.


இந்த இரண்டு பிரிவுகள் அல்லாது மூன்றாவதாக சிறுவர்கள் உலகினை தெரிந்துக்கொள்ள பெற்றோர்களுக்கு உதவும் புத்தகத்தினையும் இங்கு பகிர்ந்துள்ளேன்.

5.பென்சில்களின் அட்டகாசம் - விழியன் ( குழந்தைகள் இலக்கியம் )
 சிறுவர்களுக்கு எனது முதல் தேர்வாக இருக்கும் புத்தகமிது. கதையோடு அழகிய படங்களும் உண்டு.எனது மகளுக்கு அந்த படத்தினை வைத்து தான் நான் கதை சொன்னேன்.வகுப்பில் அனைத்து பென்சில்களும் பள்ளி முடிந்ததும் யாருக்கும் தெரியாமல் சுற்றுளா செல்கிறது . அவர்களுக்கு எதிராக சார்ப்பனர் வருகிறது , அங்கு தப்பித்து ஒரு ஆமையாரை பார்க்கிறது அவருடன் பேசிவிட்டு பத்திரமாக வகுப்பிற்கு திரும்புகிறார்கள்.ஆனால் வகுப்பு பூட்டியிருக்கிறது.உள்ளே செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.அவர்கள் எப்ப்டி உள்ளே செல்கின்றனர் , அடுத்த நாள் வகுப்பில் அவர்கள் என்ன வரைகின்றனர் என்பதுடன் முடிகிறது.விழியனின் படைப்புகளில் முதன்மையானது என்று சொல்லலாம்.உங்க வீட்டு சுட்டிஸ்கும் படித்துக் காட்டுங்கள்.இந்தப் புத்தகம் ஆங்கிலத்திலும் கிடைக்கிறது.6.துலக்கம் - பாலபாரதி ( பெற்றோர்களுக்கு )


ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதது


இந்தப் பழமொழி எதற்கு ஒற்றுப்போகுமோ இல்லையோ இந்த ஆட்டிசத்திற்கு ஒற்றும் போகும் என்கிறார் திரு.பாலபாரதி.ஆட்டிசம் என்ற வார்த்தையை முதன்முதலில் கேள்விப்பட்டது ஹரிதாஸ் என்ற திரைப்படம் மூலம் தான்.அந்த திரைப்படத்தை பார்க்க ஏனோ வாய்ப்பு அமையவில்லை.அதன் பிறகு ஆட்டிசம் துலக்கம் நூலின் மூலம் பரிட்சயமானது.ஆட்டிசம் பற்றி அறிமுகமில்லாத எனக்கு அதன் விவரங்களை அழகிய நெடுங்கதை மூலம் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.நமது ஒவ்வொரு வாழ்விலும், நட்பு வட்டத்திலோ,சொந்தத்திலோ கண்டிப்பாக ஆட்டிசம் கொண்ட ஒருவரையாது சந்தித்திருப்போம்.அவரும் நம்மைப் போல் ஆனால் என்ன , சற்று மன வளர்ச்சி கம்மியானவர்கள்,வெளியுலகத்துடன் பழக முடியாவதர்கள் என்பதெல்லாம் நமது புரிதலாக இருக்கும்.பல நேரங்களில் அவர்களுடன் எப்படி உரையாடுவது என்பது நமக்கு தெரியாத ஒன்று.அவர்களை பார்க்கும் போதெல்லாம் , சில கேள்விகள் நமக்குள் வரும்...அவர்களுக்கு ஏன் இப்படி ஆனது ,இது நோயா? அவர்களால் என்னென்ன செய்ய முடியும் ? அவர்களின் உலகம் என்ன? அவர்கள் வீட்டில் இருப்போர் மருத்துவரை அனுகினார்களா? சில நேரங்களில் அவர்களின் திறமைகளைப் பார்த்து வியந்து , வீட்டிலிருப்போர் ஒழுங்காக சிகிச்சை பண்ணி இருந்தா இவர்கள் குணமாகிருந்திருப்பார்களோ என்றெல்லாம் தோன்றும்.நம் வாழ்வில் சந்தித்த நபர் இந்த நூலில் உங்களோடு கண்டிப்பாக பயணிப்பார்.அவர்களைப் பற்றின புரிதல்கள் கண்டிப்பாக மாறும்.

ஆட்டிசம் என்பது நோயல்ல , அது ஒரு குறைபாடு என்பதிலிருந்து துவங்குகிறது.ஆட்டிசம் பற்றின விழிப்புணர்வு இல்லாத சமூகம் குறைபாடுள்ள ஒருவனை எப்படி கையாள்கிறது என்பதே இக்கதையின் கரு.3-5 வயதுற்குள் இந்தக் குறைபாடுகளை கையாளுதலின் அவசியம் ,விழிப்புணர்வின் முக்கியம்,பெற்றோர்களின் தவிப்பு, மனநிலை,கோபம் என கதை நகர்கிறது.தமிழகத்தில் ஆட்டிசம் பற்றின விழிப்புணர்வு இல்லை என்ற ஆசிரியரின் கவலை இந்தக் கதையை படித்து முடிக்கும் போது கண்டிப்பாக நமக்கும் தொற்றிக் கொள்ளும்.அந்தக் கவலைக்கு மருந்தாகவும் நமது என்னெற்ற கேள்விகளுக்கு விடையாகவும் இந்த துலக்கம் அமையும்.

ஆட்டிசம் பற்றி முழுவதுமாக தெரிந்துக் கொள்ள :http://blog.balabharathi.net/?page_id=257. குட்டி இளவரசன் (சிறுவர் இலக்கியம்)
இது ஒரு மொழிப்பெயர்ப்பு நூல் , தமிழில் 3 நபர்கள் மொழிப்பெயர்த்துள்ளனர்.இது தெரியாமல் மிகவும் சுருக்க வடிவத்தை வாங்கினேன். சற்று ஏமாற்றம் தான் . முழுவதுமாக ரசிக்க முடியவில்லை.ஆதலால் வாங்கும் போது மொழிப்பெயர்ப்பாளரை கவனித்து வாங்கவும்.கதையின் நாயகன் குட்டி இளவரசன் , அவன் ஒவ்வொரு கிரகமாக செல்கிறான், அங்கு அவன் சந்திக்கும் நபர்களிடம் அவன் கேட்கும் கேள்விகள் வாசிப்பவரின் கற்பனைகளை தூண்டுவதாக அமைந்திருக்கும்.இந்தப் புத்தகம் பற்றி எஸ்.ரா நல்ல அறிமுகத்தை தந்திருக்கிறார்.
எஸ்.ரா வின் அறிமுகம் : http://www.sramakrishnan.com/?p=551
8.சீனிவாச இராமனுஜன் 125 - இரா - நடராசன் ( சிறுவர் இலக்கியம் )


இராமனுஜன் வாழ்வை வெறும் 125 வரிகளில் சொல்லியிருக்கிறார் நடராசன்.இராமனுஜன் பற்றின ஒரு தாக்கத்தை எளிய முறையில் சிறுவர் மனதில் ஏற்படுத்த இந்தப் புத்தகம் உதவும்.இராமனுஜன் பற்றி முழுவதும் தெரிந்துக்கொள்ள இது உதவாது.இராமனுஜம் பிறந்த 125 வருடங்கள் முடிந்ததை முன்னிட்டு இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது.

9.விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள் - இரா.நடராசன் (சிறுவர் இலக்கியம்)

2014ம் ஆண்டிற்கான ’பால சாகித்ய அகடமி’ விருதுப் பெற்ற புத்தகம் . மருத்துவத்துறைக்கு சவாலாக இருந்த நோய்களுக்கான மருந்துக்கள் கண்டுப்பிடிக்கப்பட்ட விபரங்களை விக்ரமாதித்தன் மற்றும் வேதாளத்தின் உரையாடல்களை கொண்டு அழகாக விளக்கியிருப்பார் நடராசன்.ஆனால் ஒவ்வொரு கதையும் ஒரே மாதிரியான template ஆகவேயிருக்கும்.முதலில் வேதாளம் , விக்ராமதித்தனை போற்றி அப்புறம் என் கேள்விக்கு பதில் சொல்லு இல்லெயெனில் உன் தலை வெடித்து விடும் என்று சொல்லும் , கேள்வி இறந்தவரைப் பற்றி இருக்கும் , அவனது தீய செயல்களை காரணம் என வேதாளம் சொல்லும்.உடனே விக்ரமாதித்தன் அட முட்டாள் வேதாளமே என்று ஆரம்பித்து , அந்த இறப்பினைப் பற்றியும் அதற்கு காரணமாக இருந்த நோயினைப் பற்றியும் விளக்குவான்.அதன் மருந்து எவ்வாறு கண்டுப்பிட்க்கப்பட்டது ,அது எப்படி நடைமுறைக்கு வந்தது என்றிருக்கும்.தொடர்ந்து படித்தால் கொஞ்சம் போர் அடித்து விடும்.இதை தினம் ஒன்று என்ற ரீதியில் படித்தால் நன்றாக இருக்கும்.அப்படித்தான் நான் படித்தேன்.இந்தத் தகவல்களை படிக்கும் போது பொதுவான விஷயம் ஒன்றினை கவணிக்க முடிகிறது அது , மருந்துக்கள் முதல் முதலில் மனித உடலில் எவ்வாறு சோதிக்கப்பட்டது என்பது. யாரோ ஒரு ஏழை நோயாளியால் தொடர்ந்து சிகிச்சை செய்ய முடியாமல் போகிறது அப்பொழுது கைவிடப்பட்ட அந்த நோயாளியின் மீதே இந்த மருந்துக்கள் சோதனை செய்யப்படுகிறது..வெற்றி அடைந்தவை மட்டுமே இங்கு பேசுகிறோம்.தோல்விகளின் கதைகள் ஏதேனும் இருக்குமா என்று மனம் தானே ஓட்டிப் பார்த்து அவ்வப்போது அச்சம் அடைகிறது.


தொடரும்....

No comments:

Post a Comment

There was an error in this gadget