Sunday, January 11, 2015

2014 - வாசிப்பு - தமிழ்மகன்

31.வெட்டுப்புலி 


தமிழ்மகன் எழுத்தில் நான் வாசித்த முதல் புத்தகம்.வெட்டுப்புலி தீப்பெட்டியை சிலர் பாத்திருக்கலாம் , அந்த தீப்பெட்டியின் மீது ஒட்டிருக்கும் படத்தினை பற்றின தேடலில் தான் இந்த நாவல் துவங்குகிறது.அந்தப் பரம்பரையில் வந்தவன் தான் இதை தேடுகிறான்.அவனது தேடல் வழியே இரண்டு தலைமுறைகளை சொல்கிறார்.சென்னை - செங்கல்பட்டு என கதை காலத்தால் ஏற்பட்ட இந்த நகரங்களின் மாற்றங்களை சொல்கிறது.அரசியல் மற்றும் சினிமாவின் வளர்ச்சியையும் சத்தமில்லாமல் சொல்கிறது.ஆரம்பத்தில் கதையில் ஏகப்பட்ட‌ கதாப்பாத்திரங்கள் நம்மை குழப்பினாலும் , போக போக நாவலுடன் பயணிக்க முடிகிறது.முக்கியமாக எனக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது பெரியார் பற்றின நிகழ்வுகள்.பெரியார் பின்பற்றியவரின் வாழ்வை சொல்வதன் மூலம் பெரியாரை பற்றி சொல்வது தான் ரசிக்க வைத்தது.பெரியார் வாழ்வினை தெரிந்துக்கொள்ளும் ஆசை வந்திருக்கிறது.வாசிப்பவர்களுக்கு கண்டிப்பாக தங்களது வாழ்வில் சந்தித்த தி.க நபர் வந்துச் செல்வார்.நமது கலாச்சாரத்தில் சாமியில்லை என சாதரணமாக சொல்ல முடியாது.அவர்கள் சந்திக்கும் இக்கட்டாண சூழ்நிலைகளை அழகாக சொல்கிறார்.குறிப்பாக துனைவியுடன் ஏற்படும் மனக்கசப்புகளை.

அதெயெல்லாம் வாசிக்கும் போது எனது தாத்தா தான் ஞாபத்தில்  வந்தார்.அவரும் திக தான்.சாமி கும்பிடுவதை வீட்டில் முற்றிலும் தடை செய்திருந்தார்.திருட்டுத்தனமாகத் தான் பாட்டி சாமி கும்பிடுவார்.அவர் கண்ணில் பட்டுவிட்டாள் அனைத்தும் வீட்டை விட்டு பறக்குமாம்.ஆனால் நாங்கள் இருந்தப் போதெல்லாம் கொஞ்சம் சாமி கும்பிடுவதை அனுமதித்துவிட்டார்.சாமி கும்பிடுவதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது , ஆனால் பாட்டியால் சாமி கும்பிடாமல் இருக்க முடியாது.வாசிக்கும் போதெல்லாம் இதே நினைவு தான்.என்னடா ஒரே தாத்தா புராணம் பாடுகிறான் என நினைக்க வேண்டாம்,நீங்களும் வாசித்துப் பாருங்கள் நீங்கள் எனைப் போல் இதேப் போன்று ஒரு புராணத்தை கண்டிப்பாக பாடுவீர்கள்.

இதை தவிற நான் ரசித்த ஒன்று , நாவலில் போகிற போக்கில் இரண்டு காட்சிகள் வரும்...சிறு வயதில் நான் அடிக்கடி கண்ட காட்சிகள் அது..கடைசி 10 வருடங்களில் அந்த காட்சிகளை நான் கவனத்ததில்லை...
1. தோடு , மூக்குத்திக்கு பதிலாக சிலர் ஈர் குச்சி குத்தியிருப்பார்கள்.சிறு வயதில் இந்த காட்சியை நான் அடிக்கடி பாத்திருக்கிறேன்...
2.கூரை வழியாக வெயில் தரையில் வட்டம் வட்டமாக விழும் காட்சி...
இது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை என்ற போதும் , வாசித்ததும் அந்தக் காட்சிகள் மனதிற்குள் வந்து வந்து போனது...


32.ஆண்பால் பெண்பால் 


ஒரு வாசகனுக்கு புத்தகத்தின் முன்னுரை எந்த அளவிற்கு முக்கியமானது என்று எழுதுபவர்கள் யோசிப்பதுண்டா ?.முன்னுரையில் இலக்கணம் எனக்கு தெரியாது ஆனால் வாசகனாக நான் முன்னுரையில் எதிர்ப்பார்ப்பது புத்தகத்தின் பற்றின மெல்லிய அறிமுகத்தை மட்டும் தான்.ஆனால் அப்படிப்பட்ட முன்னுரை அரிதாகத்தான் வருகிறது.ஆசிரியரைப் பற்றியும் அந்தப் புத்தகத்தினைப் பற்றியும் ”மானே தேனே பொன்மானே” என நிரப்பியதாகத் தான் தோன்றுகிறது.
வாசிப்புப் பழக்கம் ஆரம்பமான நாட்களில் எனக்கு வெறும் முன்னுரை மூலம் அறிமுகமான புத்தகம் தான் எஸ்.ரா வின் துணையெழுத்து.அந்த முன்னுரை எனக்கு ஞாபகமில்லை ஆனால் அந்த முன்னுரை தான் என்னை அந்தப் புத்தகத்தை வாங்க வைத்தது என சொல்லலாம்.எனக்கு மிகப்பிடித்த புத்தகப் பட்டியலில் ஒரு முக்கியமான இடம் இந்தப் புத்தகத்திற்கு உண்டு.ஆனால் , அதன் பிறகு எந்த முன்னுரையும் என்னை ஈர்க்கவேயில்லை.
சில முன்னுரைகள் கதையின் முக்கியமான திருப்பங்களை போட்டு உடைத்துவிடுகின்றன.சில முன்னுரைகள் கதாப்பாத்திரங்களை விளாவாரியாக வர்ணிக்கின்றன.சில,படைப்பாளியை பாராட்டுவதிலே முடிந்துவிடுகிறது.கதையின் தளத்தையோ,கதையின் காலத்தை பற்றியோ,கதைக்குள் நுழைவதற்கு முன் கிடைக்க வேண்டிய அறிமுகத்தையோ அவை தருவதேயில்லை.முன்னுரைகளை பாதி நேரம் தவிர்க்கவே நேரிடுகிறது.
பா.சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோணி” என்ற புத்தகம்.அதன் முன்னுரை பக்கங்கள் பல செல்லும்.அந்த நாவலை படிப்பதற்கு நிறைய அறிமுகங்கள் தேவை.கூகுள் செய்தே அந்த நாவலைப் படித்தேன்.வாசிக்கும் பொழுது அந்தக் காலகட்டத்தின் தலைவர்கள்,கதை நடக்கும் நாட்டின் வரைப்படம் என அறிமுகங்கள் பல தேவைப்படும்.இந்தத் தகவல்களைப் பற்றி துளியும் பேசவில்லை அந்த முன்னுரை.உண்மையில் அந்த முன்னுரை எனக்கு சலிப்பையே ஏற்படுத்தியது.
முன்னுரையைப் பற்றின அபிப்பிராயமே எனக்கு மாறிவிட்டது.அது எழுத்தாளரை பாராட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இடமாகவே எனக்கு தோன்றியது.வாசகனாகிய எனக்கும் அதற்கும் எந்த உறவும் இருப்பதாகவே தோன்றவில்லை.முன்னுரை எழுதுபவரும் எழுத்தாளரும் பேசிக்கொள்ளும் இடமாகவே தோன்றியது.அப்படியிருந்த என் மன்நிலையை ஒரு முன்னுரை மிகவும் ஈர்த்துவிட்டது.படித்த முதல் சில வரிகளிலே வாசகனுக்காக எழுதியது என தோன்றியது.நான் அடுத்து படிக்க வேண்டிய புத்தகம் இதுவென மாற்றியது.தமிழ்மகனின் ஆண்பால் பெண்பால் நாவலின் முன்னுரை தான் அது.அந்த முன்னுரையை எழுதியது தமிழ்மகன் தான்.வாசகனை தன் வசம் இழுப்பதற்காகவே எழுதப்பட்டதாக அது அமைந்திருந்தது.கதையின் தளத்தையும் , கதாப்பாத்திரங்களையும், கதையின் சிக்கலையும் எந்தவித திருப்பங்களையும் உடைக்காமல் அறிமுகம் செய்கிறார்.கதையின் காலக்கட்டத்தையும் , கதைக்கு சம்மந்தமான சரித்திர தகவலையும் அறிமுகம் செய்து வாசகனை கைப்பிடித்து கதையின் வாசலிற்கு கொண்டு சேர்க்கிறார்.எனக்கு பிடித்த முன்னுரைகளில் கண்டிப்பாக இந்த முன்னுரை இடம்பெறும்.

Men are from Mars , Women are from venus என்று ஒரு புத்தகம் இருக்கிறது . திருமணம் நிச்சயம் ஆனதும் நண்பர் ஒருவர் பரிசாக தந்தது.என் மனைவியை புரிந்துக்கொள்வதற்காக,ஆனால் உண்மையில் எனக்கு அந்தப் புத்தகம் செம மொக்கையாக இருந்தது.இதை செய் அதை செய் என பெரும் அபத்தமாக தோன்றியது.தமிழ் மகனின் ஆண்பால் பெண்பால் புத்த‌கமும் இதே களத்தில் தான் பயணிக்கிறது ஆனால் மிகவும் சுவாரஸ்யமாக செல்கிறது.ஆனால் பிரிந்திருப்பவர்களின் கதை என்பதால் இதை திருமணம் நிச்சயமானவர்களுக்கு தர முடியாது என நினைக்கிறேன் , ஆதலால் அவர்களுக்கு அதே ஆங்கில புத்தகம் தான்.அவர்களை காப்பாற்ற யாராலும் முடியாதுப் போல.விவாகரத்து ஆன அவர்கள் தங்களது பிரிவை அவரஅவர் பார்வையில் பதிவது தான் இந்தக் கதை.அவர்களது கதையில் மிகவும் முக்கியமான ஒரு கதாப்பாத்திரம் எம்.ஜி.ஆர் . எப்படியென படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.சில இடங்களை வாசிக்கும் போது நமது ஈகோ எதிரே காட்சியாகும்.ஆசிரியரின் வெற்றி இதுவேயென நான் சொல்வேன்.முடிவை முன்னதாய் சொல்லிவிட்டு துவங்கினாலும் ஒரு சந்தோஷமான முடிவை எதிர்ப்பார்த்தே கடைசிப் பக்கத்தை புரட்டினேன்.ஆனால் ஆசிரியர் ஏமாற்றிவிட்டார்.



மற்றப் பதிவுகள்








No comments:

Post a Comment