Tuesday, January 6, 2015

2014 வாசிப்பு - வலிகள்

ஒருவரது வலியை மற்றொருவருக்கும் உணரச்செய்வதில் இலக்கியத்திற்கு ஒரு முக்கிய பங்குண்டு..அப்படி 2014 ல் நான் வாசித்ததில் வலிகளை பேசிய படைப்புகளைப் பற்றி, 


22.எரியும் பனிக்காடு - பி.எச் டேனியம் [தமிழில் - இரா-முருகவேள்]


Red Label என்ற ஆங்கில நாவலின் மொழியாக்கம் தான் இந்த நாவல் ,  மிக முக்கியமான புத்தக‌ம் . நாம் அன்றாடம் அருந்தும் தேநீரின் கதை இது.பாலாவின் பரதேசி படம் இந்த நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான்.நான் படம் பார்க்கவில்லை , ஆனால் ஒரு பாட்டு பாத்தேன்.என்னால் அந்த பாட்டை நாவலின் எந்த இடத்திலும் வைத்து பார்க்க முடியவில்லை. 12  years a Slave  என்று ஒரு ஆங்கில திரைப்படம் .செம படம்.அந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலையும் இந்த நாவலைப் பார்க்க முடிந்தது .டீ எஸ்டேட்டில் எப்படி வேலைக்கு ஆட்களை பிடித்து வருகின்றனர் என்பதில் துவங்குகிறது நாவல்.கங்கானி என்று சொல்லப்படுபவர்கள் தான் இந்த வேலையை செய்கின்றனர்.இந்த கங்கானிகள் கதாப்பாத்திரங்களை எந்த துறையிலும் பொருத்திப்பார்க்க முடியும்.நாயகனும் நாயகியும் இதுப் போன்ற ஒரு கங்கானியை நம்பி தங்கள் இடத்தினை விட்டு புறப்படுகின்றனர்.பஞ்சமும் , வேறு வேலைவாய்ப்பின்மையும் அவர்களை இந்த முடிவை எடுக்கச் செய்கிறது.எப்படியும் சம்பாதித்து விரைவில் கை நிறைய பணத்துடன் ஊருக்கு திரும்பிடலாம் என்ற நம்பிக்கையா போனவர்களுக்கு அங்கு சென்ற பின்பு தான் உண்மை நிலவரம் மெல்ல மெல்ல புரிகிறது.நாம் அருந்தும் தேனீர் பின்னாடி இப்படி ஒரு கதையிருக்கும் என சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. இதுப் போன்ற உடல் ரீதியான,பண ரீதியான துயரங்கள் இல்லாவிட்டாலும் நான் ஐ.டி துறையில் இருப்பதாலோ என்னவோ இந்தத் துறையினை நாவலின் ஒவ்வொரு வலி மிகுந்த இடத்திலும் பொருத்திப்பார்க்க முடிந்தது.முக்கியமாக‌ நாவலில் ஒரு இடத்தில் பரித்த தேநீர் இலைகளை இடை போடும் காட்சி வரும் அது எனது துறையில் நடக்கும்  "performance appraisal" ஐ நினைவிற்கு கொண்டு வந்தது. எவ்வளவு தூரம் பிழிய முடியுமோ பிழிந்தெடுத்துவிட்டு , முடியாது என்ற கட்டம் வரும்போது திறமையற்றவர் என‌ சொல்லி வெளியில் அனுப்புவது ஐ.டி துறையில் அவ்வப்போது நடந்துக் கொண்டே இருக்கிறது.இந்த நிலை நாவல் படிக்கும் போது காட்சிகளாக மனதில் சுற்றிக் கொண்டேயிருந்தது.நாவல் வாசிக்கும் போது அந்த நிலப்பரப்பின் குளிரையும் அந்த மக்கள் மனதில் எரியும் நெருப்பையும் நன்கு உணரலாம்.


23.நிமித்தம் - எஸ்.ரா


ஒரு பயணத்தில் தனது 6ம் வகுப்பு நண்பனை காண்கிறார் , அவர் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்."என்னடா " என்று கேட்க , தனது காது கேளாத பிரச்சனைத் தான் இந்த நிலைக்கு காரணம் என சொல்கிறார்...காது கேளாமை இவ்வளவு தூரம் ஒருவரின் வாழ்வை மாற்ற முடியுமா..? இந்த கேள்விக்கான விடை தேடலே நிமித்தம் நாவலாக உருமாறியிருக்கிறது.தேவ்ராஜ் என்ற கதாப்பாத்திரம் மூலம் காது கேளாதவர்களின் வலியை உர‌க்க சொல்லியிருக்கிறார்.இதில் காது கேளாமைத் தவிர , தாமதமாக திருமணமாகும் ஒருவனின் வலியும் இருக்கிறது.குறைந்த வயதை நிர்ணயம் செய்தவர்கள் , அதிகப் பட்ச வயதை நிர்ணயம் செய்யாதது ஏன்..என்ற கேள்வி சமுதாயத்தில் ஒரு பெண்ணிற்கு திருமணம் ஆகாதப் போது அவளை பாவப்பட்ட ஜென்மம் என்றாவது நினைப்பார்கள் ஆனால் ஆணிற்கு அதுவும் இல்லை என்பதே நிதர்சனம்.காது கேளாத ஒருவனது வாழ்க்கை தான் இந்த நாவல்.அவனை இந்த சமூகம் எப்படியெல்லாம் பந்தாடுகிறது , அவனது வலியை நமது செவிக்கு எட்டவைத்திருக்கிறார் எஸ்.ரா.

எஸ்.ராவின் எழுத்துக்கள் எனக்கு எப்போதும் நண்பன் தோழ் மீது கைப்போட்டு பேசுவதுப் போலவே இருக்கிறது,அவரது எழுத்தின் எளிமை எனக்கு மிகவும் ஒத்துப்போகிறது என்றே சொல்லலாம்.

24.கள்ளம் - தஞ்சை பிரகாஷ்


தஞ்சாவூர்காரனாக இருந்தும் தஞ்சை பிரகாஷ் பற்றி இணையத்தில் படித்துத் தான் தெரிந்துக் கொண்டேன்.அவரது எழுத்துக்கள் அதிகம் அச்சில் இல்லையாம்,கள்ளம் நாவல் போன வருடம் மறுப்பதிப்பாக வந்தது.உடனே வாங்கிவிட்டேன்.தஞ்சை ஓவிய கலை தான் கதையின் மையம்.தஞ்சை ஓவியம் எப்படி உருவானது , அந்த சமூகம் பற்றின அறிமுகம் முன்னுரையிலே ஆசிரியர் தந்து விடுகிறார். நாவல் தஞ்சை அரண்மனையிலே துவங்குகிறது . நாயகன் தஞ்சை ஓவிய கலை பின்னனியில் வந்தவன் , ஆனால் அவனுக்கு எந்த வித புதுப்பிதலும் இல்லாமல் வெறும் tempalte ஆக ஓவியம் தயாரிப்பதில் நாட்டமில்லாமல் அதை எதிர்க்கிறான்.அதிலிருந்து அவனது பயணம் துவங்குகிறது.கதை அதிகமாக பூக்கார வீதியிலே நடக்கிறது.தஞ்சையின் முக்கியமான இடங்களில் ஒன்று.அங்குள்ள மக்களுடன் நாயகன் சேர்கிறான் , அவர்களின் துனைகொண்டே கலைக்கு புது உருவம் தருகிறான்.அதற்கு அவன் கையாளும் முறை ... அதை நாவல் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.இதில் நாயகனின் ஒரே வலி , கலை தான் ... அவன் உயிரோட்டமில்லாமல் அப்படியே நகலாக உருவெடுப்பதை பார்க்கும் போதெல்லாம் தவிக்கிறான்.அவனது தவிப்பே இந்த நாவல்.கலையோடு உறவுகளையும் அதுகம் கையாண்டிருப்பார்.சில இடங்கள் சினிமா தனமாக தோன்றினாலும் வாசிக்கும் போது சுவாரஸ்யமாகவே இருந்தது.

25. மாதொருபாகன் - பெருமாள்முருகன்



பெருமாள் முருகன் எழுத்தில் நான் படிக்கும் முதல் நாவல்.பாதி வாசிப்பில் இருக்கும் போதே , நாவல் பற்றின பிரச்சனை செய்தி எட்டியது.அந்த விஷயத்தை முன்னுரையிலையே சொல்லிவிடுவார்.அதை மற்றும் படிச்சிட்டு பிரச்சனை செஞ்சாங்களான்னு தெரியல.இந்த நாவல் வேறு விஷயத்தை தான் பேசுகிறது.அது என்னான்னா குழந்தையில்லாமல் இருக்கும் ஒரு தம்பதியின் வலி தான்.அதில் இந்த பிரச்சனைக்குறிய விஷயம் ஒரு திருப்பமாக வரும்...

திருமணம் ஆனதும் "என்ன ஏதாச்சும் விஷேசம் உண்டா" என்ற கேள்வி இங்கு திருமணம் ஆன அனைவரும் எதிர்கொள்ளும் கேள்வி தான்.இதுப் போன்ற கேள்விகள் தான் நம் வாழ்க்கையை நடத்துகிறதோ என்ற சந்தேகம் கூட அடிக்கடி வருவதுண்டு.10 வது மார்க்,+2,எந்த காலேஜ்,campus,இன்னும் வேலை கிடைக்கலையா,அவன் அவ்வளவு சம்பளம் வாங்குறான்,வெளிநாடு,திருமணம்,முதல் குழந்தை,சொந்த வீடு,கார்,ஆண் வாரிசு..என கேள்விகள் வந்துக் கொண்டேயிருக்கிறதுஏதாச்சும் ஒரு கேள்விக்கு +ve ஆக பதில் சொன்னால் அடுத்த கேள்விக்கு தாவி விடுவார்கள்.ஆனால் -ve ஆக பதில் சொன்னால் அவ்வளவு தான்,அதே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு வாழ்வை ரணமாக மாற்றுவதில் இந்த சமூகம் ஆர்வம் காட்டும் பாருங்க...அப்படி தான் இங்கு குழந்தை இல்லாத போதும் தங்களுக்குள் பிரச்சனை இல்லாததாக உணர்ந்த வந்த தம்பதியர் வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் ஏதோ ஒரு நிகழ்வில் அந்த வருத்தம் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது.அதை ஏற்படுத்துவதே அந்த சமூகத்தின் முதல் கடமையாக இருந்தது.

இந்த நாவலில் வரும் கணவன் - மனைவிக்குள் இருக்கும் ஈடுபாடை,காதலை,காமத்தை அழகாக ரசிக்கலாம்.நாயகனின் அறிமுகமே ஒரு பூவரச மரத்தடியில் (அவனது மாமியார் வீட்டில்) அவனது சோம்பலான விழிப்புடன் துவங்குகிறது...நேரத்தை கடத்த முயன்று அவன் மெல்ல மெல்ல தனது நினைவுகளை ஓட்டுகிறான்.
குழந்தையில்லாத காரணத்தால் அவன் சந்தித்த அவமானம் மட்டுமே அவனது நினைவில் அதிகம் இருக்கிறது.குழந்தையின்மை - எவ்வளவு பெரிய பூதமாக தங்களுக்குள் இருப்பதையும் , தங்களது கூடல் கூட மகிழ்ச்சிக்கரமாக அமையாது பயத்துடன் இருப்பதை நினைத்து வாடுவதை என்னவென்று சொல்வது...

நாவல் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தினுடையது , திருச்சங்கோட்டில் நடக்கிறது , அங்கிருக்கும் வழிபாட்டு முறைகளையும் , வேண்டுதலையும் சொல்லி நகர்கிறது.அங்கு நடக்கும் திருவிழா , அப்பொழுதைய நடப்பில் இருக்கும் சில முறைகளை இந்த கதைக்கு முக்கிய திருப்பமாக உபயோகித்திருக்கிறார்.வாசிக்கும் போது அது ஒரு ஆச்சரியம் தருவதாக இருந்ததைத் தவிர பெறும் கலாச்சார அவமானமாக தோன்றவில்லை எனக்கு.

நாவலின் அடுத்த இரண்டு பகுதிகள் வருகிறதான் (12 B style ல் என்று கேள்வி).....


மற்றப் பதிவுகள்


2 comments: