Sunday, January 25, 2015

பலிக்குமா இந்த பகல் கனவு

பகல் கனவு - ஜிஜுபாய் பதேக்கா [தமிழில் - சங்கரராஜுலு]
வெளியீடு - நேஷனல் புக் டிரஸ்ட் [இணையத்தில் கிடைக்கிறது]

இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்ததும் தான் ஆசிரையரைப் பற்றி தேடினேன்.இந்தியாவில் Montessori கல்வி முறையை அறிமுகப்படுத்தியது ஜிஜுபாய் பதேக்கா அவர்கள் தான்.Montessori கல்வி முறையைப் பற்றி போதுமான புரிதல் எனக்கில்லை.விளையாட்டு மூலம் சொல்லித் தருவார்கள், வழக்கமான வகுப்பு முறைகளுக்கு பதிலாக Mixed age வகுப்பு முறைகள் இருக்குமென‌ இணையத்தில் படித்திருக்கிறேன்.பெங்களூரில் நிறைய Montessori  க்கள் இருக்கின்றன (அது உண்மையிலே Montessori  யா என்பதை இனிமேல் தான் விசாரிக்க வேண்டும்).எனது மகளுக்காக பள்ளிகளை விசாரித்தப் பொழுது சாதாரண பள்ளிகளை விட அசாதாரண கட்டணங்கள் இருந்ததால் விட்டுவிட்டேன்.


இந்தப் புத்தகம் Montessori கல்விமுறையின் தாக்கத்தில் தான் எழுதியது என முன்னுரையில் படித்தேன்.நமது சூழலிற்கு தகுந்தாற் போல் அந்த கல்விமுறையை மாற்றி அதனை 4ம் வகுப்பில் செயல்படுத்தி பார்க்கும் ஒரு அசிரியரியரின் கனவு தான் இந்த "பகல் கனவு".கதையின் நாயகன் ஆசிரியர் தான்.அவர் , மனப்பாடம் செய்யும் கல்வி முறையிலிருந்து விலகி நிற்க முயற்சிக்கிறார்.மாணவர்களுக்கு எது முக்கியம் ? முழுமையான புரிதலா அல்லது தேர்வின் மதிப்பெண்களா ? இது தான் அவரது கேள்வி.மதிப்பெண்கள்,வேலை,சம்பளம் என்ற பெரும்பாலோரின் போக்கை கேள்வி கேட்பது போல் இருந்தது.புரிதல் தான் கல்வியின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பது இந்த ஆசிரியரின் ஆசை மட்டுமல்ல‌.அது எல்லோரது ஆசையும் கூட."புரிந்து படி" என ஆசிரியர்,பெற்றோர்,அறிஞர்கள்,அனைவரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.ஆனால் உண்மையில் அதை செய்வது கடினமாக தான் இருந்தது.தேர்விற்காக படிக்கும் என்னைப் போன்ற கட்சியினர் அப்பொழுது வேண்டுமானால் புரிந்துப் படிக்கலாம் , ஆனால் தேர்வு முடிந்ததும் காற்றில் கரைந்து விடும் என்பது தான் உண்மை.ஏனென்றால் அதன் பயன்பாடு விளங்கியதேயில்லை.அப்படி ஒரு basement , பள்ளியிலிருந்தே அமைந்துவிட்டது.Rhymes லிருந்து ஆரம்பமாகிறது நமது கல்விதிட்டங்களின் ஓட்டைகள்.எதற்காக rain rain go away , london bridge is falling down,hot cross bun போன்ற பாடல்கள் இன்றும் மாறாமல் உள்ளது? இந்த கேள்வியை யாரிடம் கேட்பது என்று விளங்காமல் தான் நாம் எல்லாரும் இருக்கின்றோம்.


கல்கி,சாண்டிலியன் போன்றோரின் எழுத்துக்கள் நம்மில் பலரிடம் ஏற்படுத்திய வரலாற்று ஆர்வத்தை ஏன் பாடப்புத்தகத்தால் ஏற்படுத்த முடியவில்லை.அவர்கள் கற்பனையை கலக்கின்றார்கள் என்றாலும் உண்மையையும் நம் மனதில் பதிய செய்துவிடுகிறார்கள் என்பதை ஒற்றுக்கொள்ளதான் வேண்டும்.வரலாற்றைப் போல ஒரு சுவாரஸ்யமான பாடம் இல்லை என்று எனக்கு இப்பொழுது தோன்றுகிறது.வரலாற்றை சுலபமாக கதையாக சொல்ல முடியும் ஆனால் வகுப்புகள் அப்படி இருப்பதில்லை.அவை வருடங்களாகவும்,வாயினுள் நுழையாத பெயர்களாகவும் தான் இருக்கிறது

இதே மனப்போக்கில் தான் இந்தக் கதையின் நாயகனும் இருக்கிறார்.அவர் தனது வகுப்பில் முதல் 3-4 மாதத்திற்கு வெறும் கதைகளை தான் சொல்கிறார்.கற்பனைகள் மூலம் மாணவர்களை கதைக்குள் இழுக்கிறார்.கதைகளை மெல்ல மெல்ல அவர்கள் மனதில் பதிக்கின்றார்.கதைகளை நாடகமாக உருமாற்றுகிறார்.பின்னர் கதை உண்மையை விட்டு எவ்வளவு தூரம் மாறியிருக்கிறது என்பதை யோசிக்கிறார்.அடுத்த நாள் உண்மை கதையை சொல்கிறார் , ஆனால் மாணவர்கள் ஏற்க மறுக்கின்றனர்.5000 குதிரைகள் வந்த இடத்தில் 50 எனும் மாற்றத்தைக் கூட மாணவர்கள் கண்டுபிக்கின்றனர் என்பது அவர்கள் எவ்வளவு தூரம் கதைக்குள் இருக்கின்றனர் என்பதை ஆசிரியருக்கு உணர்த்துவதாக இருக்கிறது.மெல்ல மெல்ல உண்மையினை கதைக்குள் கொண்டு வருவதற்கு அவருக்கு சிலக் காலம் தேவைப்படுகிறது.

மாணவர்கள் சரியான வழியில் இழுந்து செல்வதாக அவருக்கு முழு நம்பிக்கை பிறந்ததும் , ஒவ்வொரு கட்டமாக நகர்கிறார்.அவரை கிண்டல் செய்த மற்ற வகுப்பாசிரியர்களும் கவணிக்க செய்யும் சந்தர்ப்பமொன்று பள்ளிவிழாவில் அவருக்கு அமைகிறது.எப்பொழுதும் நடக்கும் அபத்தத்தை எதிர்த்து தனியாக ஒரு நாடகம் போடுகின்றனர்.எந்த அலங்காரமும் இல்லை,மனனம் செய்யும் வசனமுமில்லை . அவர்கள் அன்றாடன் பேசிய கதைகள்,அன்றாடம் அவர்கள் வகுப்பில் நடித்த நாடகங்களையே அங்கு அரங்கேற்றம் செய்தனர்.தெளிவான நடிப்பும்,வசனங்களும் அங்கு அனைவரையும் ஆச்சரியப்பட செய்கிறது.அதுவே அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது.

கல்வி நிர்வாகி நாயகனின் முறை சரியானது என்பதை உணர்ந்து அவரிடம் விசாரிக்கும் போது , இலக்கண வகுப்புப் பற்றி இருவரும் பேசுகின்றனர். அவரை மிகவும் பாராட்டி வேண்டிய உற்சாகத்தை தருகிறார் கல்வி நிர்வாகி.ஆண்டு இறுதி தேர்வில் அவரது வகுப்பு மாணவர்கள் என்ன செய்கின்றனர் என்பதே மீதி கதை.எனக்கு அந்த இலக்கண விளக்கம் மிகவும் பிடித்துவிட்டது.இந்த முறையை நாமும் நமது வீட்டில் முயற்சி செய்து பார்க்கலாம் என தோன்றியது.பள்ளியில் மாற்றங்களை எதிர்ப்பார்க்கலாம் ஆனால் நடக்குமென சொல்ல முடியாது.ஆனால் வீட்டில் கண்டிப்பாக நாம் முயற்ச்சிக்கலாம் , என்ன...கொஞ்சம் ஆர்வமும் அதற்கான உழைப்பும் தேவை.அதற்கு இந்த புத்தகம் உறுதுணையாக இருக்கும்.

இந்தப் புத்தகம்  1931 ல் குஜராத்தியில் எழுதியது.அப்பொழுதே கல்விமுறையின் போக்கை கண்டு மனம் வருதிருக்கிறார் என்பது வியப்படையச் செய்கிறது. அப்பொழுது அவர் கண்ட கனவு , 80 ஆண்டுகள் கடந்தும் கனவாகவே இருப்பதால் தான் "பகல் கனவு" என்று பெயர் வைத்தாரோ..?



No comments:

Post a Comment