Thursday, March 5, 2015

யார் பாரதி?

சமூகவலைதளங்களை ஆயிரம் நொட்டை சொன்னாலும் சில நல்லதும் இருக்கத்தான் செய்கிறது , அதில் முக்கியமாக நான் கருதுவது மறைந்த பல தலைவர்களைப் பற்றி அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டேயிருப்பது தான்.தலைவர்களின் பிறந்த / இறந்ததினத்திலோ அல்லது வரலாற்றின் முக்கிய நினைவுகளின் தினத்திலோ அவற்றை பற்றின‌ பதிவுகள் வருகின்றது.சுவாரஸ்யமான சம்பவங்கள், சர்ச்சைகள், ஆதரவுகள்,எதிர்ப்புகள் என்று அன்றைய தினம் கலைகட்டிவிடுகிறது.அப்படித் தான் பாரதி பற்றின "யார் பாரதி?" என்ற யூடுயுப் வீடியோ பகிரப்பட்டது.அதன் வழியே வ.ரா எழுதிய புத்தகம் பற்றியும் , யதுகிரி அம்மாள் எழுதிய பாரதி நினைவுகள் என்ற புத்தகம் பற்றியும் தகவல்கள் கிடைத்தது.

இரண்டு புத்தகமும் இணையத்திலே கிடைத்தும் விட்டது.அப்புறம் என்ன ?.. வீடியோ பார்த்த ஆர்வத்தில் இரண்டு புத்தகங்களையும் back to back படித்துவிட்டேன்.ஒருவரின் சரித்திரத்தினை வாசிக்கும் போது அதில் அவரது புகழ்ச்சி ஓங்கியிருக்கும் பட்சத்தில்  ஒருவித‌ சலிப்பினை ஏற்படுத்திவிடும்.அதற்கு பயந்தே சரித்திர நூல்களை தவிர்த்துவிடுவது வழக்கம்.ஆனால் இந்த இரண்டு புத்தகங்களிலும் புகழ்ச்சியை தேவையான இடத்தில் மட்டுமே சந்தித்தேன்.பாரதி பற்றின விமர்சணங்களை இருவரும் பதிந்திருந்தனர்.இரண்டுமே பாரதியின் புதுச்சேரி வாழ்வினை பற்றியது தான்.திரைப்படங்களில் மட்டுமே பாரதிப் பற்றின செய்திகளை அறிந்தவன் என்றதால் எனக்கு இந்தப் புத்தகங்கள் மிகவும் முக்கியமானவை.

முதலில் வாசித்தது யதுகிரி அம்மாளின் "பாரதி நினைவுகள்" தான்.யதுகிரி - பாரதியின் நண்பரது மகள்.பாரதி பாடல்களை இயற்றியதும் அதனை நண்பர்களிடம் பாடி காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கின்றார் , அப்பொழுது யதுகிரியையும் அழைத்து பாடல்களை பாடி அதனை திரும்ப பாடச் சொல்லி ரசிக்கின்றார்.இவ்வாறு பாடல்கள் பிறந்த கதைகளையும்  , தனக்கும் பாரதிக்கும் நடந்த விவாதங்கள் பற்றியும் ,  பாரதிக்கும் செல்லம்மாளுக்கும் இடையே நடக்கும் சின்ன சின்ன சண்டைகளைப் பற்றியும் , செல்லம்மாளின் கவலைகளையும் இந்தப் புத்தகத்தில் பதித்திருக்கின்றார்.யதுகிரிக்கும் பாரதிக்கும் நடந்த உரையாடல்களே அதிகம் இருப்பதால் மிக எளிய மொழி நடையாக இருந்தது.ஆரம்ப காலங்களில் தினமும் அவர்கள் கடற்கரைக்கு செல்கின்றனர்,அப்பொழுது நடக்கும் உரையாடல் , செல்லம்மாளுக்காக பாரதியிடம் சண்டைப் பிடிப்பது , திருமணம் நிச்சயம் ஆனதும் பாரதியை சந்திப்பதை தவிர்க்கும் போது பாரதி சொன்ன வார்த்தைகள் என பல சுவாரஸ்யமான உரையாடல்கள் இருக்கின்றது.அதில் எனக்கு முக்கியமாக தோன்றிய ஒரு உரையாடல் , யதுகிரி பள்ளிக்கு சென்று பயில வேண்டும் என்று விரும்புகின்றார் , வீட்டில் மறுத்து விட்டனர்.ஆதலால் மிக வருத்தத்தில் இருக்கும் அவரை பாரதி தேற்றுகிறார்.அப்பொழுது பாரதியும் யதுகிரியின் ஆசைக்கு எதிராகவே பேசுகின்றார்.அந்த எண்ணம் ஆங்கிலத்தின் மீது இருந்த வெறுப்பாக இருந்த போதும் எனக்கு பெண்கள் பள்ளிக்கு செல்வது சரியல்ல என்ற எண்ணமாகவே தோன்றியது(இது எனக்கு ஏற்பட்ட எண்ணமே, தவறாக இருப்பின் மன்னிக்கவும்).

பாரதியின் மெளன விரதமும் , இறப்பினை கடந்து விட நினைக்கும் அவரது மன ஓட்டமும் நாம் அதிகம் தெரிந்துக்கொள்ளாதவை.அவை இரண்டையும் வாசிக்கும் போது மனதினுள் ஒரு வருத்தம் தோன்றத்தான் செய்கின்றது.பாடல்களை பாரதியே மெட்டெடுத்து பாடியிருக்கின்றார்.தனது சுற்றத்தில் அவர் கேட்ட நாட்டுபுற பாடல்களின் மெட்டு,சில french பாடல்களின் மெட்டு என அசத்தியிருக்கிறார்.இப்பொழுதிருக்கும் வசதிகள் அவரது காலத்தின் இருந்திருந்தால் அனைத்தையும் அவரது குரலிலே நாம் எப்பொழுதும் கேட்டிருக்கலாம்.

என்ன சொல்ல...நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான்...

குடும்ப சிக்கல்களில் தவித்த பாரதியை பார்த்த எனக்கு வ.ரா எழுதிய புத்தகம் வேறொரு பாரதியை காட்டியது.வாசிப்பின் துவக்கத்தில் தகவல்கள் எளிமையாக இருப்பதாக தோன்றியது , ஆனால் போக போக ஏகப்பட்ட தகவல்கள் .பாரதியின் நண்பர்களைப் பற்றியும்,பாரதியின் பழக்க வழக்கங்கள் பற்றியும்,பாரதியின் ஆசைகள் என‌ நிறைய பேசுகிறார் வ.ரா,பாரதியிடம் தனக்கும் பிடிக்காத பழக்கமாக‌ அவர் கூறுவது "பாரதியின் எச்சில் துப்பும் பழக்கம்".அதனை அவரது நண்பரது வீட்டிலும் செய்கின்றார்.ஆனால் அந்த வீட்டில் அவருக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை.அவர்கள் எதுவும் சொல்லாமல் சுத்தம் செய்கின்றனர்.அவர் வேறு ஜாதியை சேர்ந்த ஒருவருக்கு பூணல் அணிவித்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் , பாரதியை தேடி போலிஸ் வட்டமிட்ட சம்பவம்,புயலால் பாதிக்கப்பட்ட ஊரினை மீட்டெடுக்க துடிக்கும் நிகழ்வுகள்,காந்தியை சந்திக்கும் நிகழ்வு,காங்கிரஸ் மாநாடு  என அனைத்தையும் வாசிக்கும் போது பாரதி நம் மனதில் கண்டிப்பாக  சம்மணமிட்டு அமர்ந்துவிடுவார்.

பாரதியின் சமுதாய ஈடுபாடுகள் , அவரது நட்பு வட்டங்கள்,அவரது பத்திரிக்கை அனுபவங்கள்,போலிஸ் எதிர்ப்பு , அவரது கோபம்,ஆதங்கம்,எழுத்து,படைப்பு,பாடல் என அடுக்கிக்கொண்டே போகின்றார் வ.ரா.பாரதியின் உருவமைப்புகளை அழகாக வர்ணிக்கிறார் , மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் "பாரதி வழுக்கை" என்பது தான்.எத்தனை வருடங்களாக பாரதியின் புகைப்படத்தை பார்த்திருக்கிறேன்.ஆனால் அந்த முண்டாசினுள் இப்படி ஒரு ரகசியம் இருப்பதாக நான் யோசித்ததேயில்லை.என்னை பொறுத்த வரை இது ஒரு முக்கியமான தகவல்.

பாரதிக்கு நீச்சல் அடிக்க வேண்டுமென்று ஆசையாம் , ஆனால் நண்பர்கள் கடலில் நீந்த இவர் மட்டும் கரையிலிருந்து ஏக்கமாக பார்ப்பாராம்.வ.வே.சு ஐயரிடம் செஸ்,சீட்டு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றார்.செஸில் அவர் வெற்றி பெறும் போது மனுசன் ஏகப்பட்ட சந்தோசத்தில் குதிப்பாராம்.பாரதி கைதான பின்பு , ஆங்கிலய அரசிற்கு மன்னிப்பு கடிதம் எழுதி தான் வெளியே வருகின்றார்.அதன் விமர்சணங்களை தற்பொழுதும் இணையத்தில் வாயிலாக‌ பார்க்க முடுகிறது.ஆனால் அப்பொழுதைய சூழலில் பாரதி அவ்வாறு செய்தததை தவறாக எண்ண மனம் மறுக்கிறது,அதற்கு இந்தப் புத்தகமும் ஒரு முக்கியமான காரணம்.

பாரதி யானையால் தாக்கப்பட்டார் என்பது நாம் அறிந்ததே,ஆனால் அப்பொழுது அவரை குவளைக் கண்ணன் என்பவர் தான் காப்பாற்றியிருக்கிறார்.இவரைப் போன்ற நிறைய நபர்களை இரண்டு புத்தகங்களும் நமக்கு அறிமுகம் செய்கின்றது.

அது ஒரு நீண்ட பட்டியில் , அதில் சில முக்கியமான நபர்களின் புகைப்படங்கள் இந்த இணையத்தில் கிடைக்கிறது.இதில் பாரதியின் பல படைப்புகளும் கிடைக்கிறது.பாரதியின் சுய விமர்சணமாக கருதப்படும் பாரதியின் சின்னச் சங்கரன் கதை திருடப்பட்டு விட்டது , அதில் நான்கு அத்தியாயம் மட்டுமே தற்பொழுது நம்மிடம் இருக்கின்றது.இதுப் போன்ற அறிய பாரதி படைப்புகள் இந்த தளத்தில் கிடைக்கிறது.

அடுத்து இந்த தளத்தினை வேட்டையாடலாம் என்றிருக்கிறேன்....யாராவது வரீங்களா?