Tuesday, December 19, 2017

ஊர் கூடி தேர் இழுத்தோம்

கோத்தகிரி நிகழ்வை முடித்து வீடு திரும்பியதும் முதலில் வாசிக்க நினைத்தது மாயக் கண்ணாடியின் புத்தகத்திலுள்ள‌ அந்தக் கதையை தான். தனது கதை சொல்லலில் மூலம் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை அந்தச் சிறுமி என்னுள் ஏற்படுத்திவிட்டாள். பொதுவெளியில் உச்சரிக்க‌ கூச்சப்படும் "குசு" என்ற‌ வார்தை தான் அந்தக் கதையின் மையம். இந்தக் கதையை 10 வயதுள்ள சிறுமி எந்தவித கூச்சமும் இல்லாமல் மேடையில் அனைவர் முன்னிலையில் அவ்வளவு அழகான வர்ணனையுடன் பேசினாள். அவள் பேசப் பேச என்னை அறியாமல் சிரித்துக் கொண்டிருந்தேன். அத்துடன் அவளது அந்தக் கூச்சமற்ற உணர்வு நிறைய யோசிக்கவும் வைத்தது. அவள் தனது பேச்சை அழகாக துவக்கியதுப் போலவே அழகாக முடிக்கவும் செய்தாள்.

"இந்தக் கதையை படிச்சு நானும் அண்ணனும் சிரிச்சுக்கிட்டு இருந்தோம்,அப்போ டிவி பார்த்துக்கிட்டிருந்த எங்க அம்மா அப்பா..ஏன் இப்படி சிரிக்குறீங்கன்னு கேட்டாங்க..நாங்க இந்தக் கதையை காட்டினோம்..அவங்களும் புக்கை படிச்சிட்டு எங்கள மாதிரியே சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க"

என்று தனது அனுபவத்துடன் பேச்சை முடித்தது அருமையாக இருந்தது. அவளது அம்மா அப்பாவை வாசிக்க வைத்துவிட்ட அவள் தற்பொழுது என்னையும் வாசிக்க வைத்துவிட்டாள்.   அந்தச் சுட்டிக்கு எனது அன்பு முத்தங்கள்.

அடுத்து சிறுமி ஒருவர், விழியன் அவர்கள் எழுதிய‌ கிச்சா பச்சா புத்தகத்தைப் பற்றி பேசினார். அவர் தனது பேச்சை ஆரம்பித்தது இப்படித் தான்.

"இந்த புக்கை எழுதியவரு விழியன் ஐயா..விழியன் ஐயா வந்திருக்கீங்களா..இங்க இருக்கீங்களா...."

[அவரு வரல மா...என்று கூட்டத்திலிருந்து பதில் வந்ததும்]

"உங்க புக்கு ரொம்ப நல்லா இருந்துச்சு..ரொம்ப நன்றி ஐயா..."

என்று பேச்சின் துவக்கத்திலே பலரையும் ரசிக்க வைத்தவள். கதையில் வரும் சாமியார் பற்றி வரும் இடத்திலும் அழகாகப் பேசி பல கைத்தட்டல்களை வாங்கினார். இவரது பேச்சு போலவே இவரது உடல் மொழியும் பார்வையும் கூட்டத்துடன் நிறைய உரையாடியது.


15 கதை புத்தக மத்தியில் ஒரே ஒரு பாடல் புத்தகமும் இருந்தது.  பாவண்ணன் அவர்கள் எழுதிய மீசைக்கார பூனை புத்தகம் தான் அது. அந்தப் புத்தகம் சார்ந்து இரண்டு சிறுவர்கள் பேசினார்கள்...இல்லை இல்லை..பாடி அசத்திவிட்டார்கள். முதலில் வந்த சிறுவன் அழகான மெட்டெடுத்து "தன்னா தான" என்று ஆரம்பித்தார். மொத்த கூட்டமும் அவரது பாடலுக்கு தலை ஆட்டி ரசித்தது. அவருடன் இன்னொரு சிறுமி "அப்பாவும் நானும்" என்ற பாடலை பாடினார். அந்தப் பாடல்  பள்ளிக்கு செல்ல மறுக்கும் சிறுவனிடம் அப்பா பேசுவதுப் போல் இருக்கும். அந்தப் பாடலை பாடியதோடு மட்டுமல்லாமல் தனக்கு வீட்டில் இருப்பது தான் பிடிக்கும்,பள்ளிக்கு போக பிடிக்காது அதுக்காக தான் இந்தப் பாடலை பாடிக் காட்டினேன் என்று பாடலை ஒட்டிய தனது மனநிலையை அழகாக‌ பேசி பார்வையாளர்களை அசத்திவிட்டார்.

பார்வை குறைப்பாடுள்ள சிறுவர் ஒருவரும் இதில் பேசினார் அவருக்கு வாசித்துக் காட்டிய நண்பரும் கூட நின்றது மனதிற்கு ஏகப்பட்ட உற்சாகத்தை தந்தது.

புத்தக மதிப்புரை நிகழ்வின் மையம் என்றாலும் "குழந்தைக்களுக்கான கலை கொண்டாட்டம்"  என்ற பெயருக்கு ஏற்றார் போல் பலவிதமான கலை வடிவங்கள் நிகழ்வை அலங்கரித்தது. நிகழ்வின் துவக்கத்திலே விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் குழந்தைகளோடு சின்ன சின்ன உரையாடல் மூலம் நிகழ்விற்கான மனநிலையை உருவாக்கினார். அழகான கதை ஒன்றையும் சொன்னார்.  அதோடு மற்றுமல்லாமல் மொத்த நிகழ்வையும் அழகாக எடுத்துச் சென்றார். அவரது கதை சொல்லலைத் தொடர்ந்து நானும் கதை ஒன்றை சொல்லி கைத்தட்டல்களையும் சிரிப்பொலிகளையும் பரிசாக பெற்றுக் கொண்டேன். அதன் பிறகு அண்ணன் பாலபாரதி அவர்கள் சிறுவர்களை வைத்தே அரங்கினுள் ரயில் வண்டியை வரவழைத்து அசத்திவிட்டார். நண்பர் அறிவரசன் Magic man ஆக தோன்றி சில அறிவியல் விசயங்களை சுட்டிகளுக்கு அறிமுகம் செய்ததோடு சுட்டிகளுக்கு குட்டியாக விளக்கங்களை சொன்னார். இப்படி கொண்டாட்டத்திற்கான சூழல் உருவானதும் சிறுவர்களின் பேச்சு துவங்கியது.

பறை என்றதும் நமது கால் அசையும். அப்படி இருக்கையில் கலை கொண்டாட்டத்தில் பறை இசை இல்லாமல் போகுமா? அவ்வூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் ப‌ள்ளி சார்பில் பறையாட்டம் அரங்கேறியது. சிறுவர்களின் ஆட்டத்திலும் பறை இசையிலும் அரங்கம் அதிர்ந்தது. பறை அதிர அதிர மொத்த கூட்டமும் குத்தாட்டம் போடும் மனநிலையில் இருந்தது. சிறுவர்களின் பேச்சுக்களுக்கு நடுவே பறை ஆட்டம் போட்டுவிட்டு மீண்டும் சிறுவர் இலக்கிய கொண்டாட்டத்திற்கு திரும்பினோம். ஒவ்வொரு குழந்தையும் அழகாக பேசி முடித்ததும் அண்ணன் குமார் அம்பாயிரம் அவர்களின் "டிஜிருடு வாசிப்பு" நிகழ்வு நடந்தது. மொத்த கூட்டமும் அமைதியாகவும் ஆர்வமாகவும் கேட்டு ரசித்தனர்.  அதன் பிறகு நிகழ்விற்கு வந்திருந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. அதனுடன் அங்குவந்திருந்த சிறுவர்களின் பள்ளிகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து "பஞ்சுமிட்டாய்" இதழின் அறிமுகமும் அரங்கில் நடந்தது. பிஞ்சுகளின் கையில் பஞ்சுமிட்டாய் இதழை பார்க்க பார்க்க‌ பேரானந்தமாய் இருந்தது. அடுத்து நிகழ்வில் கடைசிப் பகுதியாக புகிரி அரங்காட்டம் குழுவின் "நாற்காலி" நாடகம் அரங்கேறியது. ஏற்கனவே மதிய உணவு நேரம் எட்டியபோதும் சிறுவர்கள் முழுவதுமாக நாடகத்தினுள் இருந்தனர். நாடகமும் பார்வையாளர்களை தன்னுள் ஏற்றுக்கொண்டிருந்தது. அரங்கம் சிரிப்பொலிகளில் நிறைந்திருந்தது.
மணி இரண்டாகியும் நாடகத்துடன் சிறுவர் ஒன்றி இருந்தது மிகவும் மகிழ்வான தருணமாக இருந்தது.சுருக்கமான நன்றியுரையுடன் குழந்தைக் கலை கொண்டாட்டம் இனிதே முடிந்தது. நல்ல தரமான‌ மதிய உணவு (அசைவம் மற்றும் சைவம்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிறைந்த மனதுடனும் நிறைந்த வயிறுடனும் அனைவரும் கலைந்துச் சென்றோம்.

சிறுவர்கள் மட்டுமில்லாமல் வந்திருந்த நண்பர்கள் பலரும் அன்று உண்மையான‌ கொண்ட்டாட்ட மனநிலையிலே உலாவிக் கொண்டிருந்தோம். அந்த மனநிலையை வெவ்வேறு இடங்களில் பரப்பச் செய்வதுப் பற்றிய பேச்சுகளே நிகழ்வு முடிந்ததும் அந்த அரங்கில் இருந்தது.

நிகழ்வு நிறைய நண்பர்களையும் நிறைய நினைவுகளையும் கொடுத்தது. பாலபாரதி அண்ணனின் திகில் கதைகளும்,அதற்கு அண்ணி கொடுத்த கவுண்டர் வசனங்களும்,விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுடனான உரையாடல்களும், பயணம் முழுக்க எனது மொக்கைகளை தாங்கிக் கொண்ட விக்னேஷ் அவர்களுடனான பேச்சுகளும்,தோழர் மோகன‌ சுந்தரம் அவர்களின் அனுபங்களும் அவர் செய்த சின்ன சின்ன வித்தைகளும்,கூட்டாளி ஜெயகுமார்,சர்மிளா அவர்களுடனான பயணங்களும்,மகேந்திரன் அவர்கள் கொட்டித் தீர்த்த‌ கோத்தகிரியின் கதைளும்,தவமுதல்வனின் வரவேற்பும் எனது டைரி பக்கங்களை நிறைக்க காத்திருக்கிறது.

இந்த நிகழ்வு எப்படி சாத்தியமானது என்று யோசிக்கும் போதெல்லாம்ம் "ஊர் கூடி தேர் இழுப்பது" தான் மனதில் தோன்றுகிறது. இனியன் என்ற ஒற்றை மனிதனின் முயற்சி மூலம் ஒரு ஊரைக் கூட்டி இந்தக் கொண்டாட்டத் தேரை வெற்றிக்கரமாக இழுத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,உதவிய நண்பர்கள்,எழுத்தாளர்கள்,அந்த அரங்கின் உரிமையாளர்,கோத்தகிரியிலுள்ள முக்கிய ஆளுமை நண்பர்கள்,வாகன ஏற்பாடுகள் நண்பர்கள்,ஒளிப்பதிவு செய்த நண்பர்கள்,மதிய உணவு,டீ,சிற்றுண்டி ஏற்பாடு செய்த நண்பர்கள்,புத்தகங்களை நன்கொடையாக அளித்த நண்பர்கள்,பேசிய சிறுவர்களுக்கு வழங்கிய ஃபோட்டோ வரைப்படத்தை ஏற்பாடு செய்த நண்பர்கள்,நிகழ்வை தொகுத்து வழங்கிய நண்பர்கள் என பெயர்களை குறிப்பிடாமலே நன்றி சொல்ல வேண்டிய பட்டியல் பெரிதாக நீளுக்கிறது.

ஒவ்வொரிடமும் பேசி நிகழ்விற்கான அனைத்து விசயத்தையும் ஏற்பாடு செய்து ஒரு திருமணம் போல அலைந்து திரிந்து வெற்றிகரமான நிகழ்வை நடத்தி முடித்திருக்கிறார் . சிறார் இலக்கியத்தை, படைப்புகள் தாண்டி அதனைக் கொண்டு சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பணியின் சாத்தியக் கூறுகளை அவர் கண்டுப்பிடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இதுப் போல் ஏற்கனவே சிலர் முயற்சித்திருக்கலாம் ஆனால் அதனை கதை சொல்லல்,சின்ன விளையாட்டுகள்,நாடகங்கள்,பாரம்பரிய வாத்தியங்கள் என‌ ஒரு அழகான combo வாக மாற்றி வடிவமைத்து அதன் அவசியத்தை பார்வையாளர்களின் மனதிலும் பதித்துவிட்டார். இனியனுக்கு நன்றிகளை அவருடன் தொடர்ந்து பயணிப்பது மூலமே சொல்ல விரும்புகிறேன்.



ஆதலால் தொடர்ந்து பயணிப்போம் இனியா...

நிகழ்வில் சிறுவர்கள் பேசிய புத்தகங்கள்:


  1. பேசும் தாடி-உதயசங்கர்
  2. கிச்சா பச்சா -விழியன்
  3. சுண்டைக்காய் இளவரசன் -யெஸ்.பாலபாரதி
  4. காணாமல் போன சிப்பாய்-விஜயபாஸ்கர் விஜய்
  5. ஸ்பைடர் மேன்- மதுரை சரவணன்
  6. இருட்டு எனக்கு பிடிச்சிருக்கு-ரமேஷ் வைத்தியா
  7. மினர்வக்கு பறக்கத்தெரியாது-மருதன்
  8. வித்தைகார சிறுமி-விஷ்ணுபுரம் சரவணன்
  9. பேய் பிசாசு இருக்கா-உதயசங்கர்
  10. பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி-நீதிமணி
  11. நரியின் கண்ணாடி-அமன்
  12. பேசும் யானையும் பாடும் பூனையும்-கா.விக்னேஷ்
  13. ஒல்லி மல்லி குண்டு கில்லி - மு.முருகேஷ்
  14. தங்கத்தாமரை-செ.யோகநாதன்
  15. மாயக்கண்ணாடி-உதயசங்கர்
  16. மீசைக்கார பூனை-பாவண்ணன்

பெரியர்களுக்காக பேசிய புத்தகம்

  1. கதை கதையாம் காரணமாம்-விஷ்ணுபுரம் சரவணன்


Tuesday, November 14, 2017

ஜன்னலில் ஒரு சிறுமி

குட்டி ஆகாயம் குழுவின் சார்பில் நடந்த குழந்தை வளர்ப்பு சார்ந்த நிகழ்விற்காக "ஜன்னலில் ஒரு சிறுமி" என்ற புத்தகம் குறித்து எனது பார்வை.

வணக்கம் நண்பர்களே,
4 வருடங்களுக்கு முன்பு இந்தப் புத்தகத்தை வாசித்தப் பொழுது எனது பள்ளி நினைவுகளே மனதில் முழுதும் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் தற்பொழுது வாசிக்கும் பொழுது ஒரு தகப்பனாக எனது மகளின்
கல்விமுறையிலுள்ள  சிக்கல்கள் மனதினுள் ஓடிக்கொண்டிருக்கிறது. சிக்கல்கள் மட்டுமல்ல பள்ளியிலுள்ள நல்ல மாற்றங்களையும் புரிந்துக்கொள்ள முடிகிறது.  இந்தப் புத்தகத்தில் வரும் டோட்டா சானின் வயது தான் எனது மகளுக்கும் , ஆதலால் நிறைய விசயங்களை அதனுடன் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. பெற்றோராய் எனது பார்வையை கடந்து எனது சுற்றத்தில் நான் கவனிக்கும் குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி சார்ந்தும் பேச‌ விரும்புகிறேன். இந்தப் புத்தகத்தை ரயில் பெட்டி வகுப்பறையை தாண்டி எடுத்துக்கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய இருப்பதாக கருதுகிறேன். இந்தப் புத்தகம் சார்ந்து நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தப் போது,இதிலுள்ள ஒவ்வொரு பக்கத்தையும் விரிவாக பேசிட வேண்டும் என்றார். என்னளவில் எனக்கு முக்கியத்துவமாக தோன்றிய விசயங்களை இங்கு பேசுகிறேன்.

சுமத்தப்படும் குற்றங்கள்:
செப். கடைசி வாரம் உத்திர பிரதேசத்தில் 11ம் வகுப்புபயிலும் மாணவன் தற்கொலை செய்ய முயற்சி என்ற செய்தி கண்ணில் பட்டது. அந்தச் செய்தி மனதை உறுத்திக்கொண்டேயிருந்தது. ஆம் மனதை உறுத்திக்கொண்டே தான் இருந்தது. ஏனென்றால் அவன் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கிறான் அதுவும் பள்ளி ஆசிரியர்களால். அவன் தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறான். அதுவும் உபி முதலமைச்சருக்கு. அதன் வார்த்தைகள் இவை தான் “Chief minister sir, I am not a terrorist but a student.”  ...ஏன் இந்த வார்த்தைகள்? இரண்டு மாதத்திற்கு முன்பு தான் அந்தப் பள்ளியில் சேர்ந்திருக்கிறான். அவன் ஒரு முஸ்லீம் மதத்தை சேர்ந்தவன் என்பதால் அவன் மீது சந்தேக பார்வையை ஆசிரியர்கள் கொண்டிருக்கின்றனர். அவனது பை தினமும் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. சக மாணவர்களும் யாரும் அவனிடம் பழகுவதில்லை. அவனை வெவ்வேறு சூழலில் ஆசிரியர்கள் தீவிரவாதி என்று சொல்லி ஒதுக்கிக்கொண்டேயிருந்ததால் இந்த முடிவிற்கு தள்ளப்பட்டிருக்கிறான்.
இந்த சம்பத்தை டோட்டோ சான் புத்தகத்தில் வரும் ஒரு சம்பவத்தோட ஒப்பிட முடியும். டோட்டா சான் வகுப்பில் ஆசிரியார் மனிதனின் வளர்ச்சியைப் பற்றி ஒரு பாடம் எடுக்கிறார். அப்பொழுது துவக்கத்திலிழுந்த வால் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் மறைந்துவிட்டது என்று சொல்லி ஆசிரியர் சிறுவர்களை முதுகெலும்பை தொட்டுப் பார்க்க சொல்கிறார். அப்பொழுது ஒரு சிறுவனைப் பார்த்து "என்ன வால் இருக்கா?" என்று சொல்லி சிரிக்கிறார். இது ஒரு சாதாரன சம்பவமாகவே நமக்கு தோன்றினாலும் பள்ளி முதல்வருக்கு அப்படி தோன்றவில்லை. முதல்வர் அந்த ஆசிரியரை தனியாக அழைத்து கண்டிக்கிறார். அந்த ஆசிரியர் வால் இருக்கா என்ற கேட்ட சிறுவன் சற்றே குள்ளமானவன் என்பதால் அவர் வால் என்றதுமே மற்றவர்களோ அல்லது அவனோ குரங்காக நினைக்கலாம் அதுவே தாழ்வுணர்ச்சியாக மாறலாம் என்பதே முதல்வரின் எண்ணம்.
இந்தச் சம்பவம் நிறைய சிந்திக்க வைக்கிறது. இன்று ஒரு குழந்தை மேல் எத்தனை வகையான சின்ன சின்ன‌ குற்றங்கள் வீட்டிலும் பள்ளியிலும் தேவையில்லாமல் சுமத்தப்படுகிறது. "இதை சரியா செய்யல..அத ஒழுங்கா செய்யல. ஏன் இப்படி பண்ண..சொன்னதையே கேட்கிறதில்லை..நான் அப்பவே சொன்னேனா..பாரு அந்தப் புள்ளைக்கும் உன் வயசு தான் ஆகுது...உன்னால் ஏன் செய்ய முடியல" போன்று சுமத்தப்படும் குற்றங்கள் தான் எத்தனை. இந்த மாதிரி சுமத்தப்படும் சின்ன சின்ன குற்றங்களும் அந்தக் குழந்தையின் மனதில் ஏகப்பட்ட தாழ்வுணர்ச்சியை விதைக்கும். சற்றே தள்ளி நின்று ஒரு குழந்தை உள்ளத்துடன் சுமத்தப்படும் இந்தக் குற்றங்களை நாம் பார்த்திட வேண்டும். அப்பொழுது தான் அதன் சுமையையும் வலியையும் தெரிந்துக்கொள்ள முடியும்.

மலையிலிருந்து கொஞ்சம் கடலிருந்து கொஞ்சம்:
அந்தப் பள்ளியின் மதிய உணவு இடைவேளை எனக்கு முக்கியமாக தோன்றுகிறது. தினமும் மாணவர்களின் உணவில் மலை மற்றும் கடலிருந்து கொஞ்சம் இருக்கிறதா என்ற கேள்வியே சிறுவர்களுக்கு உணவின் மீது ஆர்வம் தருகிறது. இந்தப் பள்ளியைப் போன்று தற்பொழுதுள்ள சில‌ பள்ளிகளில் (எனது நட்பு வட்டத்தில்) குழந்தைகளின் உணவின் மீது கவனம் தருகிறார்கள். சிறுவர்கள் யாராவது சிப்ஸ்,பிஸ்கட் அல்லது பேக் செய்யப்பட்ட உணவை எடுத்துப் போனால் உடனே வீட்டில் சமைத்த‌ உணவை அனுப்புங்கள் என்று சீட்டு அனுப்புகிறார்கள். உணவு பற்றின விழிப்புணர்வை சிறுவர்களுக்கு தர வேண்டுமென்ற ஆர்வம் பள்ளிக்கு இருப்பது மகிழ்ச்சி தருகிறது. அதே போல் சிறுநீர் கழிப்பதற்காக செல்வதையும்  சிறுவர்களின்  (குறிப்பாக 3-6 வயது சிறுவர்கள்) விருப்பம் போல் இருப்பதை கவனிக்க முடிகிறது. இது ஒரு நல்ல விசயம்.
ஆனால்  உணவின் இடைவெளியில் சிறுவர்களை (3-6 வயதினர்) சீர்படுத்த முயற்சிக்கிறார்கள். விரைவாக சாப்பிட வேண்டுமென்று  கட்டாயப்படுத்துவதை உணர முடிகிறது. ஆசிரியர் திட்டுவதற்காக தங்களது உணவை அரைக்குறையாக சாப்பிடுகின்றனர். நல்ல உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பள்ளிகள் தனி ஒரு சிறுவர் போதுமான‌ உணவை எடுத்துக்கொள்கிறார்களா என்பதை கவனிப்பதில் சிரமம் எடுத்துக்கொள்வதில்லை. காலை 8 மணிக்கு கிளம்பும் இந்த வயது சிறுவர்கள் மதியம் 1 மணிக்கு தான் வீடு திரும்புகிறார்கள். அந்த சின்ன உணவு இடைவேளை சிறுவர்களின் உணவு பழக்கத்திற்கு முக்கியமானவை. போதுமான நேரம் பள்ளி தருவதில்லை என்று பெற்றோர்கள் குறைப்பட்டுக்கொண்டால்,பள்ளியோ வீட்டில் குழந்தைக்கு சுவையான உணவை சமைத்து வையுங்கள் என்று பதில் தருகிறார்கள். பள்ளி-வீடு இப்படி மாறி மாறி குறை சொல்லிக்கொண்டிருக்கிறோம்.ஆனால் இழப்பும் பாதிப்பும் சிறுவர்களுக்கு தான் என்பதை இருவரும் உணர்ந்திடல் வேண்டும். ஆனால் டோட்டோ சானின் பள்ளியிலோ மெதுவாக சாப்பிடுங்கள் என்று சொல்லித் தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. "Row Row row your boat" பாடலை மெல்லு மெல்லு நல்லா மென்னு சாப்பிடு என்று  பாடலை மாற்றி பாடி சிறுவர்களுக்கு சாப்பிடும் முறையையும் அழகாக  நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

மேடை பேச்சு:
டோட்டா சான் வகுப்பில் உணவிற்கு பின்பு சொற்பொழிவிற்கான நேரம் தரப்படுகிறது. மேடையில் பேசுவதுப் பற்றி பள்ளி முதல்வரின் புரிதல் மிக முக்கியமானது. சிறுவர்கள் அனைவரும் மேடை பேச்சாளராக வேண்டுமென்ற நோக்கில் இந்த நேரம் ஒதுக்கப்படவில்லை ஒவ்வொரும் தங்கு தடையின்றி தங்களுக்கு தோன்றியதை பொதுவில் பேசிட வேண்டுமென்ற நோக்கில் அதை நடத்துவார். தற்பொழுது கல்வி சூழலில் இதை மிக முக்கியமாக பார்த்திட வேண்டும். ஒரு குழந்தை தனது மனதில் உள்ளதை தங்கு தடையில்லாமல் சொல்வது என்பது மிக முக்கியமானது. அது ஒரு நேர்த்தியாகவோ,ஒரு வடிவத்திலோ,ஈர்க்கும் வார்த்தைகளின் அலங்காரத்திலோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பெரியோரின் எதிர்ப்பார்ப்பு வேறு விதமாக இருக்கிறது. இந்த எதிர்ப்பார்ப்பிற்கு பயந்து தான் சிறுவர்கள் தயக்கத்திற்கு உட்படுத்துகிறார்கள்.
மேடை பேச்சு என்றதும் அதன் சார்ந்து எனக்கு கிடைத்த நேரடி அனுபத்தை பகிர விரும்புகிறேன். நானும் நண்பர்களும் நடத்தும் கதை சொல்லல் நிகழ்வில் எங்களுக்கு கிடைத்த அனுபவம் தான் அது. 50-60 பெரியோர் உள்ள கூட்டத்திற்கு முன்பு அங்கு கூடியிருந்த பெரும்பாலான சிறுவர்கள் தாங்களும் கதைகள் சொல்ல வேண்டுமென்று ஆர்வத்துடன் முன்னே வந்தக் காட்சி எங்களுக்கு இன்றும் பிரமிப்பாக இருக்கிறது.  அங்கு கூடியிருந்த‌ பெற்றோரும் மேடை பயம் என்பதே இல்லாமல் தங்களது பிள்ளகள் பேசியதை நினைத்து ஆச்சரியம் அடைந்தார்கள். ஆனால் எங்களுக்கு அதன் ரகசியம் புரிந்திருந்தது. ஆம் மேடை பயம் இல்லாமல் சிறுவர்கள் இருந்ததற்கு காரணம் அந்த இடமும் சூழலும் சிறுவர்களுக்காக இருந்தது, அங்கு எந்தவித அன்னிய தனமும் இல்லாமல் நாங்கள் சூழலை உருவாக்கி வைத்திருந்தோம். மேடை அமைப்பு இல்லை, அலங்காரம் ஏதுமில்லை,மைக் கூட இல்லை. ஆனால் சிறுவர்களுக்கான பாடல்கள்,கதைகள்,விளையாட்டுகள் என அனைத்தும் அவர்களுக்கானதாக‌ இருந்தது. சிறுவர்கள் அனைவரும் அதை தங்களுக்கான சூழல் என்பதை உணர்ந்திருந்தார்கள். அங்கு பேசவோ,பாடவோ எந்தவித கூச்சமோ தயக்கமோ அவர்களுக்கில்லை. ஆனால் பெரியோர்கள் மேடை பேச்சு என்றதுமே மேடை பயம் என்பதை சிறுவர்களுக்கு அறிமுகம் செய்கிறார்கள். மேடை என்றதும் சிறுவர்கள் தங்களது இயல்பு தன்மையை இழக்கும் வகையில் நிறைய விசயங்களை குழந்தைகள் மீது சுமத்துகிறார்கள்.
மேடை பேச்சு என்பதில் மட்டுமல்ல , குழந்தையின் வெவ்வேறு செயலிலும் பெரியோருக்கு நிறைய எதிர்ப்பார்ப்புகள் இருக்கிறது. குழந்தை வரைய துவங்கியதும்,பாட துவங்கியதும்,ஆட துவங்கியதும்,கதை சொல்ல துவங்கியதும் அல்லது வேறு எதையாவது ஆர்வத்துடன் செய்ய துவங்கியதும் அவற்றை தாங்கள் அறிந்த வடிவத்திற்கு மாற்றுவதிலே பெரியோர்கள் பலர் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். சிறுவோர்களின் செயலை அடிக்கடி திருத்துவது,அல்லது ஏதாவது வகுப்பில் கொண்டு சேர்ப்பது (அவர்களின் விருப்பத்தின் மீது கவனம் செலுத்தாமல்) என்று ஆர்வத்தையை குறைக்கும் விதத்தில் நடந்துக்கொள்கிறார்கள். நடன வகுப்பிற்கு சேர்ந்தத‌தும் தனது பிள்ளைகள் நடனம் ஆடுவதை நிறுத்திவிடுவதுப் போன்ற அனுபங்கள் பலவற்றை நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். ஏதாவது இரண்டு வகுப்பில் மட்டும் என்னை சேர்த்துவிடுங்கள் அதற்கு மேல் என்னால் போக‌ முடியாது என்று சொல்லும் சிறுவர்களையும் பார்த்திருக்கிறேன்.
குழந்தைகளின் செயல்களை அவர்களின் வடிவத்திலே அனுமதிப்பது அதன் அழகை ரசிப்பது என்பது ஒரு கலை. அதனை பெரியோர்களாகிய நாம்  முதலில் வளர்த்துக்கொள்வோம்.

விவசாய ஆசிரியர்:
டோட்டா சானின் அவர்களது பள்ளிக்கு அருகிலுள்ள விவசாயியை வகுப்பிற்கு அழைத்து வந்து இவர் தான் தங்களுக்கு பாடம் எடுக்கப் போகும் விவசாய ஆசிரியர் என்று அறிமுகம் செய்வார்கள். அந்தக் காட்சி எனக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. சிறுவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த்திருந்த (அறிமுகமானவர் அல்ல)   அன்றைய வகுப்பிற்கு ஆசிரியர். அவர்களின் சிந்தனைகள் எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நமது கல்வி அமைப்பில் நிலத்திற்கான கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம்  கொடுக்கப்படுகிறது என்பது பலரது கேள்விகளாகவே இருக்கிறது. நமது பிள்ளைகளின் பாடப்புத்தகத்தில் 
Strawberry,kiwi பழங்களுக்கு கூட இடமுண்டு ஆனால் மாம்பழத்திற்கோ,பலாவிற்கோ இடம் கிடைப்பது சற்றே சிரமமாக தான் இருக்கிறது. அருகிலுள்ள விசயங்களைப் பற்றின புரிதல்கள் மீது கவனம் செலுத்தாமல் கடல் தாண்டி இருக்கும் விச்யத்தை சொல்லி தருவதில் ஏன் இந்த அவசரம் என்பது புரியவில்லை. நமது நாட்டில் அச்சிடப்படும் ஆங்கில சிறுவர் இதழில் ஒரு படத்தை கவனித்தேன். மீனவர்களின் உலகை விவரிக்கும் படம் அது. அதில் வேறு நாட்டின் ஆண்களும் பெண்களும் பேண்ட் சட்டைப் போட்டுக்கொண்டு மீன்களை தூக்கிக் கொண்டு நிற்கிறார்கள். இந்தப் படத்தை சிறுவர்கள் பார்க்கும் போது அவர்களுக்கு மீனவர்கள் பற்றி என்ன மாதிரியான புரிதல்கள் கிடைக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. உண்மைக்கும் சிறுவர்களுக்கான புத்தகத்திற்கும் ஏன் தேவையில்லாத இடைவேளையை நாம் உருவாக்குகிறோம். கற்றலுக்கு எதிர்விதமாக நான் பயணிப்பது போல் இருக்கிறது.

பள்ளி நிகழ்வுகள்:
இந்தப் புத்தகத்தில் வரும் பள்ளி நிகழ்வுகள் குறிப்பாக பரிசாக அங்கு தரப்படும் காய்கறிகள் எனக்கு இன்றைய பள்ளி நிகழ்வுகள் சார்ந்து எண்ணங்களை ஓடச்செய்கிறது. இன்றைய பள்ளிகள் முடிந்தவரை தங்களது நிகழ்வுகளில் அனைத்து சிறுவர்களும் பங்குபெற வேண்டுமென்று நினைக்கின்றனர். அதற்கு தகுந்தாற்போல் நிகழ்வுகளை வடிவமைக்கின்றனர் என்பது மகிழ்வாக இருக்கிறது. ஆனால் பள்ளி நிறுவனங்கள் பெற்றோர்களை கவர்வதிலே முக்கியத்துவம் காட்டுவதாக தோன்றுகிறது குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறார்களா என்று யோசிக்க வைக்கிறது. எனது மகளின் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளிலும் சுதந்திர தின விழாவில் கொடி ஏற்றப்படுவதை அதிகமான சிறுவர்கள் பார்க்கவேயில்லை. அவர்கள் நிகழ்ச்சியில் பங்கெடுப்பதாலும் திடீர் மழையாலும் அனைத்து சிறுவர்களையையும் பெற்றோர்களின் இருப்பில் கையாள்வதில் நிர்வாகத்திற்கு உள்ள சிக்கல்களாலும் என்று காரணங்கள் பல. ஏற்கனவே சொன்னதுப் போன்று எதுவாக இருந்தாலும் இழப்பு என்னமோ சிறுவர்களுக்கு தான். அடுத்து அந்த நிகழ்வுகளில் மேடையில் பேசும் சிறுவர்களின் உரை சிறுவர்களுக்கானதாகவே இருப்பதில்லை. பத்து வயது சிறுவருக்கு வயதிற்கு மீறிய கருத்துக்கள் கொண்ட உரையை தரப்படுகிறது. சுதந்திரம் பற்றின புரிதல் பத்து வயது சிறுவருக்கு என்னவாக இருக்கும், நாட்டின் சுதந்திரம் சார்ந்து ம‌னதில் உள்ளதை அப்படியே பகிர அனுமதித்திருந்தால் அந்த உரை எப்படி இருக்கும் என்று ஏன் பள்ளி நினைத்து பார்ப்பதில்லை என்ற கேள்வி எனக்கு எப்பொழுதும் உண்டு. பெரியோர்கள் தயாரித்து அதை மனனம் செய்து ஒப்பித்த சிறுவரின் உரையால் யாருக்கு என்ன கிடைக்கிறது. சிறுவர்களின் மனனம் செய்யும் திறனையும் மொழி உச்சரிப்பு திறனையும்  வேண்டுமானால் நினைத்து நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். பள்ளி நிகழ்வுகள் தான் சிறுவர்களின் நினைவுகளில் நீண்ட நாட்கள் வாழப்போகிற ஒன்று. கொஞ்சம் திட்டமிடலும் அக்கறையும் எடுத்துக் கொண்டால் போதும் இதனை அழகாக வடிவமைக்கலாம். சினிமா பாடல்கள் தாண்டி மத ஒற்றுமை என்று சொல்லி நாம் வழக்கமாக போடும் நாடகங்கள் தாண்டி குழந்தைகள் அனுபவிக்கும் நிகழ்வுகளை உருவாக்கிட முடியும்.

பேய் இருக்கா:
அந்தப் பள்ளியில் ஒரு விளையாட்டு நடந்தேறியது, அது பேய் விளையாட்டு. ஆம் சிறுவர்கள் சிலர் பேயாக வேடமிட்டு சுடுகாட்டில் ஒளிந்துக்கொள்கின்றனர். மற்ற சிறுவர்கள் தைரியமாக சுடுகாட்டிற்கு சென்று அங்கிருக்கும் பேய்களை பார்த்து வர வேண்டும். அதிகமான சிறுவர்கள் சுடுகாட்டிற்கு கிட்ட வரை சென்று தைரியமாக திரும்பிவிட்டனர், ஆனால் யாரும் பேயை கண்டுப்பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் பயந்திருந்த சிறுவர்கள் அவ்வளவு தூரம் சென்று வந்ததும் தைரியமாக இருந்தனர். பேய் பற்றின அவர்களின் பயம் இனி சற்று விலகியே இருக்கும் என்று அந்தப் புத்தகத்தின் பகுதி நகர்கிறது.
இந்த பேய் பயம் நமது சிறுவர்கள் மத்தியில் எப்படி இருக்கிறது. ஏதோ ஒரு பயம் சிறுவர்களுக்கு வேண்டுமென்று சொல்லியே பூச்சாண்டிக்கும் போலிசுக்கும் அல்லது ஏதோ ஒன்றிருக்கு வீட்டில் பயம் மூட்டி வைத்திருக்கின்றனர் பெற்றோர்கள் பலர். தற்பொழுது தொலைக்காட்சியின் மூலம் பேய் பற்றின பயம் சிறுவர்களுக்கு உருவாகிக்கொண்டிருக்கிறதை கவனிக்க முடிகிறது. அதிகமான சீரியல்கள் பேய்,ஜோசியம்,மந்திர சக்திகள் என்று பயணித்துக் கொண்டிருக்கிறது. சிறுவர்கள் எங்கு சீரியல்கள் பார்க்கிறார்கள் அப்படியே அவர்கள் பார்த்தாலும் இதெல்லாம் புரியாது என்று நினைத்தால் நமக்கு தெரிந்தது அவ்வளது தான். நிறைய சிறுவர்கள் சீரியல்களை தொடர்ந்து பார்க்கிறார்கள். டிவி நிகழ்ச்சிகளை பொறுத்தவரை பார்வையாளராக பெரியோரின் பார்வையும் சிறுவர்களின் பார்வையும் வேறுபடுகிறது. சிறுவர்களின் கவனிப்பு மேலோட்டமானது அல்ல. உலகம்,வாழ்வு பற்றின புரிதல்களை பார்ப்பதிலிருந்து அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். பெரியோர்கள் சீரியல்களை பார்க்குபோது அருகிலிருந்து பார்க்கும் சிறுவர்கள் அதிலிருந்து நிறைய விசயங்களை புரிந்துக்கொள்கிறார்கள். 5 வயது சிறுவர்களால் கூட சீரியல்களில் வரும் குடும்ப உறவுகளை தெள்ளத் தெளிவாக சொல்ல முடிகிறது. வேறு நாடகத்தில் அதே நடிகர்கள் வரும்போது அவர்களுடன் நடிக்கும் மற்றவர்கள் எங்கே என்று கேட்கிறார்கள். போலீஸ் என்றாலே அதில் நல்ல போலிஸ் கெட்ட போலிஸ் உண்டு என்று தான் சீரியல்கள் மூலம் புரிந்து வைத்திருக்கிறார்கள்.விஷம் கலந்து வரும் சீரியல்கள் பெரியர்களுக்கு வேண்டுமானால் பொழுதுபோக்கு என்று சொல்லிக்கொள்ளலாம் ஆனால் அது உண்மையில் சிறுவர்களின் உலகில் வேறு.
சமீபத்தில் வடநாட்டு சீரியல் குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் வகையில் காட்சிகள் இருந்ததால் நிறுத்தப்பட்டது. நமது தமிழக சீரியலின் போக்கு ஏற்கனவே கொடுமையாக இருக்கும் தற்பொழுது மரணக் கொடுமையாக இருக்கிறது. மூடநம்பிகைகளை வளர்க்கும் வண்ணம் காட்சிகளும் கதைகளும் நிறைந்துகிடக்கிறது. கருவை எப்படியெல்லாம் கலைப்பது என்பதை நமது சீரியல்களில் அழகாகவும் தெள்ளத் தெளிவாகவும் ஏதோ  ஒரு சானலில் எப்பொழுதும்  சொல்லிக்கொடுக்கிறார்கள். இறந்துப் போனதாக கருதப்படுப‌வர்கள் உயிரோடு தான் இருக்கிறார்கள் என்று ஜோசியர்கள் சரியாக சொல்லிவிடுகிறார்கள். ஏகப்பட்ட பேய் நாடகங்களும் ஏகப்பட்ட சாமி நாடகங்களும் (பெயரளவில் சாமி நாடகங்கள் என்று சொல்லிக்கொண்டு) பெருகிக்கொண்டே இருக்கிறது. இரண்டுமே நல்ல சமூகத்திற்கு தேவையானதா என்று சிந்திக்க வேண்டும். உண்மையில் பேய் என்று இந்த உலகில் ஏதாவது உண்டென்றால் அது டிவிப் பொட்டியாக தான் இருக்க வேண்டும்.

நன்றி:
டோட்டா சானின் அம்மாவின் புரிதல்கள்,ரயில் பட்டி ஒன்றை எடுத்து வரும் தினம் அன்று சிறுவர்கள் காத்திருந்தது,6 வயது சிறுமி தனியாக தினமும் பள்ளிக்கு ரயிலி வருவது,சூப் வைக்கும் நிகழ்வு,நிர்வாணமாக‌பள்ளியில் அனைத்து சிறுவர்களும் குளிப்பது,உடல் குறைபாடுள்ள சக நண்பன் பற்றியது என பேச வேண்டிய விசயங்கள் நிறைய இருந்தாலும் எனக்கு தற்பொழுது முக்கியமென தோன்றியதை மட்டுமே பகிர்ந்துள்ளேன். டோட்டோ சானின் வெற்றி என்பது நாம் ரெயில் வகுப்பறையை உருவாக்குவதில்லை , டோட்டோ சானுக்கு பள்ளியில் கிடைத்த அந்த உணர்வை அந்த மகிழ்வை அந்த அனுபத்தை நமது குழந்தைகளுக்கு ஏற்படுத்தவதில் தான் உள்ளது என்பதே எனது பார்வை.










Thursday, October 26, 2017

இது எங்கள் வகுப்பறை

ஒரு ஆசிரிய‌ராய் தனது சுற்றத்தில் முழு சக்தியை பயன்படுத்தி மாணவர்களுக்கு விரும்பும் வகையில் கற்றலை மாற்றியிருப்பதற்காகவும் அதனை இலக்கியத்திற்கு கொண்டு வந்ததாற்கவும் முதலில் எனது வாழ்த்துக்களை தோழி சசிகலா அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புத்தகத்தை வாசிக்கும் பொழுது இரண்டு புத்தகங்கள் எனது மனதிற்குள் வந்து வந்து சென்றது. அவை "பகல் கனவு" மற்றும் "ஜன்னலின் ஒரு சிறுமி" புத்தகங்கள். கல்வி துறையில் இவை இரண்டுமே முக்கியமானதாய் கருதப்படும்  புத்தகங்கள். பெற்றோர்,ஆசிரியர்கள்,சமூகம் இந்த மூவருக்கும் குழந்தை வளர்ப்பில் மிக முக்கிய பங்குண்டு. அதில் "இது எங்கள் வகுப்பறை" என்ற‌ இந்தப் புத்தகம் ஆசிரியரின் பங்கினை எவ்வாறெல்லாம் திறமையாகவும்,சிறப்பாகவும் செய்ய முடியுமென்பதை எடுத்துக்காட்டுகிறது.

மாணவர் பருவத்தில் ஆசிரியருடன் நெருங்கி உறுமையுடன் பழகிவிட்டால் போதும்,அந்தக் குழந்தை தனது முழு ஆற்றலையும்,கற்றல் என்பதன் உண்மையான சுவையையும் அனுபவத்திட‌ முடியும். அப்படி தனது மாணவர்களுக்கு சூழலை அமைத்திட நினைத்து அதனை செயல்முறை படுத்திய அனுபவம் தான் இந்தப் புத்தகம். பள்ளி வரலாற்றுடன் புத்தகம் துவங்குவது மகிழ்ச்சியை தருகிறது. தனது வகுப்பறை அனுபவத்தை அழகாக பகிர்ந்துள்ளார். அவரது எழுத்துக்கள் மூலம் அந்த வகுப்பறையின் நிகழ்வுகளை காட்சிகளாக ஓட்டிப்பார்க்க முடிகிறது. எனது பிள்ளைக்கும் இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பை உண்டாக்குகிறது.

சிறுவர்கள் எப்பொழுதும் செயல்பாடுகளையும்,அதிலுள்ள பொறுப்புகளையும் ரசிக்கின்றனர். வீட்டில் கூட பெரியவர்கள் செய்யும் வேலைகளில் தங்களுக்கு ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கத்துடனையே இருக்கின்றனர். "இதெல்லாம் பெரியவங்க வேலை" என்ற வாக்கியத்தை அவர்கள் அதிகம் வெறுக்கின்றனர். சமைக்கும் போதும்,வீட்டை சுத்தம் செய்யும் போதும்,கடைக்கு செல்லும் போதும்,தோட்டத்தில் நாம் இருக்கும் போதும் இதை நன்றாக கவனிக்கலாம். இதுப்போன்ற சூழலில் அவர்களுக்கு கிடைக்கும் சிறிய பொறுப்புகளை முழு ஈடுபாடுகளுடன் செய்து முடிக்கின்றனர். அதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் கற்றலை வகுப்பறையில் அமர்ந்துக்கொண்டு வார்த்தைகள் கொண்டு அறிமுகம் செய்வதென்பது மிகவும் கடினமானது. அதைவிட சின்ன சின்ன செயல்பாடுகள் கொண்டு கற்றலை இயற்கையாய் ஏற்படுத்தினார் என்பதை வாசிக்கும் போது அழகாக இருந்தது.

ஒவ்வொரு பாடத்திற்கும் புதுப்புது பெயர்கள் சூட்டி அதன அனுபவத்தினை குழந்தைகள் எழுத்துகளாய் மாற்றும் முயற்சி மிகவும் சிறப்பானது. அதுவும் தோட்டம் அமைப்பதற்கான அத்துனை முயற்சிகளும் மிகப்பெரிய பாராட்டுகளுக்குறியது. புழு எப்படி பூச்சியாக மாறும் ? இந்த சந்தேகத்தை அவர் ஒவ்வொருவருக்கும் புரியும் படி செய்த செயலும் மிகவும் அருமையானது.

ஜட்டி போடாமல் வரும் 1ம் வகுப்பு சிறுமியை கையாண்ட விதம் என்னென்ன கேள்விகளை மனதினுள் எழுப்புகிறது. குழந்தையுடன் சற்று இறங்கி பேசும்பொழுது மாற்ற முடியாத சில விஷயங்களை எவ்வள்வு எளிமையாக மாற்றிட முடியும் என்பதை காணமுடிகிறது.

முட்டை எலும்புக்கூடு, பானை ஓவியம், வாட்டர் கேன் செடி தோட்டம்,#tense கதை,கத்தரிக்காய் ராஜா பாடலும் நாடகமும்,பம்பரம்,கிளி பாடல்,அந்த ஐந்து குழுக்கள்,அவர்கள் வரைந்த ஓவியங்கள்,ஜூஜூ கடிதங்கள் என அனைத்தும் காட்சிகளாய் மனதில் ஓடுகிறது. அதுவே இந்தப் புத்தகம் பெற்ற வெற்றியென நினைக்கிறேன்.

அவரது ஒவ்வொரு செயல்பாட்டிலும் 4-5 சிறுவர்கள் ஒட்டாமல் இருப்பதை ஆங்காங்கே சொல்கிறார். அது இயற்கையானதே அதை பதிந்தது மிக முக்கியமான ஒன்று. ஆனால் அதை சார்ந்து ஆசிரியரின் மன ஓட்டத்தை பதிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு இடத்தில் சிறுவர்களை சற்றே கடிந்துக்கொள்கிறார். ஆனால் அடுத்த நிமிடத்தில் சிறுவர்கள் வேறு எதோ செய்ததும் அன்புடன் பழகிக்கொள்கிறார். இந்தச் சம்பவத்தை முழுவதும் பதிந்திட வேண்டும் என்று தோன்றுகிறது. அதிக சுதந்திரம் சிறுவர்களுக்கு தேவையில்லை என்பதை இந்த சமூகம் பெரிதாக நம்புகிறது. அந்த நம்பிக்கையால் குழந்தையை எப்பொழுதுமே தெரிந்தும் தெரியாமலும் கடிந்துக்கொண்டேயிருக்கிறது. அந்த மனநிலையை மாற்றுவதற்கு இதுபோன்ற சிக்கல்களை கையாளும் விதத்தைப் பற்றி முழுவதுமாக பேச வேண்டும். அது நிறைய நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

தோழியின் முயற்சிகளுக்கு மீண்டும் பெரிய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் வகுப்புகள் தாண்டி அந்தப் பள்ளி முழுவதும் இதுப்போன்று மாறிட வேண்டும். மற்ற பள்ளிகளும் உங்களைப் பார்த்து மாணவர்கள் ஆர்வம் சார்ந்து இயங்கிட வேண்டும். அதற்கு இந்தப்புத்தகம் உதவும் என்று நம்புகிறேன். பெற்றோர் பார்வையிலிந்து புத்தகத்தை வாசிக்கும் போது ஆசிரியர்கள் சந்திக்கும் சவால்களையும் அதற்கான அவர்கள் செய்யும் முயற்சிகளையும் நன்றாக புரிந்துக்கொள்ள முடிகிறது.

 விதை முதல் விருட்சம் வரை என்று குழந்தைகளின் அனுபவ பதிவுகளை அழகாக தொகுத்து புத்தகமாக கொண்டு வரவேண்டும் என்று அன்புடன் தோழியிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இறுதியாக..இது யாருடைய வகுப்பறை? என்ற ஆயிஷா.நடராசன் கேள்விக்கு விடை தந்திருப்பதுப் போல் இருக்கிறது தலைப்பும் புத்தகமும். அதற்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள்.

Tuesday, October 24, 2017

குழந்தைகளை தேவையில்லாமல் திட்டாதீர்கள்

குறிப்பு : நேற்றைய வா.மணியின் குழந்தைகளைத் திட்டுங்கள்
 பதிவிற்கு எதிர்வினையாகவே இந்தப் பதிவை எழுதுகிறேன்.

"ஐந்தில் வளையாதது ஐம்பில் வளையாது" , "அடி உதவுது போல் அண்ணன் தம்பி உதவதில்லை" இந்த இரண்டு பழமொழிகள் தான் தமிழக பெற்றோருக்கு தாரக மந்திரம். குழந்தைகளுக்கு கண்டிப்பு தேவையென்பதே அனைவரின் வாதம். ஆம் கண்டிப்பு தேவை தான், இல்லை என்று யாரும் மறுக்கவில்லை. ஆனால் கண்டிப்பு பற்றின புரிதல் ஒவ்வொருக்கும் வேறுபடுவதே இங்கு பிரச்சனையாக கருதுகிறேன்.


  • லேசான முறைப்பு
  • குரல் உயர்த்தி பேசுவது
  • திட்டுவது
  • வேண்டாம் என்பதை அழுத்தமாக சொல்லுவது. அன்புடன் நிராகரிப்பது என்று வைத்துக்கொள்ளலாம்.
  • மிரட்டுவது
  • அடிப்பது - இந்த அடிப்பதில் கூட பல வகைகள் உண்டு.


இவை அனைத்துமே கண்டிப்பு என்ற ஒரே போர்வையில் தான் உள்ளது. அடுத்து எதற்காக கண்டிக்கிறோம் லேசான குறும்பு முதல் உயிர் போகும் ஆபத்து வரை அனைத்து செயலுமே இதில் மேம்போக்காக அடங்குகிறது. இவை அனைத்தையும் வகைப்படுத்தி பேச வேண்டும். ஆனால் நேற்றைய வா.மணியின் பதிவு மிகவும் மேலோட்டமானதாக தோன்றியது. அதனால் என்ன? என்று கேட்கலாம். வா.மணியின் பதிவு சரியானது என்று பல பெற்றோர்கள் அவரது முகப்புத்தக கமெண்டுகளிலும் , பல வாட்ஸ்-ஆப் குழுமங்களிலும் பேசுவதை கவனிக்க முடிந்தது. ஆதலால் தான் இந்தப் பதிவு என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன்.

அவரது பதிவை ஏன் மேலோட்டமானது என்று சொல்கிறேன்?

1. //இப்பொழுது ஐரோப்பிய தேசமொன்றில் மனோவியல் ஆலோசகராக இருக்கிறார். வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும். திருமணம் செய்து கொள்ளவில்லை. தனிக்கட்டை.

எப்பொழுதாவது இந்தியா வந்து போகிறார். ‘தற்கால இந்தியக் குழந்தைகளின் மனநிலை’ குறித்து ஓர் ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருக்கிறாராம். அதற்கு தோதாகக் கடந்த சில நாட்களாகச் சேகரித்த செய்திகள் அவை. //

மன ஆலோசகரின் வாதத்தை மையமாக வைத்தே மணி நேற்று பேசியிருந்தார். ஆனால் அவரது பெயர்,வேலை தவிர வேறு எந்த தகவலையும் நமக்கு தரவில்லை. அதுவும் இந்திய மண்ணில் தற்பொழுது அவர் இல்லை. ஆனால் இந்திய குழந்தைகள் பற்றி ஆராய்ச்சி செய்பரவாக குறிப்பிட்டிருந்தார். குழந்தைகளோடு பழகாமல் எப்படி குழந்தைகள் பற்றி ஆராய்ச்சி செய்ய முடியும். இந்த நில சூழலை ஆராய வேண்டுமென்றால் அவர் இங்கு தானே இருக்க வேண்டும். இந்தக் குழந்தைகளோடு பழகி தான் அவர் ஆராய வேண்டும். அது தானே இந்தத் துறைக்கு சரியானதாக இருக்கும்?

எங்கோ அமர்ந்துக் கொண்டு செய்தித்தாள்களின் துண்டுகளை வைத்து பேச முடியுமா. செய்தி தாள்களில் வரும் செய்திகள் முழுமையானதா ? களப்ப‌ணி தானே இங்கு முக்கியம். அப்படி செய்திகளை  முழுமையாக நம்பலாம் என்றால் நானும் ஒரு செய்தி பகிர்கிறேன். கண்டிப்பால வந்த வினை என்று இதனை எடுத்துக்கொள்ளலாமா?



2.//குழந்தைகளைத் திட்டுவதில்லை என்பதை பல பெற்றோர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வதுண்டு. நானும் கூட அப்படித்தான்.//

குழந்தைகளை திட்ட வேண்டாம் என்று சொல்வோரை பெருமையாக சொல்பவர்கள் என்று ஏன் குற்றம் சுமத்தம் வேண்டும். அதன் அவசியம் என்ன. திட்ட வேண்டும் என்று சொல்வதைப் போன்று திட்ட வேண்டாம் என்று சொல்வதும் ஒரு புரிதலாக இருக்கலாம் அல்லவா? ஒரு வில்லன் கதாப்பாத்திரத்தை வடிவமைத்தாக இருந்தது இந்த வரி.

3. உங்க தலைமுறையில் இப்படி இருந்தீங்களா?

ஒரு தற்கொலையை திட்டுவதுடன் முடிச்சுப்போட்டு அப்படியே தலைமுறையுடம் சேர்த்துவிட்டார். சென்று தலைமுறையில் நாம் எப்படி இருந்தோம் என்பதை முழுவதுமாக ஆராய வேண்டும். நாம் வீட்டில் இருந்ததை விட வீதிகளில் திரிந்தது தான் அதிகம். ஆண்-பெண் பேதமில்லாமல் திரிந்திருப்போம் என்று இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும். அதிகமாக சக வயதினோரோடு விளையாடி இருப்போம். அண்ணா-அக்கா விளையாட்டுகளில் உப்புக்-சப்பாணியாக சேர்ந்து விளையாடிருப்போம். அதில் எவ்வளவு கற்றல் உள்ளது என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். விளையாட்டுகளை பெற்றோர்கள் கற்றுக் கொடுத்ததை விட சக வயதினோரோ அல்லது 2-3 வயது மூத்தவர்கள் கற்றுக் கொடுத்ததோ தான் அதிகமாக இருக்கும். அங்கு வெற்றி-தோல்வி சகஜமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு சமீபத்தில் நான் நேரில் கண்ட ஒரு சம்பவத்தை குறிப்பிட விரும்புகிறேன். [சென்னையில் வேலு சரவணன் அவர்கள் நடத்திய விளையாட்டு-அவரிடம் கூட இதைப் பற்றி பேசி பார்க்கலாம். கிட்டத்தட்ட 60 சிறுவர்கள் இருந்தனர்]

சிறுவர்களுக்கான Treasure hunt நிகழ்வை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. சிறுவர்களுக்கு புரியும் வகையில் Clueக்கள் அமைந்திருத்தார்கள். எளிமையான தமிழ் வார்த்தைகள் , சற்றே சிந்திக்கும் வகையிலும் இருக்கும் சிறிய இடத்தில்  யோசித்து யோசித்து  Clueக்களை மறைத்து வைக்கும் இடத்தினை தேடி அழகாக‌ அமைத்திருந்தார்கள். ஆனால் விளையாட்டு துவங்கியதும் அருகிலிருந்த பெற்றோர்கள் Clueக்களுக்கான விடைகளை தங்களுக்கு பிள்ளைகளை அழைத்து சொல்லிவிட்டனர். "பெற்றோர்கள் தயவு செய்து உதவ வேண்டாம்" என்று பல முறை குழுவினர் கத்தியும் அதை பெற்றோர்கள் பொருட்படுத்தவேயில்லை. ரகசியமாக தங்களது பிள்ளைகளுக்கு உதவுவதிலே ஆர்வம் காட்டினர்...பேசாமல் பெற்றோர்களை இந்த விளையாட்டிற்கு அழைக்காமல் வேறு இடத்தில் அமர வைத்திருக்கலாம் என்று குழுவினர் யோசிக்கும் அளவிற்கு பெற்றோர்கள் ப‌டுத்திவிட்டனர்.

இந்தச் சம்பவம் என்ன சொல்கிறது. ஒரு சகஜமான விளையாட்டில் கூடு தனது பிள்ளைகள் முன்னோக்கி நிற்க வேண்டும் என்ற ஆசையை குழந்தைக்கு கடத்தியது யார் என்பதை யோசிக்க வேண்டும். நாம் தான் வெற்றிகளை தூக்கி தலையில் வைத்து கொண்டாடியதால் தான் தோல்வியை கண்டு துவண்டுப் போகிறார்கள்.

சிறுவர்களை வெளி உலகுடன் பழக செய்ய வேண்டும்,அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு அவர்களே விடை தேட வைக்க வேண்டும். அது தான் முக்கியமென நான் கருதுகிறேன்.

4. //பள்ளிகளிலும் கண்டிப்புகள் இருப்பதில்லை. அம்மா அப்பாவும் செல்லம் என்ற பெயரிலும் தடித்த சொற்களைப் பயன்படுத்துவதில்லை//

சமீபத்தில் இதேப் போன்று ஒரு செய்தியை ஒரு ஆசிரியர் பகிர்ந்திருந்தார். பிரம்பால் அடிக்காததால் தான் மாணவர்கள் தவறான வழியில் செல்வதாக. ஆனால் உண்மை அதுவா என்று யோசிக்க வேண்டும். கண்டிப்பு என்பது கற்றலுக்கு எதிரானது என்று பல கல்வியாளர்கள் சொல்லியிருப்பதை கவனிக்க முடிக்கிறது.

[நான் வாசித்த சிலப் புத்தகங்கள்]


  • குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் - ஜான் ஹோல்ட்
  • பகல் கனவு
  • ஜன்னலில் ஒரு சிறுமி
  • எனக்குறிய இடம் எங்கே - ச.மாடசாமி
  • என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா - ச.மாடசாமி
  • குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் - பெ.தூரன் (https://archive.org/stream/orr-3197/KuzhanthaiManamumAthanValarchiyum?ui=embed#page/n0/mode/2up )
  • இறுதிச் சொற்பொழிவு
  • இது எங்கள் வகுப்பறை -சசிகலா


இந்தப் புத்தகங்கள் அனைத்திலும் பல சம்பவங்கள் உள்ளது. பள்ளியிலும் வீட்டிலும் கிடைத்த  அன்புகள், தவிர்க்கப்பட்ட தேவையில்லாத‌ கண்டிப்புகள் பலரது வாழ்வில் பெரிய மாற்றங்களை உருவாக்கியது என்று பல உதாரணங்கள் உண்டு. குறிப்பாக இது எங்கள் வகுப்பறை புத்தகத்தில் ஜட்டி போடாமல் ஆறு வய‌து சிறுமி வருவாள். பல கண்டிப்புகளுக்கு மாறாத அவள் ஆசிரியர் ஒருவரின் அன்பான விசாரிப்புக்கு மாறுவாள். அதேப் போல் மாடசாமி ஐயா அவர்களின் புத்தகங்களிலும் அன்பாக பேசியதால் வகுப்பில் கற்றல் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதை விரிவாக பேசியிருப்பார்.

மற்றுமொரு முக்கியமான விடயம் , செல்லம் என்பதை திட்டுவதற்கு எதிர்பதமாக மணி உபயோகித்திருக்கிறார். ஆனால் உண்மை அதுவல்ல. திட்டாமல் இருப்பது வேறு செல்லம் கொடுப்பது வேறு என்பதை நாம் தெளிவாக வேறுப்படுத்தி பார்க்க வேண்டும்.

5. //வீட்டில் குழந்தைகளுடன் இருக்கும் போது ஒரு முறை அழைத்துப் பார்த்தால் குழந்தைகளின் கவனம் நம் பக்கம் திரும்பவில்லையெனில் ‘டேய்’ என்று சற்றே அதட்டுவதில் தவறொன்றுமில்லை.//

இங்கும் சிலப் புரிதல்கள் வேண்டும். நாம் அழைத்தால் குழந்தைகள் ஏன் திரும்பிப் பார்ப்பதில்லை. இதை மூன்று வகையாக நான் பார்க்கிறேன்.

  • அவர்கள் மும்முரமாக வேறு வேலையிலோ-விளையாட்டிலோ ஈடுப்பட்டிருக்கலாம்
  • அவர்கள் அழைத்தப் போது நாம் திரும்பாமல் இருந்திருக்கலாம்,அதையே அவர்கள் திரும்பி செய்யலாம்.
  • வேண்டுமென்றே திரும்பாமல் இருக்கலாம்


சிறுவர்களுக்கு முக்கியமாக எந்த வேலையும் கிடையாது என்று நாம் நினைக்கிறோம். நமக்கு நமது வேலைகள் போன்று அவர்களுக்கு அவர்களது வேலைகள். அவர்களது வேலையின் முக்கியத்துவத்தை நாம் கவனித்திருக்கோமா?அவர்கள் அழைத்து நாம் எத்தனை முறை திரும்பாமல் இருந்திருப்போம்.?

கண்டிப்பு என்ற‌ இந்தத் தலைப்பில் மிகவும் விரிவாக விவாதிக்க வேண்டும். எந்த வயதினருக்கு என்ன மாதிரி கண்டிப்புகள் எந்த விடயங்களுக்கு என்று யோசிப்பதில் தவறேதுமில்லை. மணியின் பதிவில் கமெண்டுகளை படித்தால் பதறுகிறது. மணி சொல்வதை ஆதரவு செய்து தங்களது வீட்டிலும் கண்டிப்பு உண்டு சில நேரங்கள் அடிப்போம் என்று கூட எழுதியிருந்தார்கள். சிலர் ஐந்து வயது சிறுவர்களுக்கு கண்டிப்பதாக சொல்லியிருந்தார்கள். இவை அனைத்துமே விவாதிக்க வேண்டிய விடயம் தான்.

ஒரு நாளில் நமது பிள்ளைகளின் செயல்களை எத்தனை திருத்தங்கள் செய்கிறோம் என்று கவனித்துப் பாருங்கள். அவர்களின் செயல்பாடுகளில் சுயமாக செய்யவிடாமல் எத்தனை தடைகள் போடுகிறோம் என்று எட்ட நின்னு பார்க்க வேண்டும். இவை அனைத்துமே குழந்தைகளை நல்வழிப்படுத்துவதின் ஒரு அம்சமே. அதே அம்சம் தான் இந்தக் கண்டிப்புக்கும் உள்ளது.

ஆகையால் தேவையில்லாமல் குழந்தைகளைத் திட்டாதீர்கள். 

Monday, January 2, 2017

வாசிப்பு 2016 - பாரதியியல்

சீனி.விசுவ‌நாதன்,பாரதியியலில் மிக முக்கியமானவர்.பாரதி படைப்புகளை தேடித் தேடி சேர்த்தவர். தி ஹிந்துவில் வந்திருந்த இவரது பேட்டியை வாசித்ததிலிருந்து நேரில்  சந்திக்க வேண்டுமென்ற ஆர்வம் தொற்றிக் கொண்டது. சென்னைக்கு சென்றபொழுது வாய்ப்பும் அமைந்தது.

பாரதி படைப்புகளுக்காக அவர் தேடி அலைந்த கதைகளைக் கேட்க ஆசைப்பட்டேன் , ஆனால் அவரோ என்னைப் பற்றியும்  எனது வேலையைப் பற்றியும்,வாசிப்பதற்கான நேரம் ஒதுக்குவதைப் பற்றியும்  நிறைய கேட்டார்.  நாள் முழுதும் கணிணியில் அமர்வோர்களால் வாசிப்பது சிரமம் தான் என்றும் கவலை கொண்டார். தனது மனைவியின் இறப்பிற்கு பின்பு எழுதுவதுமில்லை வாசிப்பதுமில்லை என்றார். அதை கேட்கவே சங்கடமாக இருந்தது. பாரதியின் படைப்புகள் சார்ந்து இன்னும் நிறைய வெளிவர வேண்டியிருக்கிறது,போதுமான ஆட்கள் தான் இல்லை என்றார். யதுகிரி அம்மாள் மற்றும் பாரதிதாசனின் பார்வை பற்றியும்,வடமாநில தலைவர்கள் சென்னையில் நடத்திய உரைகள் சார்ந்தும் சில விஷயங்களைச் சொன்னார். நான் பாரதியியல் சார்ந்து வாசித்திருந்த ஆதவன் எழுதிய "புழுதியில் வீனை" மற்றும் ய.மணிகண்டனின் புத்தகங்கள் பற்றியும் பேசினேன். எங்களது இரண்டு மணி நேர உரையாடல் பாரதிக்கும் பெங்களூருக்கும் மாறி மாறி சென்று முடிவுற்றது.

நீண்ட நாட்களாகவே சீனி.விசுவநாதன் அவர்களின் காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகளை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்றிருந்தேன்,இந்த சந்திப்பு மேலும் என் ஆர்வத்தை அதிகமாக்கியது. அடுத்த புத்தகக் கண்காட்சியில் புதிய பதிப்பாக அவை வெளியாகின்றன‌ என்று அவர் சொன்னதும் மனம் சிறகை விரித்துத் தயாரானது. ஆனால் 2016 புத்தக கண்காட்சியில் அதிர்ச்சி தரும் விலையுடன்  அவை வெளியாயின‌. 16 புத்தகங்கள் 10,000ரூ. அதுவும் மொத்தமாக 16 புத்தகங்களையும் வாங்க வேண்டுமாம்,நூலகத்திற்கான வெளியீடு என்றனர் பதிப்பகத்தினர். மலிவு விலை புத்தகமாகவோ அல்லது தனித்தனி புத்தகமாகவோ வெளியிட்டால்  கண்டிப்பாக சாமானியர்களும் வாங்குவார்கள் என்பது எனது எண்ணம்,பதிப்பகம் அதை சிந்திக்குமா என்று தெரியவில்லை. காலம் வரும் காத்திருப்போம் என்று மனதை ஆறுதல் படுத்திக்கொண்டேன்.

இதனிடையில் பாரதியியல் சார்ந்து வேறு சில புத்தகங்களும் கிடைத்தன‌ , அதன் சிறிய‌ அறிமுகம் ....

6.பாரதியின் இறுதிக் காலம் - ய.மணிகண்டன்


யானை மிதித்துதான் பாரதி இறந்தாரென சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர் யானையால் தாக்கப்பட்டு அவர் உடனே இறக்கவில்லை என்றும்,மூன்று மாதம் கழித்து உடல்நிலை சரியில்லாமல் தான் இறந்தார் என்றும் கேள்விப்பட்டேன். ஆனால் பாரதியின் இறுதி காலம் குறித்து ய.மணிகண்டன் இவ்வாறு கூறுகிறார்.

"இப்பொழுது கிடைத்துள்ள அரிய தரவுகளால் யானை தாக்கிய சம்பவத்திற்கும் இறப்பிற்கும் இடையில் குறிப்பிடத்தக்க கால இடைவெளி உள்ளமை தெளிவாகின்றது.இந்த இடைவெளி யானை தாக்கியமைக்கும் இறப்பிற்கும் நேரடியான தொடர்பில்லை என்பதை உறுதிசெய்கின்றது.இடைப்பட்ட காலத்தில் பாரதி வெளியூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றத்தையும் எழுதிக் குவித்ததையும் வரலாறு காட்டுகின்றது.எனினும் யானையால் தாக்கப்பட்டமை பாரதியின் உடல்நலத்தை பலவீனமாக ஆக்கியிருக்கவேண்டும்"

.பாரதியின் இறுதி காலமென புதுவையை விட்டுக் கிளம்பியதிலிருந்து அவர் குறிப்பிடுகின்றார்.இந்தக் காலக்கட்டத்தில் பாரதியின் வாழ்வு எவ்வாறு அமைந்தது என்ற‌ ஆதாரங்களைத் தருகின்றார். அதில் முக்கியமாக கோயிலில் யானை தாக்கிய சம்பவத்தின் போது பாரதியுடன் நேரடியான தொடர்புடையவர்களான சகுந்தலா பாரதி மற்றும் ரா.கனகலிங்கம் எழுதிய‌ பதிவுகளையும் தருகிறார். இதில் யவருமே யானை தாக்குதலின் காலத்தினை பதியவேயில்லை. ஆனால் மிகமுக்கியமான ஒன்று என்னவென்றால் ,பாரதி இந்த நிகழ்வைக் கொண்டு ஒரு படைப்பைத் தந்திருக்கிறார். கதையின் நாயகன் யானையால் தாக்கப்பட்டு நண்பர்கள் துணைகொண்டு மீட்கப்படுகிறார். பார‌தியின் மனநிலையை இந்தக் கதையில் காணமுடிகிறது.

பாரதி தனது இறுதிக் காலத்திலும் வெவ்வேறு ஊர்களுக்குப் பயணிக்கிறார்,மக்களிடமிருந்து ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது.பாரதியின் மீது மக்களுக்கு பெரிய அபிமானம் இருந்ததையே இது காட்டுகிறது, ஆனால்  பாரதியின் இறப்பிற்கு மிகக் குறைவான நபர்களே வந்தனர் என நாம் கேள்விப்பட்டிருப்போம். உண்மையில் அதன் காரணம் என்ன என்பதை இந்தப் புத்தகம் பேசுகிறது. இந்தச் செய்திகளையெல்லாம் வாசிக்கும் போது , 100 வருடத்திற்கு முந்தைய வரலாற்றைக் கூட சரியாக பதியாத சமூகமாக நாம் இருந்திருக்கிறோம் என்று மனம் வருந்துகிறது.பாரதி என்றொறு ஆளுமையின் கதையை தேடித் தேடி வாசிக்க மனம் ஆவலுடன் காத்துக்கிடக்கிறது.

7.என் குருநாதர் பாரதியார் - ரா.கனகலிங்கம்

பாரதி வரலாற்றில் புரட்சிக்கரமான நிகழ்வுகளில் முக்கியமானது,வேறு சாதியிலுள்ள ஒருவருக்கு பூணூல்     அ ணிவித்த நிகழ்வு. அப்படி பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்டவர் தான் கனகலிங்கம் அவர்கள். அவரது பார்வையில் பாரதி என்பது தான் இந்தப் புத்தகம். புகழ்ச்சி தான் பிரதானம் என்றாலும் வாசிக்க சுவாரஸ்யமான பல நிகழ்வுகள் இருக்கின்றன‌. பாரதியின் அறிமுகம் , பாரதியைச் சுற்றி இருக்கும் போலீஸ் கெடுபடிகள்,பூணூல் அணுவித்த நிகழ்வு,பாரதியின் நட்பு,பின்னர் வேலை நிமித்தமாக வெளியூருக்குச் சென்றதால் பாரதியின் தொடர்பில்லாமல் போவது,மீண்டும் சென்னையில் பாரதியை சந்திப்பது,யானை மிதித்த செய்தியை கேட்டு பதறியடித்து பாரதி இல்லத்திற்கு சென்று அவரை சந்திக்கும் தருணம் போன்ற பல அரிய தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன‌. இதில் மிக முக்கியமான ஒன்று பாரதியின் உருவத்தோற்றம் பற்றிய அவரது பதிவுகள்.  பாரதியுடன் வாழ்ந்த மக்களின் பாரதி பற்றின படைப்புகள் எப்பொழுதும் அதீத ஈர்ப்பைத் தருகின்றன‌. அந்த வகையில் நான் மிகவும் ரசித்த புத்தகம் இது.

8.புழுதியில் வீணை - ஆதவன்  (தாகம் பதிப்பகம்)

 சிகாகோ நூலகத்தில் கிடைத்த புதையல் இது. பாரதியின் புதுவை வாழ்வு பற்றி ஆத‌வன் எழுதிய நாடகம்.  நாடகக் காட்சிகளின் நம்ப‌கத் தன்மைக்காக அவர் எழுதிய முன்னுரை நாடகத்தை விட சிறப்பாக அமைந்துள்ளது என்பது எனது எண்ணம். ராஜாஜிக்கும் வ.ராவிற்கும் பாரதியார் பற்றி நடக்கும் கருத்து மோதலில் துவங்குகிறது முன்னுரை. அரவிந்தரின் கருத்துக்கள் பற்றியும்,கடவுள் மீதான பாரதியின் பார்வைப் பற்றியும் பேசுகிறார். வாஞ்சிநாதனின் ஆஷ் கொலை பாரதி காலத்தில் நடந்தது,கொலைக்கு முன்பு வாஞ்சி புதுவையில் தான் சிலக் காலம் இருந்தார்,அங்கு தான் துப்பாக்கிப் பயிற்சியும் நடந்ததாகத் தெரிகிறது ,அப்பொழுது புதுவையில் வாழ்ந்த‌ பாரதிக்கு இதில் ஏதாவது தொடர்பு  இருந்திருக்குமா? பத்மநாபன்  அவர்கள் தனது படைப்புகளில் பார‌தியை அகிம்சாவாதி என்கிறார்,ரகுநாதனோ ஆஷ் கொலை திட்டத்தில் பாரதிக்கும் பங்கு இருந்திருக்க வேண்டுமென்கிறார். இந்த கருத்து வேற்றுமையை மையமாக எடுத்துக்கொண்டு ரகுநாதன் அவர்கள் சொல்லும் வாதங்களுக்கு பதில் தருவதாக அமைகிறது ஆதவனின் முன்னுரை. ஒரு கொலைக்கு பாரதி என்றும் ஆதரவாக இருந்திருக்க மாட்டார் என்பதை நிரூபிக்கும் முயற்சியே முன்னுரையின் பிரதான கருத்தாக இருக்கிறது. பாரதியின் காலத்தினை ஒட்டிய  பல படைப்புகளின் அறிமுகங்கள் இந்த முன்னுரையின் மூலம் நமக்குக் கிடைக்கின்றன‌. ஆதவனின் நாடகமும் அருமையாக இருக்கிறது. நான் முதலாவதாக வாசித்த நாடகம். வாசிக்கும் போதே காட்சிகள் கற்பனையில் ஓடுகிறது,இதுவரை இந்த நூலை யாராவது நாடகமாக எடுத்துள்ளனரா என்று தெரியவில்லை. நாடகமாக அரங்கேற்ற சிறந்த புத்தகம் இது,யாராவது முயற்சித்தால் நன்றாக இருக்கும்.

9.பாரதி : சில பார்வைகள் - ரகுநாதன்

இணையத்தில் கிடைக்கும் புத்தகம் இது. பாரதியின் பாடல்களை அலசி ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பு. அதில் எனக்கு மூன்று கட்டுரைகள் மிகவும் பிடித்தமானது. முதலாவதாக‌ பாரதியின் கருப்புத் தோட்டம் பாடல் ,அந்தப் பாடலில் ஏன் "ஓ" என்று வருகிறது என்ற கேள்வியுடன் கட்டுரை துவங்குகிறது , பிஜி தீவில் அடிமைகளாக கரும்பு தோட்டங்களில் தவித்து வாடும் இந்தியர்களை நினைத்து உறக்கமில்லாமல் பாரதி எழுதிய பாடல் தான் "கரும்பு தோட்டத்திலே" பாடல். அந்த மக்களின் தவிப்பின் பிரதலிப்பே "ஓ" எனும் எழுத்து.தீனபந்து என்ற ஆளுமையை எனக்கு அறிமுகம் செய்தது இந்தக் கட்டுரை தான்.

அதே போல் தாயின் மணிக்கொடி பாடலை வைத்து ஒரு ஆய்வுக் கட்டுரை.

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்
உச்சியின் மேல் வந்தே மாதர மென்றே
பாங்கி னேழுதித் திகழும் -செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரிர்!

இந்திரன் வச்சிர மோர்பால்-அதில்
எங்கள் துருக்க ரிளம்பிறை யோர்பால் (தாயின்)
மந்திர நடுவுறத் தோன்றும் -அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?

இதில் பிறையும் ,வந்தே மாதரம் என்ற எழுத்தும் கொடியில் இருக்கிறது என்கிறார் பாரதி,ஆனால் அப்படியொரு கொடியை நாம் பார்த்ததில்லையே என்பதில் துவங்குகிறது இந்தக் கட்டுரை. அப்பொழுது நமது கொடியில் வேறு சில வடிவங்கள் இருந்ததா,அவைகள் யாவை,அதை வடிவமைத்தது யார்,அதன் பின்னனி என்ன என்ற கேள்விகளுக்கு அழகாக வரலாற்று சான்றுகளோடு விடை தருகிறார் ஆசிரியர். இந்தக் கட்டுரை நமக்கு பல்வேறு சுதந்திர‌ ஆளுமைகளை அறிமுகம் செய்கிறது. காமா அம்மையார்,  பூபேந்திரநாத் தத்தர் (இவர் விவேகானந்தரின் சகோதரர்) பற்றிய அறிமுகங்கள் கிடைத்தது. 1907ல் ஜெர்மனியில் நடந்த சர்வதேச சோஷியலிஸ்ட் காங்கிரஸ் மாநாட்டில் காமா அம்மையார் அவர்கள் இந்தியா சார்பில் பங்கு கொள்கிறார். இங்கு தான் லெனின் இந்திய வீரர்களைச் சந்திக்கிறார். அந்த மாநாட்டில் காமா அம்மையார் இந்திய சுதந்திரம் பற்றி புரட்சிக்கரமாக உரை ஒன்றைத் தருகிறார்,அத்துடன் தான் வடிவமைத்த கொடியையும் அறிமுகம் செய்கிறார். அந்தக் கொடியின் தாக்கமும்,நிவேதிதா அம்மையார் அவர்கள் வடிவமைத்த கொடியின் தாக்கமும் தான் பாரதி பாடலில் உள்ளது என்கிறார் ஆசிரியர்.

அடுத்து பரிசு பெறத் தவறிய பாரதியின் "செந்தமிழ் நாடெனும்" பாடல் "இந்திய கும்மி" எனும் போட்டியில் பங்குப்பெற்று தோற்கிறது. அந்தப் போட்டியின் மீதே பாரதிக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் நண்பர்கள் சொல்வதாலே பாடலை எழுதுகிறார் என்று அந்தப் பாடலின் பின்னனியை அலசி ஆராய்கிறார் ஆசிரியர். அந்த‌ போட்டியில் முதல் பரிசு பெற்ற பாடலை எழுதிய மாதவையா தான் தமிழின் மூன்றாம் நாவலான பத்மாவதி சரித்திரம் (1898) நூலை படைத்தவர். இது போன்ற பல்வேறு தகவல்களை வாசிக்க வாசிக்க இனிமையான உணர்வு ஏற்படுகிறது.

10.பாரதியியல்: கவ‌னம்பெறாத உண்மைகள் - ய.மணிகண்டன்

இந்தப் புத்தகம் தான் "பாரதியியல்" என்ற வார்த்தையை எனக்கு அறிமுகம் செய்தது. பாரதியியலின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றின அறிமுகத்துடன் புத்தகம் துவங்குகிறது.இதில் நடத்தப்படும் ஆய்வுகள் அனைத்தும் பாரதி என்று பெயரிட்டு வெளியான பாரதியின் படைப்புகள் சார்ந்தே வந்துள்ளதென்றும் ஆனால் பாரதி பல பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்திருக்கிறார், அவரது பெயரிடாத பலப் படைப்புகள் வெளியாகியுள்ள வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்கிறார் மணிகண்டன். கவனம் பெறாத விஷயங்கள பல உள்ளதாகவும் அவற்றையெல்லாம் தேடிட வேண்டிய அவசியத்தைப் பற்றியும் பேசுகிறார். அப்படி அவர் தேடி கண்டிட்ட சிலவற்றை நம்முடன் பகிர்கிறார். அதில் என்னை மிகவும் கவர்ந்தது பாரதிதாசன் எடுக்க நினைத்த பாரதி திரைப்படம் பற்றின தகவல்கள். பாரதிதாசன் அவர்கள் தனது வாழ்நாளுக்குள் எப்படியாவது பாரதி வரலாற்றை படமாக்க ஆசைப்பட்டாராம்,அதற்காக திரைக்கதையும் அமைத்துள்ளார். அந்தத் திரைக்கதையை படமாக்க அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்துள்ளார். தனது திரைக்கதையை சிலருக்கு அனுப்பியும் உள்ளார், ஆனால் அவர் ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது. அவரது ஆசையுடன் அந்தத் திரைக்கதையும் மறைந்துவிட்டது. பின்பு சமீபத்தில் தான் அந்தத் திரைக்கதையை மீட்டெடுத்துள்ளனர். அந்தத் திரைக்கதை தற்பொழுது "பாட்டுப் பறவைகள்" என்ற புத்தகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. பாரதிதாசனின் மகன் அதனை வெளியிட்டுள்ளார்.

"பாட்டுப் பறவைகள்" என்ற தலைப்பே இந்தப் புத்தகம் மக்களிடம் சேராமல் செய்துவிட்டது என்று வருத்தம் கொள்கிறார்
மணிகண்டன். அத்துடன் அதிலுள்ல சில அரிய நிகழ்வுகளை நம்முடன் பகிர்கிறார்.

"சுப்புரத்தினம்! நான் வாழவேண்டும் என்று நினைக்கும் 'புதுவை' நண்பர்களை விட்டு,சாக வேண்டும் என்று நினைக்கும் சென்னை நண்பர்களை அடைந்தேன். இன்று வரைக்கும் என் கவிதைத்தொண்டு என்னைக் காப்பாறி வருகிறது.

நாம் சாப்பிட்டு விட்டு உருவப்படம் எடுக்கலாம்."

இன்று நம்மிடயே உலாவும் பாரதியின் புகைப்படம் இவ்வாறு தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்தக் காட்சி மூலம் சொல்கிறார் பாரதிதாசன்.

இதை வாசித்ததிலிருந்து "பாட்டுப் பறவைகள்" புத்தகத்தை நானும் நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். சென்ற புத்தக கண்காட்சியில் எதார்த்தமாக கண்ணில் சிக்கியது. அதுவும் கடைசியாக சுற்றிவிட்டு கிளம்பலாம் என்று சென்றபொழுது சிக்கியது. புத்தகக் கண்காட்சிக்காக சென்னை சென்றதின் பயனை அடைந்ததாக ஒரு திருப்தி கிடைத்தது.

 பாரதி,வாஞ்சி,வ.வு.சி,நிவேதிதா,சுப்ரமணிய சிவா,காந்தி,பெரியார்,விவேகானந்தர்,அவரது சகோதரர்,காமா அம்மையார்,தீனபந்து .. (பட்டியல் இன்னும் நீள்கிறது) என ஏகப்பட்ட புதையல்களை வரலாறு மறைத்து வைத்திருக்கிறது. அதையெல்லாம் தேடிப்பிடிக்க ஆசை தான். எப்பொழுது என்பது தான் கேள்வி...