Monday, January 2, 2017

வாசிப்பு 2016 - பாரதியியல்

சீனி.விசுவ‌நாதன்,பாரதியியலில் மிக முக்கியமானவர்.பாரதி படைப்புகளை தேடித் தேடி சேர்த்தவர். தி ஹிந்துவில் வந்திருந்த இவரது பேட்டியை வாசித்ததிலிருந்து நேரில்  சந்திக்க வேண்டுமென்ற ஆர்வம் தொற்றிக் கொண்டது. சென்னைக்கு சென்றபொழுது வாய்ப்பும் அமைந்தது.

பாரதி படைப்புகளுக்காக அவர் தேடி அலைந்த கதைகளைக் கேட்க ஆசைப்பட்டேன் , ஆனால் அவரோ என்னைப் பற்றியும்  எனது வேலையைப் பற்றியும்,வாசிப்பதற்கான நேரம் ஒதுக்குவதைப் பற்றியும்  நிறைய கேட்டார்.  நாள் முழுதும் கணிணியில் அமர்வோர்களால் வாசிப்பது சிரமம் தான் என்றும் கவலை கொண்டார். தனது மனைவியின் இறப்பிற்கு பின்பு எழுதுவதுமில்லை வாசிப்பதுமில்லை என்றார். அதை கேட்கவே சங்கடமாக இருந்தது. பாரதியின் படைப்புகள் சார்ந்து இன்னும் நிறைய வெளிவர வேண்டியிருக்கிறது,போதுமான ஆட்கள் தான் இல்லை என்றார். யதுகிரி அம்மாள் மற்றும் பாரதிதாசனின் பார்வை பற்றியும்,வடமாநில தலைவர்கள் சென்னையில் நடத்திய உரைகள் சார்ந்தும் சில விஷயங்களைச் சொன்னார். நான் பாரதியியல் சார்ந்து வாசித்திருந்த ஆதவன் எழுதிய "புழுதியில் வீனை" மற்றும் ய.மணிகண்டனின் புத்தகங்கள் பற்றியும் பேசினேன். எங்களது இரண்டு மணி நேர உரையாடல் பாரதிக்கும் பெங்களூருக்கும் மாறி மாறி சென்று முடிவுற்றது.

நீண்ட நாட்களாகவே சீனி.விசுவநாதன் அவர்களின் காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகளை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்றிருந்தேன்,இந்த சந்திப்பு மேலும் என் ஆர்வத்தை அதிகமாக்கியது. அடுத்த புத்தகக் கண்காட்சியில் புதிய பதிப்பாக அவை வெளியாகின்றன‌ என்று அவர் சொன்னதும் மனம் சிறகை விரித்துத் தயாரானது. ஆனால் 2016 புத்தக கண்காட்சியில் அதிர்ச்சி தரும் விலையுடன்  அவை வெளியாயின‌. 16 புத்தகங்கள் 10,000ரூ. அதுவும் மொத்தமாக 16 புத்தகங்களையும் வாங்க வேண்டுமாம்,நூலகத்திற்கான வெளியீடு என்றனர் பதிப்பகத்தினர். மலிவு விலை புத்தகமாகவோ அல்லது தனித்தனி புத்தகமாகவோ வெளியிட்டால்  கண்டிப்பாக சாமானியர்களும் வாங்குவார்கள் என்பது எனது எண்ணம்,பதிப்பகம் அதை சிந்திக்குமா என்று தெரியவில்லை. காலம் வரும் காத்திருப்போம் என்று மனதை ஆறுதல் படுத்திக்கொண்டேன்.

இதனிடையில் பாரதியியல் சார்ந்து வேறு சில புத்தகங்களும் கிடைத்தன‌ , அதன் சிறிய‌ அறிமுகம் ....

6.பாரதியின் இறுதிக் காலம் - ய.மணிகண்டன்


யானை மிதித்துதான் பாரதி இறந்தாரென சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர் யானையால் தாக்கப்பட்டு அவர் உடனே இறக்கவில்லை என்றும்,மூன்று மாதம் கழித்து உடல்நிலை சரியில்லாமல் தான் இறந்தார் என்றும் கேள்விப்பட்டேன். ஆனால் பாரதியின் இறுதி காலம் குறித்து ய.மணிகண்டன் இவ்வாறு கூறுகிறார்.

"இப்பொழுது கிடைத்துள்ள அரிய தரவுகளால் யானை தாக்கிய சம்பவத்திற்கும் இறப்பிற்கும் இடையில் குறிப்பிடத்தக்க கால இடைவெளி உள்ளமை தெளிவாகின்றது.இந்த இடைவெளி யானை தாக்கியமைக்கும் இறப்பிற்கும் நேரடியான தொடர்பில்லை என்பதை உறுதிசெய்கின்றது.இடைப்பட்ட காலத்தில் பாரதி வெளியூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றத்தையும் எழுதிக் குவித்ததையும் வரலாறு காட்டுகின்றது.எனினும் யானையால் தாக்கப்பட்டமை பாரதியின் உடல்நலத்தை பலவீனமாக ஆக்கியிருக்கவேண்டும்"

.பாரதியின் இறுதி காலமென புதுவையை விட்டுக் கிளம்பியதிலிருந்து அவர் குறிப்பிடுகின்றார்.இந்தக் காலக்கட்டத்தில் பாரதியின் வாழ்வு எவ்வாறு அமைந்தது என்ற‌ ஆதாரங்களைத் தருகின்றார். அதில் முக்கியமாக கோயிலில் யானை தாக்கிய சம்பவத்தின் போது பாரதியுடன் நேரடியான தொடர்புடையவர்களான சகுந்தலா பாரதி மற்றும் ரா.கனகலிங்கம் எழுதிய‌ பதிவுகளையும் தருகிறார். இதில் யவருமே யானை தாக்குதலின் காலத்தினை பதியவேயில்லை. ஆனால் மிகமுக்கியமான ஒன்று என்னவென்றால் ,பாரதி இந்த நிகழ்வைக் கொண்டு ஒரு படைப்பைத் தந்திருக்கிறார். கதையின் நாயகன் யானையால் தாக்கப்பட்டு நண்பர்கள் துணைகொண்டு மீட்கப்படுகிறார். பார‌தியின் மனநிலையை இந்தக் கதையில் காணமுடிகிறது.

பாரதி தனது இறுதிக் காலத்திலும் வெவ்வேறு ஊர்களுக்குப் பயணிக்கிறார்,மக்களிடமிருந்து ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது.பாரதியின் மீது மக்களுக்கு பெரிய அபிமானம் இருந்ததையே இது காட்டுகிறது, ஆனால்  பாரதியின் இறப்பிற்கு மிகக் குறைவான நபர்களே வந்தனர் என நாம் கேள்விப்பட்டிருப்போம். உண்மையில் அதன் காரணம் என்ன என்பதை இந்தப் புத்தகம் பேசுகிறது. இந்தச் செய்திகளையெல்லாம் வாசிக்கும் போது , 100 வருடத்திற்கு முந்தைய வரலாற்றைக் கூட சரியாக பதியாத சமூகமாக நாம் இருந்திருக்கிறோம் என்று மனம் வருந்துகிறது.பாரதி என்றொறு ஆளுமையின் கதையை தேடித் தேடி வாசிக்க மனம் ஆவலுடன் காத்துக்கிடக்கிறது.

7.என் குருநாதர் பாரதியார் - ரா.கனகலிங்கம்

பாரதி வரலாற்றில் புரட்சிக்கரமான நிகழ்வுகளில் முக்கியமானது,வேறு சாதியிலுள்ள ஒருவருக்கு பூணூல்     அ ணிவித்த நிகழ்வு. அப்படி பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்டவர் தான் கனகலிங்கம் அவர்கள். அவரது பார்வையில் பாரதி என்பது தான் இந்தப் புத்தகம். புகழ்ச்சி தான் பிரதானம் என்றாலும் வாசிக்க சுவாரஸ்யமான பல நிகழ்வுகள் இருக்கின்றன‌. பாரதியின் அறிமுகம் , பாரதியைச் சுற்றி இருக்கும் போலீஸ் கெடுபடிகள்,பூணூல் அணுவித்த நிகழ்வு,பாரதியின் நட்பு,பின்னர் வேலை நிமித்தமாக வெளியூருக்குச் சென்றதால் பாரதியின் தொடர்பில்லாமல் போவது,மீண்டும் சென்னையில் பாரதியை சந்திப்பது,யானை மிதித்த செய்தியை கேட்டு பதறியடித்து பாரதி இல்லத்திற்கு சென்று அவரை சந்திக்கும் தருணம் போன்ற பல அரிய தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன‌. இதில் மிக முக்கியமான ஒன்று பாரதியின் உருவத்தோற்றம் பற்றிய அவரது பதிவுகள்.  பாரதியுடன் வாழ்ந்த மக்களின் பாரதி பற்றின படைப்புகள் எப்பொழுதும் அதீத ஈர்ப்பைத் தருகின்றன‌. அந்த வகையில் நான் மிகவும் ரசித்த புத்தகம் இது.

8.புழுதியில் வீணை - ஆதவன்  (தாகம் பதிப்பகம்)

 சிகாகோ நூலகத்தில் கிடைத்த புதையல் இது. பாரதியின் புதுவை வாழ்வு பற்றி ஆத‌வன் எழுதிய நாடகம்.  நாடகக் காட்சிகளின் நம்ப‌கத் தன்மைக்காக அவர் எழுதிய முன்னுரை நாடகத்தை விட சிறப்பாக அமைந்துள்ளது என்பது எனது எண்ணம். ராஜாஜிக்கும் வ.ராவிற்கும் பாரதியார் பற்றி நடக்கும் கருத்து மோதலில் துவங்குகிறது முன்னுரை. அரவிந்தரின் கருத்துக்கள் பற்றியும்,கடவுள் மீதான பாரதியின் பார்வைப் பற்றியும் பேசுகிறார். வாஞ்சிநாதனின் ஆஷ் கொலை பாரதி காலத்தில் நடந்தது,கொலைக்கு முன்பு வாஞ்சி புதுவையில் தான் சிலக் காலம் இருந்தார்,அங்கு தான் துப்பாக்கிப் பயிற்சியும் நடந்ததாகத் தெரிகிறது ,அப்பொழுது புதுவையில் வாழ்ந்த‌ பாரதிக்கு இதில் ஏதாவது தொடர்பு  இருந்திருக்குமா? பத்மநாபன்  அவர்கள் தனது படைப்புகளில் பார‌தியை அகிம்சாவாதி என்கிறார்,ரகுநாதனோ ஆஷ் கொலை திட்டத்தில் பாரதிக்கும் பங்கு இருந்திருக்க வேண்டுமென்கிறார். இந்த கருத்து வேற்றுமையை மையமாக எடுத்துக்கொண்டு ரகுநாதன் அவர்கள் சொல்லும் வாதங்களுக்கு பதில் தருவதாக அமைகிறது ஆதவனின் முன்னுரை. ஒரு கொலைக்கு பாரதி என்றும் ஆதரவாக இருந்திருக்க மாட்டார் என்பதை நிரூபிக்கும் முயற்சியே முன்னுரையின் பிரதான கருத்தாக இருக்கிறது. பாரதியின் காலத்தினை ஒட்டிய  பல படைப்புகளின் அறிமுகங்கள் இந்த முன்னுரையின் மூலம் நமக்குக் கிடைக்கின்றன‌. ஆதவனின் நாடகமும் அருமையாக இருக்கிறது. நான் முதலாவதாக வாசித்த நாடகம். வாசிக்கும் போதே காட்சிகள் கற்பனையில் ஓடுகிறது,இதுவரை இந்த நூலை யாராவது நாடகமாக எடுத்துள்ளனரா என்று தெரியவில்லை. நாடகமாக அரங்கேற்ற சிறந்த புத்தகம் இது,யாராவது முயற்சித்தால் நன்றாக இருக்கும்.

9.பாரதி : சில பார்வைகள் - ரகுநாதன்

இணையத்தில் கிடைக்கும் புத்தகம் இது. பாரதியின் பாடல்களை அலசி ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பு. அதில் எனக்கு மூன்று கட்டுரைகள் மிகவும் பிடித்தமானது. முதலாவதாக‌ பாரதியின் கருப்புத் தோட்டம் பாடல் ,அந்தப் பாடலில் ஏன் "ஓ" என்று வருகிறது என்ற கேள்வியுடன் கட்டுரை துவங்குகிறது , பிஜி தீவில் அடிமைகளாக கரும்பு தோட்டங்களில் தவித்து வாடும் இந்தியர்களை நினைத்து உறக்கமில்லாமல் பாரதி எழுதிய பாடல் தான் "கரும்பு தோட்டத்திலே" பாடல். அந்த மக்களின் தவிப்பின் பிரதலிப்பே "ஓ" எனும் எழுத்து.தீனபந்து என்ற ஆளுமையை எனக்கு அறிமுகம் செய்தது இந்தக் கட்டுரை தான்.

அதே போல் தாயின் மணிக்கொடி பாடலை வைத்து ஒரு ஆய்வுக் கட்டுரை.

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்
உச்சியின் மேல் வந்தே மாதர மென்றே
பாங்கி னேழுதித் திகழும் -செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரிர்!

இந்திரன் வச்சிர மோர்பால்-அதில்
எங்கள் துருக்க ரிளம்பிறை யோர்பால் (தாயின்)
மந்திர நடுவுறத் தோன்றும் -அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?

இதில் பிறையும் ,வந்தே மாதரம் என்ற எழுத்தும் கொடியில் இருக்கிறது என்கிறார் பாரதி,ஆனால் அப்படியொரு கொடியை நாம் பார்த்ததில்லையே என்பதில் துவங்குகிறது இந்தக் கட்டுரை. அப்பொழுது நமது கொடியில் வேறு சில வடிவங்கள் இருந்ததா,அவைகள் யாவை,அதை வடிவமைத்தது யார்,அதன் பின்னனி என்ன என்ற கேள்விகளுக்கு அழகாக வரலாற்று சான்றுகளோடு விடை தருகிறார் ஆசிரியர். இந்தக் கட்டுரை நமக்கு பல்வேறு சுதந்திர‌ ஆளுமைகளை அறிமுகம் செய்கிறது. காமா அம்மையார்,  பூபேந்திரநாத் தத்தர் (இவர் விவேகானந்தரின் சகோதரர்) பற்றிய அறிமுகங்கள் கிடைத்தது. 1907ல் ஜெர்மனியில் நடந்த சர்வதேச சோஷியலிஸ்ட் காங்கிரஸ் மாநாட்டில் காமா அம்மையார் அவர்கள் இந்தியா சார்பில் பங்கு கொள்கிறார். இங்கு தான் லெனின் இந்திய வீரர்களைச் சந்திக்கிறார். அந்த மாநாட்டில் காமா அம்மையார் இந்திய சுதந்திரம் பற்றி புரட்சிக்கரமாக உரை ஒன்றைத் தருகிறார்,அத்துடன் தான் வடிவமைத்த கொடியையும் அறிமுகம் செய்கிறார். அந்தக் கொடியின் தாக்கமும்,நிவேதிதா அம்மையார் அவர்கள் வடிவமைத்த கொடியின் தாக்கமும் தான் பாரதி பாடலில் உள்ளது என்கிறார் ஆசிரியர்.

அடுத்து பரிசு பெறத் தவறிய பாரதியின் "செந்தமிழ் நாடெனும்" பாடல் "இந்திய கும்மி" எனும் போட்டியில் பங்குப்பெற்று தோற்கிறது. அந்தப் போட்டியின் மீதே பாரதிக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் நண்பர்கள் சொல்வதாலே பாடலை எழுதுகிறார் என்று அந்தப் பாடலின் பின்னனியை அலசி ஆராய்கிறார் ஆசிரியர். அந்த‌ போட்டியில் முதல் பரிசு பெற்ற பாடலை எழுதிய மாதவையா தான் தமிழின் மூன்றாம் நாவலான பத்மாவதி சரித்திரம் (1898) நூலை படைத்தவர். இது போன்ற பல்வேறு தகவல்களை வாசிக்க வாசிக்க இனிமையான உணர்வு ஏற்படுகிறது.

10.பாரதியியல்: கவ‌னம்பெறாத உண்மைகள் - ய.மணிகண்டன்

இந்தப் புத்தகம் தான் "பாரதியியல்" என்ற வார்த்தையை எனக்கு அறிமுகம் செய்தது. பாரதியியலின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றின அறிமுகத்துடன் புத்தகம் துவங்குகிறது.இதில் நடத்தப்படும் ஆய்வுகள் அனைத்தும் பாரதி என்று பெயரிட்டு வெளியான பாரதியின் படைப்புகள் சார்ந்தே வந்துள்ளதென்றும் ஆனால் பாரதி பல பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்திருக்கிறார், அவரது பெயரிடாத பலப் படைப்புகள் வெளியாகியுள்ள வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்கிறார் மணிகண்டன். கவனம் பெறாத விஷயங்கள பல உள்ளதாகவும் அவற்றையெல்லாம் தேடிட வேண்டிய அவசியத்தைப் பற்றியும் பேசுகிறார். அப்படி அவர் தேடி கண்டிட்ட சிலவற்றை நம்முடன் பகிர்கிறார். அதில் என்னை மிகவும் கவர்ந்தது பாரதிதாசன் எடுக்க நினைத்த பாரதி திரைப்படம் பற்றின தகவல்கள். பாரதிதாசன் அவர்கள் தனது வாழ்நாளுக்குள் எப்படியாவது பாரதி வரலாற்றை படமாக்க ஆசைப்பட்டாராம்,அதற்காக திரைக்கதையும் அமைத்துள்ளார். அந்தத் திரைக்கதையை படமாக்க அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்துள்ளார். தனது திரைக்கதையை சிலருக்கு அனுப்பியும் உள்ளார், ஆனால் அவர் ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது. அவரது ஆசையுடன் அந்தத் திரைக்கதையும் மறைந்துவிட்டது. பின்பு சமீபத்தில் தான் அந்தத் திரைக்கதையை மீட்டெடுத்துள்ளனர். அந்தத் திரைக்கதை தற்பொழுது "பாட்டுப் பறவைகள்" என்ற புத்தகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. பாரதிதாசனின் மகன் அதனை வெளியிட்டுள்ளார்.

"பாட்டுப் பறவைகள்" என்ற தலைப்பே இந்தப் புத்தகம் மக்களிடம் சேராமல் செய்துவிட்டது என்று வருத்தம் கொள்கிறார்
மணிகண்டன். அத்துடன் அதிலுள்ல சில அரிய நிகழ்வுகளை நம்முடன் பகிர்கிறார்.

"சுப்புரத்தினம்! நான் வாழவேண்டும் என்று நினைக்கும் 'புதுவை' நண்பர்களை விட்டு,சாக வேண்டும் என்று நினைக்கும் சென்னை நண்பர்களை அடைந்தேன். இன்று வரைக்கும் என் கவிதைத்தொண்டு என்னைக் காப்பாறி வருகிறது.

நாம் சாப்பிட்டு விட்டு உருவப்படம் எடுக்கலாம்."

இன்று நம்மிடயே உலாவும் பாரதியின் புகைப்படம் இவ்வாறு தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்தக் காட்சி மூலம் சொல்கிறார் பாரதிதாசன்.

இதை வாசித்ததிலிருந்து "பாட்டுப் பறவைகள்" புத்தகத்தை நானும் நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். சென்ற புத்தக கண்காட்சியில் எதார்த்தமாக கண்ணில் சிக்கியது. அதுவும் கடைசியாக சுற்றிவிட்டு கிளம்பலாம் என்று சென்றபொழுது சிக்கியது. புத்தகக் கண்காட்சிக்காக சென்னை சென்றதின் பயனை அடைந்ததாக ஒரு திருப்தி கிடைத்தது.

 பாரதி,வாஞ்சி,வ.வு.சி,நிவேதிதா,சுப்ரமணிய சிவா,காந்தி,பெரியார்,விவேகானந்தர்,அவரது சகோதரர்,காமா அம்மையார்,தீனபந்து .. (பட்டியல் இன்னும் நீள்கிறது) என ஏகப்பட்ட புதையல்களை வரலாறு மறைத்து வைத்திருக்கிறது. அதையெல்லாம் தேடிப்பிடிக்க ஆசை தான். எப்பொழுது என்பது தான் கேள்வி...