Tuesday, November 14, 2017

ஜன்னலில் ஒரு சிறுமி

குட்டி ஆகாயம் குழுவின் சார்பில் நடந்த குழந்தை வளர்ப்பு சார்ந்த நிகழ்விற்காக "ஜன்னலில் ஒரு சிறுமி" என்ற புத்தகம் குறித்து எனது பார்வை.

வணக்கம் நண்பர்களே,
4 வருடங்களுக்கு முன்பு இந்தப் புத்தகத்தை வாசித்தப் பொழுது எனது பள்ளி நினைவுகளே மனதில் முழுதும் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் தற்பொழுது வாசிக்கும் பொழுது ஒரு தகப்பனாக எனது மகளின்
கல்விமுறையிலுள்ள  சிக்கல்கள் மனதினுள் ஓடிக்கொண்டிருக்கிறது. சிக்கல்கள் மட்டுமல்ல பள்ளியிலுள்ள நல்ல மாற்றங்களையும் புரிந்துக்கொள்ள முடிகிறது.  இந்தப் புத்தகத்தில் வரும் டோட்டா சானின் வயது தான் எனது மகளுக்கும் , ஆதலால் நிறைய விசயங்களை அதனுடன் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. பெற்றோராய் எனது பார்வையை கடந்து எனது சுற்றத்தில் நான் கவனிக்கும் குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி சார்ந்தும் பேச‌ விரும்புகிறேன். இந்தப் புத்தகத்தை ரயில் பெட்டி வகுப்பறையை தாண்டி எடுத்துக்கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய இருப்பதாக கருதுகிறேன். இந்தப் புத்தகம் சார்ந்து நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தப் போது,இதிலுள்ள ஒவ்வொரு பக்கத்தையும் விரிவாக பேசிட வேண்டும் என்றார். என்னளவில் எனக்கு முக்கியத்துவமாக தோன்றிய விசயங்களை இங்கு பேசுகிறேன்.

சுமத்தப்படும் குற்றங்கள்:
செப். கடைசி வாரம் உத்திர பிரதேசத்தில் 11ம் வகுப்புபயிலும் மாணவன் தற்கொலை செய்ய முயற்சி என்ற செய்தி கண்ணில் பட்டது. அந்தச் செய்தி மனதை உறுத்திக்கொண்டேயிருந்தது. ஆம் மனதை உறுத்திக்கொண்டே தான் இருந்தது. ஏனென்றால் அவன் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கிறான் அதுவும் பள்ளி ஆசிரியர்களால். அவன் தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறான். அதுவும் உபி முதலமைச்சருக்கு. அதன் வார்த்தைகள் இவை தான் “Chief minister sir, I am not a terrorist but a student.”  ...ஏன் இந்த வார்த்தைகள்? இரண்டு மாதத்திற்கு முன்பு தான் அந்தப் பள்ளியில் சேர்ந்திருக்கிறான். அவன் ஒரு முஸ்லீம் மதத்தை சேர்ந்தவன் என்பதால் அவன் மீது சந்தேக பார்வையை ஆசிரியர்கள் கொண்டிருக்கின்றனர். அவனது பை தினமும் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. சக மாணவர்களும் யாரும் அவனிடம் பழகுவதில்லை. அவனை வெவ்வேறு சூழலில் ஆசிரியர்கள் தீவிரவாதி என்று சொல்லி ஒதுக்கிக்கொண்டேயிருந்ததால் இந்த முடிவிற்கு தள்ளப்பட்டிருக்கிறான்.
இந்த சம்பத்தை டோட்டோ சான் புத்தகத்தில் வரும் ஒரு சம்பவத்தோட ஒப்பிட முடியும். டோட்டா சான் வகுப்பில் ஆசிரியார் மனிதனின் வளர்ச்சியைப் பற்றி ஒரு பாடம் எடுக்கிறார். அப்பொழுது துவக்கத்திலிழுந்த வால் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் மறைந்துவிட்டது என்று சொல்லி ஆசிரியர் சிறுவர்களை முதுகெலும்பை தொட்டுப் பார்க்க சொல்கிறார். அப்பொழுது ஒரு சிறுவனைப் பார்த்து "என்ன வால் இருக்கா?" என்று சொல்லி சிரிக்கிறார். இது ஒரு சாதாரன சம்பவமாகவே நமக்கு தோன்றினாலும் பள்ளி முதல்வருக்கு அப்படி தோன்றவில்லை. முதல்வர் அந்த ஆசிரியரை தனியாக அழைத்து கண்டிக்கிறார். அந்த ஆசிரியர் வால் இருக்கா என்ற கேட்ட சிறுவன் சற்றே குள்ளமானவன் என்பதால் அவர் வால் என்றதுமே மற்றவர்களோ அல்லது அவனோ குரங்காக நினைக்கலாம் அதுவே தாழ்வுணர்ச்சியாக மாறலாம் என்பதே முதல்வரின் எண்ணம்.
இந்தச் சம்பவம் நிறைய சிந்திக்க வைக்கிறது. இன்று ஒரு குழந்தை மேல் எத்தனை வகையான சின்ன சின்ன‌ குற்றங்கள் வீட்டிலும் பள்ளியிலும் தேவையில்லாமல் சுமத்தப்படுகிறது. "இதை சரியா செய்யல..அத ஒழுங்கா செய்யல. ஏன் இப்படி பண்ண..சொன்னதையே கேட்கிறதில்லை..நான் அப்பவே சொன்னேனா..பாரு அந்தப் புள்ளைக்கும் உன் வயசு தான் ஆகுது...உன்னால் ஏன் செய்ய முடியல" போன்று சுமத்தப்படும் குற்றங்கள் தான் எத்தனை. இந்த மாதிரி சுமத்தப்படும் சின்ன சின்ன குற்றங்களும் அந்தக் குழந்தையின் மனதில் ஏகப்பட்ட தாழ்வுணர்ச்சியை விதைக்கும். சற்றே தள்ளி நின்று ஒரு குழந்தை உள்ளத்துடன் சுமத்தப்படும் இந்தக் குற்றங்களை நாம் பார்த்திட வேண்டும். அப்பொழுது தான் அதன் சுமையையும் வலியையும் தெரிந்துக்கொள்ள முடியும்.

மலையிலிருந்து கொஞ்சம் கடலிருந்து கொஞ்சம்:
அந்தப் பள்ளியின் மதிய உணவு இடைவேளை எனக்கு முக்கியமாக தோன்றுகிறது. தினமும் மாணவர்களின் உணவில் மலை மற்றும் கடலிருந்து கொஞ்சம் இருக்கிறதா என்ற கேள்வியே சிறுவர்களுக்கு உணவின் மீது ஆர்வம் தருகிறது. இந்தப் பள்ளியைப் போன்று தற்பொழுதுள்ள சில‌ பள்ளிகளில் (எனது நட்பு வட்டத்தில்) குழந்தைகளின் உணவின் மீது கவனம் தருகிறார்கள். சிறுவர்கள் யாராவது சிப்ஸ்,பிஸ்கட் அல்லது பேக் செய்யப்பட்ட உணவை எடுத்துப் போனால் உடனே வீட்டில் சமைத்த‌ உணவை அனுப்புங்கள் என்று சீட்டு அனுப்புகிறார்கள். உணவு பற்றின விழிப்புணர்வை சிறுவர்களுக்கு தர வேண்டுமென்ற ஆர்வம் பள்ளிக்கு இருப்பது மகிழ்ச்சி தருகிறது. அதே போல் சிறுநீர் கழிப்பதற்காக செல்வதையும்  சிறுவர்களின்  (குறிப்பாக 3-6 வயது சிறுவர்கள்) விருப்பம் போல் இருப்பதை கவனிக்க முடிகிறது. இது ஒரு நல்ல விசயம்.
ஆனால்  உணவின் இடைவெளியில் சிறுவர்களை (3-6 வயதினர்) சீர்படுத்த முயற்சிக்கிறார்கள். விரைவாக சாப்பிட வேண்டுமென்று  கட்டாயப்படுத்துவதை உணர முடிகிறது. ஆசிரியர் திட்டுவதற்காக தங்களது உணவை அரைக்குறையாக சாப்பிடுகின்றனர். நல்ல உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பள்ளிகள் தனி ஒரு சிறுவர் போதுமான‌ உணவை எடுத்துக்கொள்கிறார்களா என்பதை கவனிப்பதில் சிரமம் எடுத்துக்கொள்வதில்லை. காலை 8 மணிக்கு கிளம்பும் இந்த வயது சிறுவர்கள் மதியம் 1 மணிக்கு தான் வீடு திரும்புகிறார்கள். அந்த சின்ன உணவு இடைவேளை சிறுவர்களின் உணவு பழக்கத்திற்கு முக்கியமானவை. போதுமான நேரம் பள்ளி தருவதில்லை என்று பெற்றோர்கள் குறைப்பட்டுக்கொண்டால்,பள்ளியோ வீட்டில் குழந்தைக்கு சுவையான உணவை சமைத்து வையுங்கள் என்று பதில் தருகிறார்கள். பள்ளி-வீடு இப்படி மாறி மாறி குறை சொல்லிக்கொண்டிருக்கிறோம்.ஆனால் இழப்பும் பாதிப்பும் சிறுவர்களுக்கு தான் என்பதை இருவரும் உணர்ந்திடல் வேண்டும். ஆனால் டோட்டோ சானின் பள்ளியிலோ மெதுவாக சாப்பிடுங்கள் என்று சொல்லித் தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. "Row Row row your boat" பாடலை மெல்லு மெல்லு நல்லா மென்னு சாப்பிடு என்று  பாடலை மாற்றி பாடி சிறுவர்களுக்கு சாப்பிடும் முறையையும் அழகாக  நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

மேடை பேச்சு:
டோட்டா சான் வகுப்பில் உணவிற்கு பின்பு சொற்பொழிவிற்கான நேரம் தரப்படுகிறது. மேடையில் பேசுவதுப் பற்றி பள்ளி முதல்வரின் புரிதல் மிக முக்கியமானது. சிறுவர்கள் அனைவரும் மேடை பேச்சாளராக வேண்டுமென்ற நோக்கில் இந்த நேரம் ஒதுக்கப்படவில்லை ஒவ்வொரும் தங்கு தடையின்றி தங்களுக்கு தோன்றியதை பொதுவில் பேசிட வேண்டுமென்ற நோக்கில் அதை நடத்துவார். தற்பொழுது கல்வி சூழலில் இதை மிக முக்கியமாக பார்த்திட வேண்டும். ஒரு குழந்தை தனது மனதில் உள்ளதை தங்கு தடையில்லாமல் சொல்வது என்பது மிக முக்கியமானது. அது ஒரு நேர்த்தியாகவோ,ஒரு வடிவத்திலோ,ஈர்க்கும் வார்த்தைகளின் அலங்காரத்திலோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பெரியோரின் எதிர்ப்பார்ப்பு வேறு விதமாக இருக்கிறது. இந்த எதிர்ப்பார்ப்பிற்கு பயந்து தான் சிறுவர்கள் தயக்கத்திற்கு உட்படுத்துகிறார்கள்.
மேடை பேச்சு என்றதும் அதன் சார்ந்து எனக்கு கிடைத்த நேரடி அனுபத்தை பகிர விரும்புகிறேன். நானும் நண்பர்களும் நடத்தும் கதை சொல்லல் நிகழ்வில் எங்களுக்கு கிடைத்த அனுபவம் தான் அது. 50-60 பெரியோர் உள்ள கூட்டத்திற்கு முன்பு அங்கு கூடியிருந்த பெரும்பாலான சிறுவர்கள் தாங்களும் கதைகள் சொல்ல வேண்டுமென்று ஆர்வத்துடன் முன்னே வந்தக் காட்சி எங்களுக்கு இன்றும் பிரமிப்பாக இருக்கிறது.  அங்கு கூடியிருந்த‌ பெற்றோரும் மேடை பயம் என்பதே இல்லாமல் தங்களது பிள்ளகள் பேசியதை நினைத்து ஆச்சரியம் அடைந்தார்கள். ஆனால் எங்களுக்கு அதன் ரகசியம் புரிந்திருந்தது. ஆம் மேடை பயம் இல்லாமல் சிறுவர்கள் இருந்ததற்கு காரணம் அந்த இடமும் சூழலும் சிறுவர்களுக்காக இருந்தது, அங்கு எந்தவித அன்னிய தனமும் இல்லாமல் நாங்கள் சூழலை உருவாக்கி வைத்திருந்தோம். மேடை அமைப்பு இல்லை, அலங்காரம் ஏதுமில்லை,மைக் கூட இல்லை. ஆனால் சிறுவர்களுக்கான பாடல்கள்,கதைகள்,விளையாட்டுகள் என அனைத்தும் அவர்களுக்கானதாக‌ இருந்தது. சிறுவர்கள் அனைவரும் அதை தங்களுக்கான சூழல் என்பதை உணர்ந்திருந்தார்கள். அங்கு பேசவோ,பாடவோ எந்தவித கூச்சமோ தயக்கமோ அவர்களுக்கில்லை. ஆனால் பெரியோர்கள் மேடை பேச்சு என்றதுமே மேடை பயம் என்பதை சிறுவர்களுக்கு அறிமுகம் செய்கிறார்கள். மேடை என்றதும் சிறுவர்கள் தங்களது இயல்பு தன்மையை இழக்கும் வகையில் நிறைய விசயங்களை குழந்தைகள் மீது சுமத்துகிறார்கள்.
மேடை பேச்சு என்பதில் மட்டுமல்ல , குழந்தையின் வெவ்வேறு செயலிலும் பெரியோருக்கு நிறைய எதிர்ப்பார்ப்புகள் இருக்கிறது. குழந்தை வரைய துவங்கியதும்,பாட துவங்கியதும்,ஆட துவங்கியதும்,கதை சொல்ல துவங்கியதும் அல்லது வேறு எதையாவது ஆர்வத்துடன் செய்ய துவங்கியதும் அவற்றை தாங்கள் அறிந்த வடிவத்திற்கு மாற்றுவதிலே பெரியோர்கள் பலர் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். சிறுவோர்களின் செயலை அடிக்கடி திருத்துவது,அல்லது ஏதாவது வகுப்பில் கொண்டு சேர்ப்பது (அவர்களின் விருப்பத்தின் மீது கவனம் செலுத்தாமல்) என்று ஆர்வத்தையை குறைக்கும் விதத்தில் நடந்துக்கொள்கிறார்கள். நடன வகுப்பிற்கு சேர்ந்தத‌தும் தனது பிள்ளைகள் நடனம் ஆடுவதை நிறுத்திவிடுவதுப் போன்ற அனுபங்கள் பலவற்றை நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். ஏதாவது இரண்டு வகுப்பில் மட்டும் என்னை சேர்த்துவிடுங்கள் அதற்கு மேல் என்னால் போக‌ முடியாது என்று சொல்லும் சிறுவர்களையும் பார்த்திருக்கிறேன்.
குழந்தைகளின் செயல்களை அவர்களின் வடிவத்திலே அனுமதிப்பது அதன் அழகை ரசிப்பது என்பது ஒரு கலை. அதனை பெரியோர்களாகிய நாம்  முதலில் வளர்த்துக்கொள்வோம்.

விவசாய ஆசிரியர்:
டோட்டா சானின் அவர்களது பள்ளிக்கு அருகிலுள்ள விவசாயியை வகுப்பிற்கு அழைத்து வந்து இவர் தான் தங்களுக்கு பாடம் எடுக்கப் போகும் விவசாய ஆசிரியர் என்று அறிமுகம் செய்வார்கள். அந்தக் காட்சி எனக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. சிறுவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த்திருந்த (அறிமுகமானவர் அல்ல)   அன்றைய வகுப்பிற்கு ஆசிரியர். அவர்களின் சிந்தனைகள் எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நமது கல்வி அமைப்பில் நிலத்திற்கான கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம்  கொடுக்கப்படுகிறது என்பது பலரது கேள்விகளாகவே இருக்கிறது. நமது பிள்ளைகளின் பாடப்புத்தகத்தில் 
Strawberry,kiwi பழங்களுக்கு கூட இடமுண்டு ஆனால் மாம்பழத்திற்கோ,பலாவிற்கோ இடம் கிடைப்பது சற்றே சிரமமாக தான் இருக்கிறது. அருகிலுள்ள விசயங்களைப் பற்றின புரிதல்கள் மீது கவனம் செலுத்தாமல் கடல் தாண்டி இருக்கும் விச்யத்தை சொல்லி தருவதில் ஏன் இந்த அவசரம் என்பது புரியவில்லை. நமது நாட்டில் அச்சிடப்படும் ஆங்கில சிறுவர் இதழில் ஒரு படத்தை கவனித்தேன். மீனவர்களின் உலகை விவரிக்கும் படம் அது. அதில் வேறு நாட்டின் ஆண்களும் பெண்களும் பேண்ட் சட்டைப் போட்டுக்கொண்டு மீன்களை தூக்கிக் கொண்டு நிற்கிறார்கள். இந்தப் படத்தை சிறுவர்கள் பார்க்கும் போது அவர்களுக்கு மீனவர்கள் பற்றி என்ன மாதிரியான புரிதல்கள் கிடைக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. உண்மைக்கும் சிறுவர்களுக்கான புத்தகத்திற்கும் ஏன் தேவையில்லாத இடைவேளையை நாம் உருவாக்குகிறோம். கற்றலுக்கு எதிர்விதமாக நான் பயணிப்பது போல் இருக்கிறது.

பள்ளி நிகழ்வுகள்:
இந்தப் புத்தகத்தில் வரும் பள்ளி நிகழ்வுகள் குறிப்பாக பரிசாக அங்கு தரப்படும் காய்கறிகள் எனக்கு இன்றைய பள்ளி நிகழ்வுகள் சார்ந்து எண்ணங்களை ஓடச்செய்கிறது. இன்றைய பள்ளிகள் முடிந்தவரை தங்களது நிகழ்வுகளில் அனைத்து சிறுவர்களும் பங்குபெற வேண்டுமென்று நினைக்கின்றனர். அதற்கு தகுந்தாற்போல் நிகழ்வுகளை வடிவமைக்கின்றனர் என்பது மகிழ்வாக இருக்கிறது. ஆனால் பள்ளி நிறுவனங்கள் பெற்றோர்களை கவர்வதிலே முக்கியத்துவம் காட்டுவதாக தோன்றுகிறது குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறார்களா என்று யோசிக்க வைக்கிறது. எனது மகளின் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளிலும் சுதந்திர தின விழாவில் கொடி ஏற்றப்படுவதை அதிகமான சிறுவர்கள் பார்க்கவேயில்லை. அவர்கள் நிகழ்ச்சியில் பங்கெடுப்பதாலும் திடீர் மழையாலும் அனைத்து சிறுவர்களையையும் பெற்றோர்களின் இருப்பில் கையாள்வதில் நிர்வாகத்திற்கு உள்ள சிக்கல்களாலும் என்று காரணங்கள் பல. ஏற்கனவே சொன்னதுப் போன்று எதுவாக இருந்தாலும் இழப்பு என்னமோ சிறுவர்களுக்கு தான். அடுத்து அந்த நிகழ்வுகளில் மேடையில் பேசும் சிறுவர்களின் உரை சிறுவர்களுக்கானதாகவே இருப்பதில்லை. பத்து வயது சிறுவருக்கு வயதிற்கு மீறிய கருத்துக்கள் கொண்ட உரையை தரப்படுகிறது. சுதந்திரம் பற்றின புரிதல் பத்து வயது சிறுவருக்கு என்னவாக இருக்கும், நாட்டின் சுதந்திரம் சார்ந்து ம‌னதில் உள்ளதை அப்படியே பகிர அனுமதித்திருந்தால் அந்த உரை எப்படி இருக்கும் என்று ஏன் பள்ளி நினைத்து பார்ப்பதில்லை என்ற கேள்வி எனக்கு எப்பொழுதும் உண்டு. பெரியோர்கள் தயாரித்து அதை மனனம் செய்து ஒப்பித்த சிறுவரின் உரையால் யாருக்கு என்ன கிடைக்கிறது. சிறுவர்களின் மனனம் செய்யும் திறனையும் மொழி உச்சரிப்பு திறனையும்  வேண்டுமானால் நினைத்து நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். பள்ளி நிகழ்வுகள் தான் சிறுவர்களின் நினைவுகளில் நீண்ட நாட்கள் வாழப்போகிற ஒன்று. கொஞ்சம் திட்டமிடலும் அக்கறையும் எடுத்துக் கொண்டால் போதும் இதனை அழகாக வடிவமைக்கலாம். சினிமா பாடல்கள் தாண்டி மத ஒற்றுமை என்று சொல்லி நாம் வழக்கமாக போடும் நாடகங்கள் தாண்டி குழந்தைகள் அனுபவிக்கும் நிகழ்வுகளை உருவாக்கிட முடியும்.

பேய் இருக்கா:
அந்தப் பள்ளியில் ஒரு விளையாட்டு நடந்தேறியது, அது பேய் விளையாட்டு. ஆம் சிறுவர்கள் சிலர் பேயாக வேடமிட்டு சுடுகாட்டில் ஒளிந்துக்கொள்கின்றனர். மற்ற சிறுவர்கள் தைரியமாக சுடுகாட்டிற்கு சென்று அங்கிருக்கும் பேய்களை பார்த்து வர வேண்டும். அதிகமான சிறுவர்கள் சுடுகாட்டிற்கு கிட்ட வரை சென்று தைரியமாக திரும்பிவிட்டனர், ஆனால் யாரும் பேயை கண்டுப்பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் பயந்திருந்த சிறுவர்கள் அவ்வளவு தூரம் சென்று வந்ததும் தைரியமாக இருந்தனர். பேய் பற்றின அவர்களின் பயம் இனி சற்று விலகியே இருக்கும் என்று அந்தப் புத்தகத்தின் பகுதி நகர்கிறது.
இந்த பேய் பயம் நமது சிறுவர்கள் மத்தியில் எப்படி இருக்கிறது. ஏதோ ஒரு பயம் சிறுவர்களுக்கு வேண்டுமென்று சொல்லியே பூச்சாண்டிக்கும் போலிசுக்கும் அல்லது ஏதோ ஒன்றிருக்கு வீட்டில் பயம் மூட்டி வைத்திருக்கின்றனர் பெற்றோர்கள் பலர். தற்பொழுது தொலைக்காட்சியின் மூலம் பேய் பற்றின பயம் சிறுவர்களுக்கு உருவாகிக்கொண்டிருக்கிறதை கவனிக்க முடிகிறது. அதிகமான சீரியல்கள் பேய்,ஜோசியம்,மந்திர சக்திகள் என்று பயணித்துக் கொண்டிருக்கிறது. சிறுவர்கள் எங்கு சீரியல்கள் பார்க்கிறார்கள் அப்படியே அவர்கள் பார்த்தாலும் இதெல்லாம் புரியாது என்று நினைத்தால் நமக்கு தெரிந்தது அவ்வளது தான். நிறைய சிறுவர்கள் சீரியல்களை தொடர்ந்து பார்க்கிறார்கள். டிவி நிகழ்ச்சிகளை பொறுத்தவரை பார்வையாளராக பெரியோரின் பார்வையும் சிறுவர்களின் பார்வையும் வேறுபடுகிறது. சிறுவர்களின் கவனிப்பு மேலோட்டமானது அல்ல. உலகம்,வாழ்வு பற்றின புரிதல்களை பார்ப்பதிலிருந்து அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். பெரியோர்கள் சீரியல்களை பார்க்குபோது அருகிலிருந்து பார்க்கும் சிறுவர்கள் அதிலிருந்து நிறைய விசயங்களை புரிந்துக்கொள்கிறார்கள். 5 வயது சிறுவர்களால் கூட சீரியல்களில் வரும் குடும்ப உறவுகளை தெள்ளத் தெளிவாக சொல்ல முடிகிறது. வேறு நாடகத்தில் அதே நடிகர்கள் வரும்போது அவர்களுடன் நடிக்கும் மற்றவர்கள் எங்கே என்று கேட்கிறார்கள். போலீஸ் என்றாலே அதில் நல்ல போலிஸ் கெட்ட போலிஸ் உண்டு என்று தான் சீரியல்கள் மூலம் புரிந்து வைத்திருக்கிறார்கள்.விஷம் கலந்து வரும் சீரியல்கள் பெரியர்களுக்கு வேண்டுமானால் பொழுதுபோக்கு என்று சொல்லிக்கொள்ளலாம் ஆனால் அது உண்மையில் சிறுவர்களின் உலகில் வேறு.
சமீபத்தில் வடநாட்டு சீரியல் குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் வகையில் காட்சிகள் இருந்ததால் நிறுத்தப்பட்டது. நமது தமிழக சீரியலின் போக்கு ஏற்கனவே கொடுமையாக இருக்கும் தற்பொழுது மரணக் கொடுமையாக இருக்கிறது. மூடநம்பிகைகளை வளர்க்கும் வண்ணம் காட்சிகளும் கதைகளும் நிறைந்துகிடக்கிறது. கருவை எப்படியெல்லாம் கலைப்பது என்பதை நமது சீரியல்களில் அழகாகவும் தெள்ளத் தெளிவாகவும் ஏதோ  ஒரு சானலில் எப்பொழுதும்  சொல்லிக்கொடுக்கிறார்கள். இறந்துப் போனதாக கருதப்படுப‌வர்கள் உயிரோடு தான் இருக்கிறார்கள் என்று ஜோசியர்கள் சரியாக சொல்லிவிடுகிறார்கள். ஏகப்பட்ட பேய் நாடகங்களும் ஏகப்பட்ட சாமி நாடகங்களும் (பெயரளவில் சாமி நாடகங்கள் என்று சொல்லிக்கொண்டு) பெருகிக்கொண்டே இருக்கிறது. இரண்டுமே நல்ல சமூகத்திற்கு தேவையானதா என்று சிந்திக்க வேண்டும். உண்மையில் பேய் என்று இந்த உலகில் ஏதாவது உண்டென்றால் அது டிவிப் பொட்டியாக தான் இருக்க வேண்டும்.

நன்றி:
டோட்டா சானின் அம்மாவின் புரிதல்கள்,ரயில் பட்டி ஒன்றை எடுத்து வரும் தினம் அன்று சிறுவர்கள் காத்திருந்தது,6 வயது சிறுமி தனியாக தினமும் பள்ளிக்கு ரயிலி வருவது,சூப் வைக்கும் நிகழ்வு,நிர்வாணமாக‌பள்ளியில் அனைத்து சிறுவர்களும் குளிப்பது,உடல் குறைபாடுள்ள சக நண்பன் பற்றியது என பேச வேண்டிய விசயங்கள் நிறைய இருந்தாலும் எனக்கு தற்பொழுது முக்கியமென தோன்றியதை மட்டுமே பகிர்ந்துள்ளேன். டோட்டோ சானின் வெற்றி என்பது நாம் ரெயில் வகுப்பறையை உருவாக்குவதில்லை , டோட்டோ சானுக்கு பள்ளியில் கிடைத்த அந்த உணர்வை அந்த மகிழ்வை அந்த அனுபத்தை நமது குழந்தைகளுக்கு ஏற்படுத்தவதில் தான் உள்ளது என்பதே எனது பார்வை.